3. மார்கழியில் ஒரு மலைப்பயணம்! வெள்ளியங்கிரி!

நாங்கள் மதியம் ஒரு மணிக்கு கோவிலை அடைந்தோம், ஆறாவது மலையில் இருந்து பார்க்கும்போது
3. மார்கழியில் ஒரு மலைப்பயணம்! வெள்ளியங்கிரி!

நாங்கள் மதியம் ஒரு மணிக்கு கோவிலை அடைந்தோம், ஆறாவது மலையில் இருந்து பார்க்கும்போது சிறிதாக இருந்த கோவில் அருகில் பார்க்கும்போது மிகப்பெரிய தோற்றத்தில் நம்மை வரவேற்றது மலை உச்சியில் உள்ள தோரணக்கல் என்ற இயற்கை கோபுரவாயில்  இவ்வாயிலைக் கடந்ததால் விநாயகர் சன்னதி உள்ளது. அங்கு நெய்தீபம் வைத்து அனைவரும் சேர்த்து

‘ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன்’

என்ற பாடலை பாடி விநாயகரை வழிபட்டோம். பின்பு அடுத்து சிறிய குகைக்குள் அம்மன் சன்னதி உள்ளது. அங்கும் நெய்தீபம் இட்டு

‘ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்

பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்

காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்

சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே’

என்ற பாடலை பாடி அம்மனை வழிபட்டோம். இதை அடுத்து ஒரு பெரிய பாறையின் கீழ் உள்ள குகையில் தான் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. இக்குகைக் கோயிலில் சுயம்பு லிங்கங்களான அக்னி, வாயு, நீர், நிலம், ஆகாயம் என பஞ்ச பூதங்களும் ஒருங்கே அமையப்பெற்ற பஞ்ச பூத ஸ்தலமாக விளங்குகிறது. இறைவன் பஞ்சலிங்கேசனாகவும் இறைவி மனோன்மணி என்ற பார்வதியாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலை அடைந்து ஈசன் முன் நிற்கும் போது நாம் அடையும் மகிழ்ச்சி, பூரிப்பு ஆகியவற்றை சொல்ல இயலாது. ஏழு மலைகளை சிரமப்பட்டு ஏறி வந்த உடல் களைப்பு, மனச்சோர்வு, அசதி கால்வலி அனைத்தும் ஈசனைக் கண்ட அந்த ஒரு நொடிப் பொழுதில் மறைந்து விடுகிறது.

நாங்கள் கொண்டு வந்த பூஜை பொருளை எடுத்து பூ, வில்வம், அவல், க.சர்க்கரை, திருநீறு, சந்தனம், குங்குமம், துண்டு, ஊதுபர்த்தி, நெய்தீபம் இட்டு பூஜைக்கு தயாராக திரு.கனகராஜ் அவர்கள் மாணிக்கவாசகர் இயற்றிய சிவபுராணம் பாட அனைவரும் மனம் உருகி நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்ற பாடலை திருப்பி பாடினார்கள், அப்போது சுரேந்திரன் அவர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் பாதத்தில் வைத்துக்கொண்டுவந்து வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதியில் வைத்து எடுத்த உருத்திராட்ச மணியை ஓம்நமச்சிவாய என்று சொல்லி அனைவருக்கும் அணிவித்தார், சிவபுராணத்தை  திருச்சிற்றம்பலம்.... என சொல்லி முடித்தனர், பிறகு இளங்கோ, கோபால்சாமி இருவரும் வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு பூஜை செய்ய அனைவரும் வெள்ளியங்கிரி ஆண்டவனுக்கு அரோகரா.....என்றும் தென்னாடுடைய சிவனே போற்றி...! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...! என்றும் சொல்லி பூஜையை முடித்து பிரசாதமாக அவல் கொடுத்தனர்.

இந்த வெள்ளியங்கிரி மாமலையின் சிறப்புகள் எண்ணிலடங்காதவை, அதில் முக்கியமாக அக்னி, வாயு, நீர், நிலம், ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களுக்கு  உரிய திருத்தலங்கள் வெவ்வேறாக உள்ளன. ஆனால் வெள்ளியங்கிரி திருத்தலம் ஒன்றே பஞ்சபூதத்தலமாகவும், பஞ்சமுகக் கிரிகளைத் தன்னுள் அடக்கியதாகவும் காட்சியளிக்கிறது. கிரிமலையில் உள்ள குகை ஆண்டான் குகை சிவ ரூபமான கிரியின் குகை எனப்படுகிறது. இக்குகையின் முன்புறம் பிருதிவி, அப்பு லிங்கங்களும், குகைகளும், தேயு, வாயு, ஆகாய லிங்கங்களும் உள்ளன. சிவபெருமான், உமையவளின் விருப்பதற்கிணங்க, வெள்ளியங்கிரி மூலஸ்தானத்தில் உள்ள வெள்ளியம்பலத்தில் நடனமாடி அருள் புரிந்தார் என்பர்.

இந்த மலைக்கும், ராமாயண, மகாபாரத சம்பவங்களுக்கும் நிறைய தொடர்பு உள்ளது என்பர். இதில் ஐந்தாவது மலையில்தான் சீதை தவமிருந்து சிவனிடம் வரம்பெற்றதாக கூறப்படுகிறது. அதேபோல் அர்ச்சுணன் பாசுபதம் பெற வேண்டி இறைவனை நோக்கி தவம் இருக்கும்போது இறைவன் வேடன் உருவில் வந்து, அர்ச்சுணனுடன் சண்டையிட்டு முடிவில் பாசுபதம் வழங்கிய தலம் வெள்ளியங்கிரி என புராணங்கள் கூறுகின்றனர். சதுர்யுகம் கண்ட கோவிலான வெள்ளியங்கிரி கோவிலில், தேவர்களும், முனிவர்களும், மட்டுமன்றி பறவைகளும் விலங்குகளும் கூட இந்த வெள்ளியங்கிரி ஆண்டவரை வணங்குவதாக ஐதீகம். ஈசன் திருநடனம் ஆடியமலை,கோரக்கர் பிறந்த மலை, திவாகர முனிவர் அருணகிரி நாதர் ஆகியோரால் பாடப்பட்ட மலை, காமதேனு வணங்கிய மலை, பஞ்ச லிங்கங்கள் உள்ள மலை, கரிகாற் சோழனும், சேரன் செங்குட்டுவனும் வணங்கிய மலை, வாணி ஆறாகிய சிறுவானியும், காஞ்சிமாநதியாம் நோய்யலுக்கும் தாயாய் விளங்கும் மலை, என்று சொல்லிக்கொண்டே போகலாம் வெள்ளியங்கிரி மலையின் பெருமையை.. இப்போதும் இங்கு பல சித்தர்கள் நமது கண்களுக்கு தெரியாமல் இருப்பதாக கூறப்படுகிறது....

நாங்கள் அனைவரும் எடுத்து வந்த உணவை கோவிலின் முன் அமர்ந்து சமபந்தியாக சாப்பிட்டோம் பின்பு நேரம் இல்லாததால் கீழே இறங்க ஆரம்பித்தோம், இல்லையென்றால் அடிவாரம் செல்லும்போது இருட்டு ஆகிவிடும். இறங்குவதற்கு ஊன்று கோல் மிக அவசியம். இது நம் காலின் சுமையைக் குறைப்பதுடன், கால் ஆடுதசையின் பிடிப்பைக் குறைக்கும். குச்சி இல்லாமல் பயணம் செய்தால் விழுவதற்க்கு அதிகமான சாத்தியங்களும், அடுத்த ஒரு வாரம் கால் பிடிப்பும் நிச்சயம். குண்டானவர்கள், தொப்பை உடையவர்கள், உடல் எடை அதிகம் உள்ளவர்கள் செங்குத்தாக இறங்கும் போது முன்னேக்கி விழ வாய்ப்புக்கள் அதிகம். ஆதலால் அவர்கள் இறங்கும் போது முன்புறமாக தடியை ஊன்றி இறங்க வேண்டும்.

கீழே வரும்போது நான்காவது மலையில் அடர்ந்த காட்டுப்பகுதியில் கருங்குரங்குகளை பார்த்தோம், இரண்டாவது மலையிலும் முதல் மலையிலும் பறக்கும் அணில்கள் மற்றும் குரங்குகள் மரங்களில் தாவிச் செல்வதைக் கண்டோம். ஈசனின் புனித தலமான இம்மலையில் சுற்றுப்புற சூழலும், துப்புரவும் காக்க வேண்டியது ஆன்மிக பற்றுக் கொண்ட ஒவ்வொருவரின் தலையாய கடமை. ஆனால் அவ்வாறு நடந்து கொள்பவர்கள் மிகச் சிலரே. மிகமிக முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வனத்துறையினர் விழாக் காலங்களில் அனைவரின் பைகளையும் சோதனை செய்து பிளாஸ்டிக் கவர் போன்றவற்றைப் பிரித்து எடுத்த பின்பு தான் மேலே செல்ல அனுமதிக்கின்றனர். குறிப்பாக பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட நீர் மேலே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மாறாக சலுகை விலையில் தண்ணீர் பாட்டில்களைத் தருகின்றனர். மற்ற நேரங்களில் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. போதிய விழிப்புணர்வு இருந்தும் இப்படி ஈசன் குடிகொண்டுள்ள மலையை மாசுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம்? புனித மலைக்கு வரும்போது புகையிலை பொருட்களான சிகரெட், பீடி, குட்கா, பான் மசாலா போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். புண்ணிய தலங்களுக்கு பயணிக்கும் போது பொதுவாக இறைவன் மீது உள்ள பாடல்களைப் பாடுவர். சிலர் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பர்.

அடிவாரத்தை அடையும் போது இருட்டி விட்டது... நாங்கள் கீழே வரும் வழியில் எங்களுக்கு வழிகாட்டியாகவும் பாதுகாப்பாகவும் கடைசிவரை வந்தது அந்த இரண்டு பைரவர்கள். "ஓம் சிவாயநம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லேன்" என்ற ஔவையாரின் வாக்குப்படி பயணம் சிறப்பாக முடிந்தது, கீழே இறங்கியவுடன் நல்ல முறையில் எந்த விதமான விபத்தும் இன்றி சென்று வந்ததற்காக ஈசனுக்கும் மனோன்மணியம்மைக்கும் நன்றி தெரிவித்து பயணத்தை முடித்தோம். வெள்ளியங்கிரி மலைப்பயணம், ஆத்திகர்களுக்கு இறைவனை இயற்கையுடன் தரிசிக்கும் ஒரு அருமையான வாய்ப்பாக இருக்கும். நாத்திகர்களுக்கு, மலையேற்றப் பயிற்சியாகவும், இயற்கையின் அருமையை உணரவும் நல்ல வாய்ப்பாக இருக்கும்!! எதுவாக இருந்தாலும் நல்லது தானே!!

வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று வந்தால் ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளலாம்!! ஈசன் அருளால் இந்த வெள்ளியங்கிரி மலைப்பயணத்தின் அனுபவத்தையும்       அங்கு நாங்கள் எடுத்த புகைப்படங்களுடன் இத்தலத்தின் பெருமைகளையும் பலருடைய கருத்துக்களையும் கட்டுரையாக தொகுத்து இருக்கிறேன் இதில் பிழையிருப்பின் மன்னித்து வழிகாட்டி அருள்வாய் மனமே...!

வெள்ளியங்கிரி ஆண்டவனுக்கு அரோகரா.......!

ச.பாலகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com