அனைத்து ராசியினருக்கும் 2017ம் ஆண்டு புத்தாண்டுப் பலன்கள்!

அனைத்து ராசியினருக்கும், 2017ம் ஆண்டுக்கான புத்தாண்டுப் பலன்கள். கணித்திருப்பவர் ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர்.


ஆண்டின் முதல் தேதியில் எண் கணிதப்படி, 3 ஆக வருகிறது. 2017 ஆம் ஆண்டின் எண் 1 என்று வருகிறது. அதனால் 1 ஆம் எண்ணுக்குரிய சூரியபகவானும் 3 ஆம் எண்ணுக்குரிய குருபகவானும் இந்த புத்தாண்டில் முக்கியமானவர்களாக கருதப்பட வேண்டும்.

இவ்வாண்டு, குரு, சந்திர பகவான்களின் காரகத்துவங்கள் சிறப்பாக பரிமளிக்கும் என்று கூறலாம். குருபகவானின் அருளால் இந்த ஆண்டு நீதி, நிர்வாகம் ஏற்றமளிக்கும். புதிய மாற்றங்களும் மக்களுக்கு நிரந்தர நன்மை கிடைக்கும் விதத்தில் அமையும். மேலும் ஆன்மிகம் யோகம் போன்றவைகளும் புகழ் பெறும்.

ஆங்கிலப் புத்தாண்டு (1.1.2017) சனிக்கிழமை இரவு ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை கன்னி லக்னம், சுக்கிர ஹோரையில் பிறக்கிறது.

மேஷம்
(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். யூகசக்தி பரிமளிக்கும்.

மற்றவர்களின் எண்ணங்களை முகத்தைப் பார்த்தே புரிந்து கொள்வீர்கள். உற்றார் உறவினர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். செய்தொழிலில் நல்ல முறையில் செயல்படுவீர்கள். இந்த காலகட்டத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எதிரிகளை அவர்களின் வழியிலேயே சென்று திருத்துவீர்கள். அறிவுப்பூர்வமான ஆலோசனைகளை எவர் வழங்கினாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெறுவீர்கள். சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த நிம்மதியற்ற சூழ்நிலை மாறி மகிழ்ச்சி குடிகொள்ளும். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்பி வருவார்கள். ரகசியங்களை எச்சரிக்கையுடன் இருந்து அடுத்தவர்களுக்குத் தெரியாமல் காப்பாற்றுவீர்கள். வெளியில் கொடுத்திருந்த பணத்தை வசூலிக்க கஷ்டப்பட வேண்டியிருக்கும். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்புகள் வரத் தாமதமாகும். செயல்களில் வேகத்தைக் குறைத்துக்கொண்டு விவேகத்தைக் கூட்டிக் கொள்வீர்கள். பங்கு சந்தைகளில் ஈடுபட வேண்டாம். உடல் ஆரோக்கியம் மேம்பட யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள்.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் புதுப்பொலிவு உண்டாகும். செய்தொழிலில் இருந்த சறுக்கல்கள் விலகி படிப்படியாக உயர்வைக் காண்பீர்கள். வருமானத்திற்குத் தடையாக இருந்த விஷயங்கள் தானாகவே விலகிவிடும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தானாகவே தேடி வரும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். இதன்மூலம் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். நேர்முக மறைமுக போட்டிகளும் தானாகவே ஓய்ந்து விடும். நடக்காது என்று நினைத்திருந்த செயல்கள் திடீரென்று நடந்தேறும். உற்றார் உறவினர்களின் வருகையால் நன்மைகள் உண்டாகும் வீட்டிலும் வெளியிலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நடையிலும் ஒரு புதிய மிடுக்கு உண்டாகும். தொட்டது துலங்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் இந்த புத்தாண்டில் மேலதிகாரிகளின் அபரிமிதமான பாராட்டு மழையில் நனைவார்கள். ஆவலுடன் எதிர்பார்த்த பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் நெருக்கம் அதிகமாகும். அரசு ஊழியர்களுடன் சுற்றுலா சென்று வருவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் வகையில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். வியாபாரத்தில் போட்டியிருந்தாலும் முடிவு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். வருமானம் சிறப்பாக இருப்பதால் வண்டி வாகனங்கள் வாங்கி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். லாபத்தைச் சேர்த்து வருங்காலம் வளமாக அமைவதற்கு அடித்தளம் போடுவீர்கள். கால்நடை கோழி முட்டை வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றம் கூடும்.

அரசியல்வாதிகள் மனச்சோர்வு நீங்கி எதையும் சாதிக்கும் அளவுக்குத் தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். புதிய பதவியில் அமர்ந்து சமுதாயத்திற்கு தொண்டாற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் பல கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வருமானமும் படிப்படியாக உயரும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை மேலோங்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். தாய்வீட்டுச் சீதனம், பூர்வீகச் சொத்து ஆகியவை கிடைக்க வாய்ப்புண்டு. மாணவமணிகளுக்கு இந்த ஆண்டு மிகவும் சாதகமாக அமைகிறது. தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவார்கள். நண்பர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு உகந்தது.

***

ரிஷபம்
(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் முடிய)

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எதிர்பார்த்த மாற்றங்களைக் காண்பீர்கள். உங்களை வாட்டி வதைத்து வந்த விரக்தி மனப்பான்மை விலகி விடும். மனதிலிருந்த கலக்கங்கள் மறைந்து தெளிவு குடிகொள்ளும். மனதில் இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கி முன்னேறுவீர்கள். ஒரே இடத்தில் உழன்று கொண்டிருந்தவர்கள் சுறுசுறுப்பாக பல இடங்களுக்கும் பயணப்பட்டு தொழிலை மேம்படுத்துவார்கள். எதிர்பாராத வாய்ப்புகளையும் பெறுவீர்கள். போட்டியாளர்கள் விலகிவிடுவர். பணவரவில் தடைகளோ பொருளாதாரத்தில் கஷ்டங்களோ ஏற்படாது. நண்பர்கள் தேடிவந்து உதவி செய்வார்கள். கொடுத்த வாக்குறுதிகளை சுலபமாக நிறைவேற்றுவீர்கள். இல்லத்திற்கு தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். குழந்தைகளால் பெருமை உண்டு. அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். பொதுநலக் காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். வழக்குகளில் வெற்றியுண்டு. அதிகார பதவிகளில் இருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செயல்களை முடிக்க கடினமாக உழைக்க வேண்டி வரும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் பாகப் பிரிவினை தாமதமாகும். உடன்பிறந்தோரும் சற்று பாராமுகமாகவே இருப்பார்கள். புதிய மாற்றங்கள் மனதிற்கு வருத்தமளிக்கும். உடலில் சிறு சோம்பல் குடிகொள்ளும். மந்தமாக காணப்படுவீர்கள். எவருக்கும் வாக்குக் கொடுக்கும்முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொடுக்கவும். அனைத்து மாற்றங்களிலும் ஓர் அதிர்ஷ்டகரமான புதிய வாய்ப்பு புதைந்திருக்கும். ஆன்மிக தர்மகாரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலர் புதிய இடங்களுக்கும் மாற்றலாகிச் சென்று செய்தொழிலை விரிவுபடுத்துவார்கள். காரணம் புரியாமல் மனதில் ஒரு கலக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளில் பளு குறைந்து காணப்படும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். சில சிறப்புச் சலுகைகளும் கிடைக்கும். உத்தியோக விஷயமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதால் மகிழ்ச்சியும் லாபமும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கமிஷன் ஏஜன்ஸி துறைகள் மூலம் லாபம் அதிகரிக்கும். வாராக் கடன் என்று நினைத்திருந்தவைகளும் வசூலாகும் ஆண்டாகும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். கொள்முதல் லாபம் அதிகரிக்கும். கால்நடைகளாலும் லாபங்கள் உண்டாகும். வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாகும்.

அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு திருப்திகரமான ஆண்டாகும். உங்களின் சுயஜாதகம் பலம் பெற்று இருக்கும்பட்சத்தில் எட்டாக் கனியாக இருக்கும் அமைச்சர் போன்ற பதவிகள் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் கிடைக்கும். எதிரிகள் உங்களிடமிருந்து விலகியே இருப்பார்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். எதிர்பார்த்த புகழ், பணவரவுண்டு. ரசிகர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்களும் தேடிவரும். பெண்மணிகளுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவு குறையும். அவ்வப்போது தலைகாட்டிய பிரச்னை ஒன்று முழுமையாகத் தீர்ந்துவிடும். கணவரின் ஆதரவும் முழுமையாகக் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். மாணவமணிகளுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். முதலிடம் பெறுவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். விளையாட்டுகளில் சாதனை புரிவீர்கள்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

***

மிதுனம்
(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் முடிய)

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உடல்நலம் சீராகத் தொடங்கும். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் உதவி செய்வீர்கள். அவர்களின் உதவிகளையும் பெறுவீர்கள். விருந்து கேளிக்கைகளிலும் கலந்து கொள்வீர்கள். செய்தொழிலை திறம்பட நடத்துவீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். மதிப்பு மரியாதை உயரும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை அனுசரித்துச் செல்லவும். சிலர் அசையாச் சொத்துக்களை வாங்குவார்கள். சிலருக்கு வசதியான வீட்டுக்கு மாறும் யோகமும் உண்டாகும். புதியவர்களிடம் எச்சரிக்கையாகப் பழகவும். குழந்தைகளையும் அவர்களின் வழியிலேயே சென்று திருத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கடனில் சிக்கிக்கொள்ள நேரிடலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தள்ளிப்போடவும். மனதில் இருந்த சோர்வுகள் அகலும். அறிவுப்பூர்வமான விஷயங்களில் விழிப்புணர்ச்சி உண்டாகும். உடன்பிறந்தோரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அறிவாற்றலும் புத்திசாலித்தனமும் கூடும். பணவரவுக்கு தடை வராது. புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். நெடுநாளாகத் தள்ளிப்போட்டிருந்த குலதெய்வ வழிபாட்டினை இந்த காலகட்டத்தில் செய்வீர்கள்.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் நண்பர்களுக்கு கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். வருமானம் படிப்படியாக உயரும். இல்லத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். தேக ஆரோக்கியம் மேம்பட தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள். செய்தொழிலில் சட்ட திட்டங்களை உருவாக்கி அதன்படி நடப்பீர்கள். புதிய வீடு வாங்கும் யோகத்தையும் பெறுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புகளையும் வலுப்படுத்திக் கொள்வீர்கள். எதிரிகளை ஒடுக்கும் வல்லமை உண்டாகும். சிறுதுரும்பும் பல்குத்த உதவும் என்கிற ரீதியில் பழமொழியை மனதில் வைத்துக் கொண்டு சக பணியாளர்களிடம் நடந்து கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது.
 

உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைத்துப் பொருளீட்ட வேண்டிய ஆண்டாகும். அவ்வப்போது மேலதிகாரிகளின் தொந்தரவுகளுக்கு ஆளாவீர்கள். கொடுக்கப்பட்ட வேலைகளை கவனமாகச் செய்து வந்தால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். சிலருக்கு வருடாந்திர ஊதிய உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு இருப்பதால் உங்களின் மனச்சுமையை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். வியாபாரிகள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அதற்குத் தகுந்த பலனைப் பெற முடியாது. கொடுக்கல் வாங்கல்கள் சுமாராகவே இருந்து வரும். கூட்டாளிகளின் சூழ்ச்சிக்கு ஆளாக வாய்ப்பு இருப்பதால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். விவசாயிகள் செலவுகளைக் குறைத்து வரவுகளைப் பெருக்கிக் கொள்ளவும். கால்நடைகளின் மூலம் சிறிது நன்மைகள் ஏற்படும். புதிய முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம்.

அரசியல்வாதிகள் மன சஞ்சலத்துடன் செயலாற்றுவீர்கள். கட்சி மேலிடத்தின் அவநம்பிக்கைக்கு ஆளாகி சிறிய தண்டனைகளையும் பெறுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு சற்று குறைய வாய்ப்பு உண்டாகலாம். கலைத்துறையினர் நிதானமான வளர்ச்சி அடைவார்கள். வருமானமும் படிப்படியாகத்தான் கூடும். நன்கு பரிசீலித்த பிறகே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும். ஏனென்றால் ஏதேனும் சிக்கல்கள் உருவாகலாம். எச்சரிக்கைத் தேவை. பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இராது. வீண் பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு அவதிப்பட வேண்டாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மாணவமணிகள் அதிக சிரத்தை  எடுத்து படித்தால்தான் வெற்றியடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். தேவையான உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு உகந்தது.

****

கடகம்
(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் பிரச்னைகள் குறையும். நிதானமாகவும் பொறுமையுடனும் பணியாற்றுவீர்கள். வேலைகளை நண்பர்கள் உதவியுடன் வெற்றியுடன் முடித்துவிடுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். எதிரிகளை ஒடுக்கும் வல்லமையை பெறுவீர்கள். குடும்பத்தில் பகைமை மறைந்து இணக்கம் சூழும். மனதில் இருந்த குழப்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு செயல்களில் அக்கறை காட்டுவீர்கள். சிறிய மீனைப்போட்டு பெரிய மீனைப் பிடிப்பீர்கள். பிரச்னைகளிலிருந்து பின்வாங்காமல் கடினமாகப் போராடி வெற்றி பெறுவீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகள் தேடிவரும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களுக்குத் தக்க ஆலோசனைகளையும் வழங்குவீர்கள். வெளிநாடு சம்பந்தமான விஷயங்கள் ஆக்கம் தரும். குடும்பத்தில் சுப காரியங்களைச் சிறப்பாக நடத்துவீர்கள். ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
 
செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் சிறிய அளவு முயற்சிகளிலும் பெரிய அளவுக்கு வெற்றி காண்பீர்கள். செய்தொழிலில் போட்டி பொறாமைகள் இருந்தாலும் அவைகள் உங்களை பாதிக்காது. சிலருக்கு வசிக்கும் இடத்தைவிட்டு வேறு இடத்திற்கு மாறும் யோகமும் உண்டாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். நண்பர்களின் பேச்சில் உள்ள உள்ளர்த்தங்களுக்கு ஏற்ப நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வீர்கள். நன்றாக சிந்தித்து தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நெடுநாளைய கனவு ஒன்று பலிக்கும். குழந்தை இல்லாதோருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கடன் தொல்லை இராது. அனைத்து காரியங்களையும் உடனுக்குடன் முடித்துவிடுவீர்கள். முட்டுக்கட்டைகளைத் தகர்த்து விடுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். புதிய நிலங்கள் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்துக்களிலிருந்த பிரச்னைகள் தீர்ந்து சுமுகமான பாகப்பிரிவினை நடக்கும். இந்த காலகட்டத்தில் எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தருவதோ, முன்ஜாமீன் போடுவதோ கூடாது.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு விரும்பிய இடமாற்றம் போன்றவை கிடைக்க வாய்ப்புண்டாகும். சக ஊழியர்கள் உங்களை அனுசரித்துச் செல்வதால் மேலதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பீர்கள். அலுவலக வேலை விஷயமாக நீங்கள் செய்யும் பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரிகள் தற்போது செய்து வரும் வியாபாரத்தை சிறப்பாக நடத்தினாலே போதும் என்கிற நிலைமை இருக்கும். நண்பர்களை பெரிதாக நம்பி எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். கையிலிருக்கும் பணத்தை எடுத்து புதிய முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காது. கால் நடைகளும் எதிர்பார்த்த வருமானத்தைத் தராமல் போகலாம். உழைப்புக்கேற்ற பலன்களும் கிடைக்காமல் போகலாம்.
 

அரசியல்வாதிகள் எதையும் அவரசப்பட்டு பேசியோ, செய்தோ வீண் விவகாரங்களில் மாட்டிக்கொள்ள வேண்டாம். பெரிய பதவிகள் திடீரென்று தேடி வந்தாலும் அவற்றில் வெகு நாள்களுக்குத் தாக்கு பிடிக்க முடியாது. கலைத் துறையினருக்கு இருக்கும் ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதே பெரிய விஷயமாகிவிடும் சக கலைஞர்களும் உதவியாக இருக்கமாட்டார்கள். கடினமான முயற்சிகளுக்குப் பிறகே எண்ணங்கள் நிறைவேறும். பெண்மணிகள் கணவரிடம் கொண்டுள்ள நெருக்கத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எதிலும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் தடை ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே கவனம் தேவை. எச்சரிக்கையுடன் கூடுதல் முயற்சியுடன் படிக்கவும்.

பரிகாரம்: அனுமனை வழிபட்டு வரவும்.

***

சிம்மம்
(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
 

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் தீராத பிரச்னையாக இருந்த விஷயம் தீர்ந்து விடும். எதிர்காலத்திற்காகப் போடும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறக் காண்பீர்கள். போட்டியாளர்களின் சதிகளை புதிய யுக்திகளை மேற்கொண்டு தகர்ப்பீர்கள். பூர்வீகச்சொத்து சம்பந்தமாக பங்காளிகள் கொடுத்திருந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வரும். வருமானமும் படிப்படியாக உயரத்தொடங்கும். மனதிற்கினிய பயணங்களை குடும்பத்துடன் மேற்கொள்வீர்கள். குழந்தைகள் உங்கள் பேச்சிற்கு கட்டுப்பட மாட்டார்கள். அதனால் அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை நல்வழிப் படுத்தவும். மேலும் அனாவசியக் கடன்களையும் வாங்க வேண்டாம். கிடைத்தற்கரிய சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். மேலும் புதிய வாய்ப்புகளையும் நழுவ விடமாட்டீர்கள். இல்லத்தில் திருமணம், குழந்தை பாக்கியம் ஆகிய இரண்டும் கைகூடும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். மேலும் உங்கள் தைரியம் பளிச்சிடும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு உயரும். உடல் ஆரோக்கியம் மற்றும் மனவளம் சிறப்பாக இருக்கும். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். நவீன ஆராய்ச்சிகளிலும் மனம் ஈடுபடும்.  

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் தன்னம்பிக்கையுடன் சோதனைகளை கடந்து வெற்றிவாகை சூடுவீர்கள். சிறிய விஷயங்களையும் பெரிதாகப் பேசும் நண்பர்களை விலக்கி விடுவீர்கள். ரகசியங்களை பிறர் அறியாவண்ணம் காப்பீர்கள். செயல்களை குறுக்கு வழிகளைத் தவிர்த்து நேர் வழியிலேயே செய்வீர்கள். கடினமான விஷயங்களிலும் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பீர்கள். உங்களின்கீழ் வேலை செய்பவர்கள் செய்யும் தவறுகளை கண்டுகொள்ள மாட்டீர்கள். தாய்வழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். துணிச்சலாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அனைத்து விஷயங்களையும் அனுபவ ரீதியாக அணுகுவீர்கள். வீடு மற்றும் வாகனங்களுக்கு பராமரிப்புச் செலவுகள் செய்ய வேண்டி வரும். உடன்பிறந்தோர் முழுமையான ஆதரவு தரமாட்டார்கள். அவர்களுக்காக சிறிது செலவு செய்யவும் நேரிடும். கடன் வாங்கக் கூடிய நிலைமைகள் ஏற்பட்டால் தேவைக்கு மட்டுமே வாங்கவும். குழப்பங்களைத் தவிர்க்க தலைமையை நாடுவீர்கள். தியானம், பிராணாயாமம் போன்றவைகளையும் கற்றுக்கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது.


உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட பணிகளை உடனுக்குடன் முடிக்கும் சூழ்நிலை உருவாகும். மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வும் தடையில்லாமல் கிடைக்கும். வருமானம் வளரத்தொடங்கும். சிறிய உழைப்பில் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். விழிப்புடன் இருந்து காரியமாற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வியாபாரிகள் போதிய அக்கறை செலுத்தி வியாபாரத்தைப் பெருக்கவும். வியாபாரத்தில் எந்த முடிவையும் கூட்டாளிகளிடம் ஆலோசித்த பின்னரே எடுக்கவும். இல்லையெனில் சட்டச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால் அதிக செலவுகள் ஏற்படும். கால்நடைகளால் பெரிய லாபத்தை எதிர்பார்க்க முடியாது. பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு சில நேரங்களில் கிடைக்கும். அதனால் கட்சி மேலிடத்திற்கு தகவல் அனுப்பும்போது அவர்களது எண்ணங்களை அறிந்து எச்சரிக்கையுடன் அனுப்பவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்ங்களைப் பெறுவதில் சற்று சிரமம் இருக்கும். அனைத்தையும் போராடியே பெறவேண்டி இருக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவு உற்சாகம் தரும். பெண்மணிகளுக்கு முன்பிருந்த அனைத்துக் குழப்பங்களும் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலையை காண்பார்கள். திருமணமாகாத பெண்களுக்கு இந்த ஆண்டு திருமணம் கைகூடும். குழந்தைபாக்கியத்திற்குத் தவம் கிடந்தவர்கள் அந்த வாய்ப்பினைப் பெறுவார்கள். மாணவமணிகள் கல்வியில் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற மதிப்பெண்களை அள்ளலாம். விளையாடும் நேரத்தில் காயம் படாமல் இருக்க, கவனத்துடன் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும்.

••••

கன்னி
(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

 

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நல்லவர்களின் நட்பு தேடி வரும். அவர்களால் பழைய சிக்கல்கள் தீர்ந்துவிடும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் உதவிகளைப் பெற்று நலமடைவார்கள். பொருளாதார நிலை உயரும். அரசு அதிகாரிகள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிலும் சிந்தித்து நல்ல முறையில் செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும்முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுக்கவும். தெய்வ காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். நெடுநாளாக நடக்காமல் இருந்த பாகப்பிரிவினை சுமுகமாக நடக்கும். உங்கள் மனதில் தன்னம்பிக்கை குடிகொள்ளும். உங்களுக்கு உறுதுணையாக நண்பர்களைச் சேர்த்துக் கொள்வீர்கள். வாழ்க்கையில் புதிய சூழ்நிலைக்கு உங்களை பழக்கப்படுத்திக் கொள்வீர்கள். அனைத்து விஷயங்களையும் நடைமுறைக்கு ஏற்றவாறு பார்ப்பதால் கஷ்டங்கள் எதையும் சந்திக்க மாட்டீர்கள். நீண்டகால லட்சியங்கள் கனவுகள் நிறைவேற அடித்தளம் அமைத்துக் கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எதிர்பாராத பணவரவு கிடைக்கும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு எதுவும் உண்டாகாது. செய்தொழில் விறுவிறுப்பாக நடக்கும். புதிய முயற்சிகளை சிறப்பாக செயல்படுத்துவீர்கள். அனைத்து புதிய வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்வீர்கள். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்தும் கௌரவமும் உயரும். பெற்றோரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும்.பிள்ளைகள் சொல்பேச்சு கேட்டு நடப்பர். போட்டியாளர்களின் தொந்தரவுகள் மறையும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். ஆலய திருப்பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். பங்குவர்த்தகத்தின் மூலமும் லாபம் வரக்காண்பீர்கள். புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள். குறிக்கோள்களை அடைவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். நெடுநாளாக விற்க முடியாமல் கஷ்டப்பட்ட நிலம் இந்த காலகட்டத்தில் நல்ல விலைக்கு விற்கும். மனதில் தெளிவான சிந்தனைகள் பிறக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கணக்கு வழக்குகளை சரியாகச் சமர்ப்பிக்கவும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். பழைய கடன்களையும் முழுமையாக திருப்பிச் செலுத்தி விடுவீர்கள் என்றால் மிகையாது.


உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சரியாகச் செய்தாலும் செய்யாத தவறுகளுக்காக மேலதிகாரிகளின் கண்டனத்திற்கு ஆளாவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு வாய்ப்புகள் நழுவிப்போகலாம். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரிகள் அதிகமாக விற்பனை செய்தும் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியாமல் போகும். சிலருக்கு நண்பர்களுடன் பகை ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. தற்சமயம் நடத்திவரும் தொழிலை அக்கறை மற்றும் பொறுமையுடன் செய்வது நல்லது. கடன் கொடுத்து வியாபாரத்தை பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவு விளைச்சல் இருக்காது. ஆகவே கடன் வாங்குவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். கால்நடைகளுக்கு நோய் பாதிப்பும் அதனால் மருத்துவச்
செலவும் உண்டாகும்.

அரசியல்வாதிகள் பெரிய அளவிலான பதவிகளைப் பெற வாய்ப்பு இருக்காது. இந்த ஆண்டு கட்சி மேலிடத்தின் பார்வையிலிருந்து ஒதுங்கி நின்று செயல்படவும். எந்த முடிவையும் தீவிரமாக ஆலோசித்து எடுத்தால் கெட்டப்பெயர் ஏற்படாமல் தப்பிக்கலாம். கலைத்துறையினருக்கு சிறப்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அனைத்து தடைகளையும் திறமையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். திறமைகளுக்கு தக்க அங்கீகாரம் கிடைக்கும். பெண்மணிகள் கணவரிடம் பாராட்டுகளைப் பெறுவார்கள். ஆடை ஆபரணங்களையும் வாங்குவார்கள். மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படித்தால் எதிர்பார்த்த பலனை அடையலாம். நண்பர்களால் பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியரை வழிபட்டு வரவும்.

•••

துலாம்
(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

 

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்கு வலிய சென்று உதவி செய்வீர்கள். இதனால் பகைமை பாராட்டுபவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். உங்கள் பேச்சாற்றல் கூடும். வருமானம் படிப்படியாக உயரும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் தேடிவரும். கடின உழைப்பை மேற்கொண்டாலும் தேவையான ஓய்வெடுத்துக் கொள்வீர்கள்.

அறிமுகமில்லாதோரின் ஆதரவும் நன்மைகளைத் தேடித்தரும். செய்தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். உங்கள் செல்வாக்கும் உயரும். வம்பு வழக்குகள் சாதகமான முடிவுக்கு வரும். உடன்பிறந்தோர் கோபப்பட்டாலும் நீங்கள் பொறுமையை கடைப்பிடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. செயல்களை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல ஆற்றல் உண்டாகும். சிறிது சிரமங்களுக்குப்பிறகு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் புதிய அனுபவங்களையும் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்களுக்கென தனியான இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குடும்ப குழப்பங்களைத் தீர்க்க, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பயன்படும். பழைய விட்டுப்போன உறவுகளைப் புதுப்பித்து உங்கள் கௌரவம் உயரக் காண்பீர்கள். செய்தொழிலை மேம்படுத்த அடிக்கடி பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். அனைத்துச் செயல்களிலும் மனத் தைரியமும் உறுதியான சிந்தனைகளும் உருவாகும். உங்கள் முயற்சிகளில் பங்கு கொள்ள பலர் முன்வருவார்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களும் பணிவாக நடந்து கொள்வார்கள். உடல் நலமும் மேன்மையாகவே இருக்கும். யோகா பிரணாயாமம் போன்றவற்றையும் கற்றுக்கொள்வீர்கள். தடைபட்டிருந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். களவு போயிருந்த பொருள்களும் திரும்பக் கிடைக்கும். தீயவர்களின் சகவாசத்தை விலக்கி விடுவீர்கள். எந்த விஷயத்திலும் அவசரம் வேண்டாம்.



தாழ்வுமனப்பான்மையை தவிர்த்து விடுங்கள். எவருடனும் வீண் விவாதமோ, வாக்குவாதமோ வேண்டாம். எவருக்கும் இந்த காலகட்டத்தில் கடன் கொடுக்க வேண்டாம். அதோடு உங்கள் பெயரிலும் பணம் வாங்கிக் கொடுக்கக் கூடாது.  
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்க சற்று அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைப்பதால் வேலைப்பளு சற்று குறையும். கோரிக்கைகள் நல்லபடியாக நிறைவேறும். இந்த ஆண்டு இடமாற்ற முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் பணப்பிரச்னையும் மனக்கஷ்டமும் அடைவார்கள். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். வெளியிலிருந்து வரக்கூடிய பணம் விஷயமாக சற்று சிரமம் இருக்கும். கடன் வாங்காமல் தொழிலில் சிக்கனம் கடைப்பிடிக்கவும். விவசாயிகளுக்கு விளைச்சல் எதிர்பார்த்த அளவு இருக்காது. கால்நடைகளும் எதிர்பார்த்த வருமானத்தைத் தராமல் போகலாம். பழைய குத்தகைகளைச் சரிவர முடித்து அதற்கான லாபத்தைப் பெறுவதே சிறப்பு. சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கத் தாமதமாகும். அதனால் யாரையும் நம்பி எந்த வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம். உங்கள் பணிகளை மற்றவர்கள் செய்யும்போதும் கவனமுடனிருங்கள். கலைத்துறையினருக்கு இந்த ஆண்டு சற்று ஆறுதலைக் கொடுத்தாலும் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டிருக்கும். உடல் ஆரோக்கியம் சீர்படும். சக கலைஞர்கள் மூலம் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பெண்மணிகள் திருமணம், வேலை, குழந்தைப்பேறு என்று எல்லா நிலைகளிலும் சிறிது காலம் சிரமத்தைக் காண்பார்கள். பேசும்போது சுமுகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி வீண்பழி மற்றும் கெட்ட பெயர் ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள். மாணவமணிகள் கல்வியில் அதிக அக்கறை செலுத்தவும். எந்த பாடத்தையும் பலமுறை படித்து மனப்பாடம் செய்யவும்.

பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும்.

•••

விருச்சிகம்
(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய
)

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சோம்பலின்றி சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். எதிரிகளின் கை தாழ்ந்து உங்கள் கை உயரும். உங்கள் காரியங்கள் அனைத்தும் நன்மையாகவே முடிவடையும். உங்களை ஒதுக்கி வைத்தவர்கள் மறுபடியும் உங்களிடம் வந்து சேர்வார்கள். நண்பர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் பக்குவமாகப் பேசி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். "கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் செயல்களில் கவனம் சிதறாமல் செயல்படுவீர்கள். வெளியிடங்களில் கௌரவமாக நடத்தப்படுவீர்கள். அந்தஸ்து உயரும்படியான சம்பவங்கள் நடக்கும். உடல்நலமும் மனநலமும் சீராக இருக்கும். நெடுநாளாக வாட்டி வதைத்துக் கொண்டிருந்த வியாதிகள் முழுவதுமாகத் தீர்ந்து விடும். வருமானம் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும். மிகவும் நலிந்தவர்களுக்கு பணஉதவி செய்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வ காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். குலதெய்வ வழிபாட்டையும் இந்த காலகட்டத்தில் மேற்கொள்வீர்கள். குழந்தைகளின் வளர்ச்சியும் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே இருக்கும்.  



செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எதிலும் விழிப்புடன் செயல்படுவது நல்லது. நண்பர்கள் உற்றார் உறவினர்களாலும் சில பிரச்னைகள் ஏற்படும். அதனால் அவர்களிடம் கூடிய வரை வீண் சர்ச்சைகளையும் வாக்குவாதங்களையும் தவிர்த்து நேசத்துடன் பழகவும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். உழைப்பைக் கூட்டிக்கொள்ளுங்கள். உங்கள் உழைப்பு வீண் போகாது. நல்ல நெறிமுறைகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும். எதிலும் வேகத்தைக் குறைத்துக் கொள்வதோடு விவேகத்தையும் கூட்டிக் கொண்டு செயல்பட்டால் தோல்விகளையும் தவிர்த்து வெற்றிகளைக் காணலாம். சிலருக்கு குடும்பத்தில் சற்று கூடுதலான அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். கண், வயிறு போன்றவற்றில் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குழப்பங்களையும் சஞ்சலங்களையும் தவிர்க்க தனிமையை நாடுவீர்கள். சமயோசித புத்தியால் எதிர்வரும் இடையூறுகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்திலும் சுபச் செலவுகளைச் செய்வீர்கள். உங்கள் செயல்களை தகுந்த முறையில் திட்டமிட்டு கச்சிதமாக முடிக்க முயற்சி செய்யவும். வீடு மனை போன்ற ஸ்திர சொத்துக்களை வாங்குவதையும் தள்ளி வைக்கவும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை முழுமையாகச் செய்து முடிக்க முயற்சி செய்யவும். மேலதிகாரிகளின் வெறுப்புகளுக்கு ஆளாகாமல் தப்பிப்பீர்கள். பிரச்னைகளும் தடைகளும் வராமல் இருக்க சற்று ஒதுங்கியே இருக்கவும். பணியாற்றும் நேரத்தில் பொறுமை தேவை. அத்தியாவசியப் பயணங்களை மட்டுமே மேற்கொள்ளவும். சக ஊழியர்களை பெரிதாக நம்ப வேண்டாம். வியாபாரிகள் போதிய அக்கறை செலுத்தி வியாபாரம் செய்வர். எந்த முடிவுகளையும் கூட்டாளிகளை கலந்தாலோசித்த பின்னரே எடுக்கவும். வெற்றிகள் தாமதமாக வரும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்களைச் செயல்படுத்துங்கள். விவசாயிகள் உடலாரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். கால்நடை பராமரிப்புகளுக்காக செலவுகள் செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சில நேரங்களில் கட்சித் தலைமையின் ஆதரவு கிடைக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். எதிரிகளின் ரகசியங்களை அறிந்து கொள்வதில் காலதாமதம் ஏற்படும். இதனால் சில இடையூறுகளும் உண்டாகும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதோ முன்ஜாமீன் போடுவதோ கூடாது. கலைத்துறையினரின் பெயரும் புகழும் அதிகரிக்கும். நல்ல பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கடுமையாக உழைக்கவும். புதிய ஒப்பந்தங்கள் தானாகவே கிடைக்கும். பல நாள்களாக வராமலிருந்த தொகை தற்போது கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்திற்காக விட்டுக்கொடுத்து நடந்துகொள்வர். குடும்ப விஷயங்களில் யோசித்து நடந்துகொள்ளவும். பிறருடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை பெறுவர். பெற்றோர், ஆசிரியரின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சோம்பேறித்தனத்தை விட்டொழித்து சுறுசுறுப்பாக பாணியாற்றுவீர்கள். விளையாட்டுகளில் சாதனை செய்வீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும்.

•••

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் மனோபலம் கூடும். தைரியமாகவும் துணிச்சலாகவும் உங்கள் காரியங்களைச் செய்யத் தொடங்குவீர்கள். சிலர் விசாலமான வீட்டிற்குக் குடிபெயருவார்கள். சமுதாயத்தில் மதிப்பு வாய்ந்த பொறுப்புகள் கிடைக்கும். உங்கள் வார்த்தைகளுக்கு வீட்டிலும் வெளியிலும் மதிப்புண்டாகும். தொலை தூர தொடர்புகளில் ஆதாயங்களைப் பெறுவீர்கள். தத்துவ அறிவு பலப்படும். நண்பர்கள் உற்றார் உறவினர்களுக்கு நீங்கள் உதவிகளைச் செய்வீர்கள். பொருளாதாரம் சீராக இருந்தாலும் சிறிய எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விலகிச் சென்றிருந்த உறவினர்கள் திரும்பி வருவார்கள். பழைய சம்பவங்களை மறந்து ஏற்றுக் கொள்வீர்கள். ஆன்மிகத்திலும் இறைவழிபாட்டிலும் மனதைச் செலுத்துவீர்கள். இந்த காலத்தில் எவரிடமும் வெளிப்படையாகப் பழக வேண்டாம். அடுத்தவர்களை சரியாக எடை போடுவீர்கள். அரசு விவகாரங்களில் அனுகூலமான போக்கைக் காண்பீர்கள். வழக்கு விவகாரங்களிலிருந்து சற்று விலகி இருக்கவும். குழந்தைகளின் முன்னேற்றத்திற்குத் தடையிராது. நீண்டகால எண்ணம் ஒன்று நிறைவேற இந்த காலகட்டத்தில் அடித்தளமிடுவீர்கள்.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் வாழ்வில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு விடும். பொருளாதார வசதிகள் உங்களைத் தேடிவரும். அதிர்ஷ்ட தேவதையின் கடைக்கண் பார்வை உங்கள்மீது சற்று கூடுதலாக விழும். நினைத்த காரியங்கள் குறித்த நேரத்தில் தாமதமின்றி நடந்தேறும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். தொடர்ந்து வியாதியால் அவதிப்பட்டவர்கள் அதிலிருந்து வீழ்வார்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். குடும்பத்தாருடன் சுற்றுலாவுக்கு சென்று வருவீர்கள். உங்களை ஒதுக்கி வைத்திருந்தவர்கள் தாங்களாகவே நேசக்கரம் நீட்டுவார்கள். சொந்தபந்தங்களை நீங்களும் பலப்படுத்திக் கொள்வீர்கள். புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளும் நடக்கும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தவறு செய்யும் நண்பர்களையும் அரவணைத்துச் சென்று திருத்திவிடுவீர்கள். குழந்தைகளை பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்துவீர்கள். சமுதாயத்தில் முக்கியத்துவம் அதிகரிக்கும். முக்கிய பிரதிநிதித்துவங்களையும் பெற்று பாராட்டுகளும் கிடைக்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு வருமானம் மளமளவென்று உயரத் தொடங்கும். நெடுநாள்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வும் உங்களைத் தேடிவரும். சக ஊழியர்களின் நட்பும் ஆதரவும் கிடைப்பதால் சிறுசிறு தவறுகள் அமுங்கிப்போய்விடும். வேலைகளை திட்டமிட்டுச் செய்வீர்கள். வியாபாரிகள் எந்தப் போட்டியுமின்றி வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் எந்தச் சிக்கலும் வராது. வசதிகளும் பெருகும். புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்கி லாபத்தை அள்ளுவீர்கள். வண்டி வாகனம் வாங்கும் ஆண்டாக அமைகிறது. விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகி லாபம் அதிகரிக்கும். கால்நடைகளின் மூலம் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். வெகு நாள்களாகத் தள்ளிப் போட்டிருந்த ஸ்திரச்சொத்துகள் வாங்கும் திட்டம் கைகூடும். புதிய கழனிகளில் வித்தியாசமாக விவசாயம் செய்து மகசூலை அள்ளுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு தொல்லை கொடுத்து வந்த எதிரிகளின் பலம் குறையும். அவர்கள் உங்களிடமிருந்து விலகியே நிற்பார்கள். கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கட்சி மேலிடம் அளிக்கும் பணிகளைச் செவ்வனே முடித்து பாராட்டைப் பெறுவீர்கள். பலவழிகளிலும் வருவாய் கிடைக்கும். கலைத்துறையினரின் திறமைகள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். அதில் வெற்றியடைய சில செலவுகளைச் செய்வீர்கள். விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். இதன் மூலமும் திடீர் சன்மானம் கிடைக்கும். ரசிகர்களை அரவணைத்துச் சென்று உற்சாகப் படுத்துவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். குழப்பங்களும் கருத்து வேறுபாடுகளும் நீங்கி கணவரிடம் அன்யோன்யமாகப் பழகுவீர்கள். குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த குறை நீங்கும். மாணவமணிகள் கல்வி கேள்விகள் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் சிறந்து விளங்குவீர்கள். ஆசிரியர்களின் நேசத்தைப் பெறுவீர்கள். நல்ல மதிப்பெண்களை
பெறுவீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.

***

மகரம்
(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் அந்தஸ்தும் புகழும் படிப்படியாக உயரும். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்துச் சென்று கருத்து வேறுபாடுகளை குறைத்துக் கொள்வீர்கள். குழந்தைகள் விஷயத்திலும் நல்ல விஷயங்கள் நடக்கும். செய்தொழிலிலும் பிரச்னைகள் ஏற்படாது. புதிய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியமும் உண்டாகும். சிலர் பழைய கூட்டாளிகளை விட்டு விலகி புதிய கூட்டாளிகளுடன் இணைவார்கள். புத்தியைக் கூர்மையாக்கி திட்டங்களைத் திறம்பட செயல்படுத்துவீர்கள். புதிய ஊர்களுக்குச் சென்று தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உங்கள் செயல்களில் மற்றவர் தலையீட்டை விரும்ப மாட்டீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பாகும். ஆன்மிக பலம் முன்பை விட அதிகரிக்கும். மகான்களையும் மகத்துவம் மிகுந்த புண்ணியத் தலங்களையும் வழிபட்டு மகிழ்ச்சியடைவீர்கள். குழந்தைகளின் மேற்படிப்புக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கும். அதற்கான வங்கிக் கடன்களும் உடனடியாகக் கிடைக்கும்.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் சிறு இடையூறுகள் ஏற்பட்டு விலகும். செய்தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். எதிலும் சிந்தித்து நல்ல முறையில் செயல்படுவீர்கள். இருப்பினும் மனதில் ஒரு சிறு குறை இருந்து கொண்டே இருக்கும். மனதில் உள்ள குறைகளை மறைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் உலா வருவீர்கள். அனாவசிய சட்டச் சிக்கல்களில்சிக்கிக் கொள்ள நேரிடலாம். அனைத்துச் செயல்களையும் நேர்வழியில் மட்டுமே செய்யவும். வசிக்கும் வீட்டிற்கும் வண்டி வாகனங்களுக்கும் பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும். வருமானம் தொடர்ந்து கொண்டிருந்தாலும் வரவுக்கு முன்பே செலவு காத்துக்கொண்டிருக்கும். அனாவசிய செலவுகளைத் தவிர்க்கவும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள். ஏதாவது ஒருவகையில் சாதனை புரிவீர்கள். நீண்ட கால எண்ணம் ஒன்று நிறைவேறும். கௌரவத்திற்கு எந்த பங்கமும் ஏற்படாது. ஆன்மிகத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். ஷேர்மார்க்கெட் போன்ற துறைகளில் அதிக லாபத்தை எதிர்பார்க்க முடியாது. எவருக்கும் முன் ஜாமீன் போடுவதோ உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுப்பதோ வேண்டாம்.
 

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் குதூகலத்துடன் ஈடுபடுவார்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட பணிகளில் இருப்பவர்களுக்கு வருமானம் பெருகும். நெடுநாள்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இடமாற்றத்தைப் பெறுவீர்கள். சக ஊழியர்களும் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக ரீதியான பயணங்களில் பெரிய நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. வியாபாரிகள் மந்தமான நிலையிலிருந்து விடுபடுவார்கள். வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் இருந்த தொய்வுகள் நீங்கி மனதில் உற்சாகம் தோன்றும். புதிய சந்தைகளுக்குச் சென்று வியாபாரம் செய்து பெரும் லாபத்தை அள்ளுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். வங்கிகளில் கடன் பெற்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு இது முன்னேற்றம் தரும் ஆண்டாக அமைகிறது. புதிய குத்தகைகள் தேடி வரும். புதிய முதலீடுகள் செய்து விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் பலம் குறையும். பெரிய பதவிகள் தேடி வரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். கட்சி மேலிடம் கரிசனத்தோடு நடந்து கொள்ளும். தொண்டர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும். அவர்களின் குறைகளையும் பெரிது படுத்த வேண்டாம். கலைத்துறையினரின் பெயரும் புகழும் வளரும். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். திறமைகளை ஒருமுகப் படுத்தி அவற்றுக்கு செயல்வடிவம் கொடுத்து புகழ் பெறுவீர்கள். அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற்று மகிழ்வீர்கள். பெண்மணிகள் குடும்பத்தின் தூண்கள் என்கிற நிலைமையை இந்த ஆண்டு பெறுவார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். எதிர்பார்த்திருந்த சுபகாரியங்கள் நடக்கும். குடும்பத்தில் அமைதி அன்யோன்யம் நிலவும். கணவரிடம் அன்பைப் பெறுவீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மாணவமணிகள் படிப்பில் ஏற்பட்ட தடங்கல்களை மீறி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். விளையாட்டுகளில் வெற்றிகளைக் காண்பீர்கள்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

****

கும்பம்
(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் ஆரோக்கியம் மேம்பட துவங்கும். நெடுநாளாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த உபாதைகளிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். செய்தொழிலில் வளர்ச்சி ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. போட்டியாளர்கள் மறைமுகமாக தொல்லை கொடுத்து வருவார்கள். உற்றார் உறவினர்கள், நண்பர்களின் கடினமான பேச்சுக்

களால் வருத்தமடைவீர்கள். இருப்பினும் பெரிதுபடுத்த மாட்டீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பொறாமையுடனும் பொறுப்புடனும் நிதானத்துடனும் செயல்களைச் செய்வீர்கள். புகழ், கௌரவம் இவைகளை எதிர்பார்க்காமல் கடமையே என்கிற ரீதியில் உழைப்பீர்கள். அறிமுக மில்லாதவர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துக்கொள்ளக் கூடாது. மாறுபட்ட யோசனைகளால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். முக்கிய விழாக்களில் மட்டுமே கலந்து கொள்வீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளையும் தவிர்த்து விடுவீர்கள். அரசு அதிகாரிகளுடனும் அனுசரித்துச் செல்வீர்கள். குழந்தைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். பூர்வீகச்சொத்து விஷயங்களில் உங்கள் பங்கு தானாக வந்துசேரும். சிலருக்கு புதிய வீட்டிற்கு குடிசெல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். சிறப்பான எதிர்காலத்திற்காக அஸ்திவாரம் அமைத்துக் கொள்வீர்கள். சிறிய அளவு முயற்சியிலும் பெரிய வெற்றிகளைப் பெறுவீர்கள். வீடு, வாகனம் போன்ற அசையா அசையும் சொத்துகளை வாங்க முயற்சி செய்வீர்கள். செய்தொழிலில் போட்டி பொறாமைகள் இருந்தாலும் அவைகள் உங்களை பாதிக்காது. நண்பர்களின் உதவி கிடைக்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகள் இல்லாதோருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். உடன்பிறந்தோர் உங்களைப் புரிந்து கொள்வார்கள். ஆளுமைத்திறன் கூடும். அதிகாரம் செய்யும் பதவிகளில் அமர்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகளும் கிடைக்கும். குடும்பத்திலும் சந்தோஷம் நிறையும். சட்டப் பிரச்னைகளிலிருந்து உங்களைக் காத்துக் கொள்வீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். செய்தொழிலை கட்டாயமாக விரிவுபடுத்தும் சூழ்நிலை உருவாகும். மனதிற்கினிய பயணங்களைச் செய்யும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் இந்த ஆண்டு அதிகமாக உழைக்க வேண்டிவரும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்கள் ஏற்படலாம். அலைச்சலுக்குப் பயந்து வேலைகளைத் தட்டிக் கழித்தால் வீண் பிரச்னைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். பணவரவுக்கு ஏந்த குறையும் வராது. வியாபாரிகளுக்கு நினைத்ததெல்லாம் நடக்கும். வியாபாரம் அபிவிருத்தியடையும். கூட்டுத்தொழில் செய்யவும் வாய்ப்புண்டாகும். வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். வசதி, வாய்ப்பு அந்தஸ்து அதிகரிக்கும். விவசாயிகள் விளைச்சலில் அக்கறை காட்டவும். பாசன வசதிகளுக்காகச் சிறிது செலவு செய்வார்கள். குடும்பத்தில் சுபகாரியங்களை நடத்துவார்கள். கால்நடைகள் மூலமும் நல்ல பலனை அடைவார்கள். சக விவசாயிகளும் உதவிகரமாக இருக்கும் ஆண்டாக இது அமைகிறது.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடுவார்கள். அதனால் பெயரும் அந்தஸ்தும் அதிகரிக்கும். தொண்டர்களின் ஒத்துழைப்பும் அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த பதவிகளும் கிடைக்கும். மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினர் நல்ல வருமானத்தைக் காண்பார்கள். புகழைத் தக்கவைத்துக் கொள்வார்கள். புதிய ஒப்பந்தங்களை தைரியமாக எடுத்து சிறப்பாக செய்து சாதனைகளாக மாற்றி விடுவீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியும் பெருமைகளும் உண்டாகும். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல்ஆரோக்கியம் பலப்படும். குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் என்று எதுவும் ஏற்படாது. மாணவமணிகள் விளையாடும் நேரத்தில் கவனமாக இருக்கவும். கல்வியில் நிலவும் மந்தமான நிலையை போக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். படித்த பாடங்களையே திரும்பத் திரும்ப படிக்கவும்.

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.

****


மீனம்
(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் அனைவரும் உங்களை விரும்புவர். பேச்சில் இனிமை கூடும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி வெற்றியடையும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். தனித்தன்மை வெளிப்படும். திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் உருவாகும். இக்கட்டான தருணங்களில் சமயோசித புத்தி கை கொடுக்கும். ஓடி ஆடி வேலை செய்தவர்கள் ஓரிடத்தில் நிலைத்து வேலை பார்க்கும் நிலைமை உருவாகும். கடினமாக உழைத்தாலும் தேக ஆரோக்கியத்தில் எந்தக் குறைவும் உண்டாகாது. மதியூகி என்று அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். அவசியமில்லாத விஷயங்களில் தலையை நுழைக்க மாட்டீர்கள். நல்லது கெட்டது இரண்டையும் பகுத்தறிந்து தீயவற்ற ஆரம்பத்திலேயே ஒதுக்கிவிடுவீர்கள். புரட்சிகரமான தொலைநோக்குத் திட்டங்கள் தீட்டுவீர்கள். பெற்றோரின் ஆதரவும் அரவணைப்பும் முழுமையாகக் கிடைக்கும். யோகா பிராணாயாமம் போன்றவற்றை செய்வீர்கள். பழைய காலத்தில் காணாமல் போன பொருள்கள் இந்த காலகட்டத்தில் திரும்பக் கிடைக்கும் என்றால் மிகையாகாது.  

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் சிறிது உணர்ச்சிவசப்படுவீர்கள். அனைத்து விஷயங்களையும் பொறுமையுடன் அணுகவும். புதிய முயற்சிகளை அவசரப்பட்டு செயல்படுத்த வேண்டாம். கடினமாக உழைக்க வேண்டிய காலகட்டமிது. சந்தர்ப்ப சூழ்நிலையறிந்து செயல்படும். சாமர்த்தியத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவீர்கள். பொருளாதாரம் சீராக இருந்தாலும் முக்கிய விஷயங்களுக்காக கடன்கள் வாங்க நேரிடும். வண்டி வாகனம் வாங்கும் எண்ணத்தைத் தள்ளிப்போடவும். நண்பர்களும் உற்றார் உறவினர்களும் நம்பிக்கை துரோகம் செய்வார்கள். அதனால் எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். நேர்முக மறைமுக போட்டிகளையும் சாதுர்யமாக சமாளிக்கவும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வயிறு சம்பந்தபட்ட உபாதைகள் இருக்கும். சிலருக்கு சிறு அறுவை சிகிச்சையும் நடக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் சுபச் செலவுகள் உண்டாகும். தொலைதூர புனிதப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் தானாகத் தேடிவரும். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். வெளியில் கொடுத்திருந்த கடன்களை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள்.
 

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளை மகிழ்ச்சியுடன் செய்வார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காவிட்டாலும் ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தை பிரிந்து சென்று வேலை பார்ப்பவர்களுக்கு குடும்பத்துடன் சேர்ந்து வாழும் பாக்கியமும் கிட்டும். விரும்பிய இடமாற்றங்களையும் பெறுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புகள் பலனளிக்கும். சக ஊழியர்களின் நட்பும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமாராக இருக்கும். கஷ்டகாலத்தில் பழைய சேமிப்புகள் கைகொடுக்கும். நண்பர்களிடம் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருந்து செயலாற்றவும். வேறு ஊர்களுக்கு சென்று வியாபாரம் செய்யும் நிலைமை சிலருக்கு ஏற்படலாம். விவசாயிகள் விளைச்சலைப் பெருக்கி லாபத்தை அள்ளுவீர்கள். விளைபொருள்களின் விற்பனை மிகவும் நன்றாக இருக்கும். கால்நடைகளின் மூலம் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். வெகுநாள்களாக தள்ளிப்போட்டிருந்த வீடு, நிலம் போன்ற அசையா சொத்துகள் வாங்கும் திட்டங்கள் நிறைவேறும்.

அரசியல்வாதிகள் அனைவரிடமும் அனுசரித்துச் செல்லவும். தொண்டர்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தவும். வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்கவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்லும். தொழிலில் தன்னம்பிக்கையுடனும் சுறுசுறுப்புடனும் ஈடுபட்டு திறமைகளை வெளிக்கொணர்வீர்கள். ரசிகர்களின் ஆதரவுண்டு. பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் எனவே கவனம் தேவை. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்ச்சியடைவீர்கள். மாணவமணிகளின் புத்தி கூர்மையடையும். முதல் மதிப்பெண் பெறுவதற்கு வாய்ப்புண்டாகும். போட்டிகளில் வெற்றி பெற்று புகழும் பாராட்டும் பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்புகளும் உண்டாகும்.
பரிகாரம்: அம்பாள் வழிபாடு உகந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com