பவுண்டரீகபுரம் சிவன் கோயிலுக்கு வாருங்கள்!

வரலாற்று சிந்தனையுள்ள இளகிய மனம் படைத்தவர்களும், இதய நோய் உள்ளவர்களும்
பவுண்டரீகபுரம் சிவன் கோயிலுக்கு வாருங்கள்!

வரலாற்று சிந்தனையுள்ள இளகிய மனம் படைத்தவர்களும், இதய நோய் உள்ளவர்களும் இந்த பகுதியை காணற்க..../

பவுண்டரீகபுரம் சோமநாதசுவாமி கோயில் கும்பகோணம்- அய்யாவாடி- முருக்கன்குடி என்ற ஊரில் இருந்து இரண்டு கிமி தூரத்தில் உள்ளது.

தற்போது பவுண்டரீகபுரம் என்று அழைக்கப்பட்டாலும் இவ்வூருக்கு ஏனாதிமங்கலம் என்ற பெயரும் உண்டு இக்கோயில் பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்ததாக விளங்குகிறது. முதலாம் குலோத்துங்க சோழரின் காலத்தினை சேர்ந்ததாக இருக்கலாம்.

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலின் இணைக்கோவிலாக பவுண்டரீகபுரம் சோமநாத ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவில் எமன் சிவபெருமானை வழிபட்ட தலமாகவும் சிறப்புபெற்று விளங்குகிறது.

தொன்மை மிக்க இக்கோவில் கருங்கல் திருப்பணி கொண்டது. சோழர்கால கலையம்சத்துடன் அழகு மிளிரும் கோஷ்டமூர்த்திகளை கொண்டு திகழ்கிறது.

கிழக்கு நோக்கிய கோயில் அர்த்த மண்டபம் முகப்பு மண்டபம் என உள்ளது.

கோயிலின் சுற்று சுவர்கள் இல்லை, மண்டப மேல் தளங்களில் பெரும் விருட்சங்கள் வளர்ந்து, பின் வெட்டப்பட்டு அடிக்கட்டகள் மீண்டும் துளிர்த்து மண்டபங்களை பிளக்கும் காட்சி.

இருபத்து இரண்டுக்கும் மேற்ப்படட கருவறை கோட்டங்கள் அதில் சிவனின் வெவ்வேறு மாகேஸ்வர வடிவங்கள் அத்தனையும் சிதைக்கப்பட்டு, உடைந்துபோய் உள்ளன. பல நூறு கிமி தூரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல் அதற்கு பலநாள் குருதியும் வியர்வையும் சிந்த உழைத்து உருவம் கொடுத்து உயிர் கொடுத்த சிற்பிகளுக்கு நாம் கொடுத்திருக்கும் மரியாதையை எண்ணி யாரை நோவது.

கோயிலின் நுழைவு வாயிலின் வலப்புறம் அதிகார நந்தியும், இடப்புறம் சிவபெருமான் அருச்சுனனுக்குப் பாசுபதம் வழங்கும் கதையை நினைவூட்டும் வகையில் கிராதார்ஜுன வடிவையும் தேவக்கோட்டத்தில் காணலாம். அம்பிகை கருவறை முகப்பு மண்டபத்தின் அருகிலேயே தெற்கு நோக்கி உள்ளது

கங்கைகொண்ட சோழபுரம் போன்று சண்டேசுவர அனுக்கிரகமூர்த்தி சிற்பமும் ஒரு தேவக்கோட்டத்தில் காணப்படுகிறது.

கோவிலில் அனுக்கிரக மூர்த்தி, கங்காவிசர்ஜனர், அர்த்தநாரிஸ்வரர், சண்டாள ரூபமூர்த்தி, அதிகார நந்தி, பிட்சாடனர் போன்ற மூர்த்திகள் காணக்கிடைக்காத தெய்வாம்சம் மிகுந்த கலைநயமிக்க மூர்த்திகளாக உள்ளனர்.

அளவுக்கு அதிகமான பெருங்கோயில்களை அருகாமையிலேயே கண்டு புழங்கி வருவதாலோ என்னவோ நம் மக்கள் இவற்றிக்கு உரிய மரியாதையை தராமல் உள்ளனர்.

காத்திருப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை!

- கடம்பூர் விஜயன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com