திருகோட்டூர் சிவனை தரிசிக்க திருவாரூருக்கு வாருங்கள்!

கோட்டூர் இரண்டு பகுதிகளாக மேலக்கோட்டூர் என்றும், கீழக்கோட்டூர் என்றும் உள்ளது. மேலக்கோட்டூரிலுள்ள கோவிலே பாடல் பெற்ற சிவஸ்தலம் 
திருகோட்டூர் சிவனை தரிசிக்க திருவாரூருக்கு வாருங்கள்!

இறைவன் - கொழுந்தீஸ்வரர், சமீவனேஸ்வரர்
இறைவி- தேனார்மொழியாள்

தல மரம் : வன்னி
தீர்த்தம் : அமுதம், முள்ளியாறு, சிவகங்கை, பிரமதீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவதீர்த்தம், விசுவகர்ம தீர்த்தம், அரம்பை தீர்த்தம், மண்டை தீர்த்தம் என 9 தீர்த்தங்கள்.
வழிபட்டோர் : ஐராவதம், அரம்பை, தேவர்கள், குச்சர இருடிகள்
சம்பந்தர் பதிகம் பெற்றது.

திருத்துறைப்பூண்டி - மன்னார்குடிப் பேருந்து வழியில் கோட்டூர் உள்ளது. பேருந்து நிறுத்தத்திலிருந்து வடக்கே சிறிது தூரம் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

கோட்டூர் இரண்டு பகுதிகளாக மேலக்கோட்டூர் என்றும், கீழக்கோட்டூர் என்றும் உள்ளது. மேலக்கோட்டூரிலுள்ள கோவிலே பாடல் பெற்ற சிவஸ்தலம்.

விருத்திராசுரன் என்ற அரக்கன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். இந்திரன் அவனை வெல்வதற்கான வழியைக் கூறும்படி பிரம்மாவிடம் வேண்டினான். ததீசி என்ற முனிவரின் முதுகெலும்பை பெற்று அதை வஜ்ராயுதமாக்கி அதன் மூலம் மட்டுமே அரக்கனை கொல்லமுடியும் என்று பிரம்மா இந்திரனிடம் கூறினார். 

இந்திரனும் அதன்படி முனிவரது முதுகெலும்பை வஜ்ராயுதமாக்கி விருத்திராசுரனனைக் கொன்றான். முனிவரை கொன்று முதுகெலும்பை பெற்றதால், இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. 

இந்த தோஷத்தை போக்கிக் கொள்ள தேவகுருவான பிரகஸ்பதியை நாடினான். அவரின் ஆலோசனைப்படி இந்திரன் பூவுலகம் வந்து வன்னிமரத்தின் அடியில் இத்தலத்தில் இருக்கும் சிவலிங்கத்தை ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதனால் அபிஷேகம் செய்து வழிபட்டான். சிவபெருமான் அருளால் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கப் பெற்றான். இந்திரன் பூஜித்ததால் இத்தலம் இந்திரபுரம் என்றும் அழைக்கப்பட்டது. 


இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையும் இத்தல இறைவனை வழிபட்டது. கோடு என்றால் யானை அதனால் இத்தலம் கோட்டூர் எனப் பெயர் பெற்றது.

இந்திரன் பூஜித்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதால், இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபடுபவர்களின் பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

கோவிலுக்கு முதன்மை பெருங்கோபுரம் இல்லை, பஞ்சமூர்த்திகள் சுதைகள் கொண்ட ஒரு துழைவாயிலும், அதையடுத்து மேற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரமும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் கொண்டது.

வாயில் வழியாக உள்ளே நுழைந்ததும் கவசமிட்ட கொடி மரமும், பலிபீடமும் நந்தி மண்டபமும் உள்ளன. உள்பிரகாரத்தில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை கோஷ்ட தெய்வங்களாக நர்த்தன கணபதி, தென்முகன், லிங்கோத்பவர், நான்முகன், துர்க்கை உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. 



இறைவன் மேற்கு நோக்கியும்,இறைவனின் வலப்புறம், அம்பிகை தேனாம்பாள் கிழக்கு நோக்கியும் உள்ளதாக அமைந்துள்ளது திருக்கோயில். இரு சந்நதிகளையும் சேர்ந்து சுற்றிவருமாறு நகரத்தார் சுற்றாலை மண்டபம் அமைத்துள்ளனர்.

மாசி மகத்தன்று இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால், லிங்கத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவம் தெரிவதை பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

முதல் பிரகாரத்தின் இடது புறம் சந்திரன், மகாவிஷ்ணு, நால்வர், சுப்பிரமணியர், அகோரவீரபத்திரர், ரம்பை, உமாமகேசுவரர், அர்த்தநாரி உள்ளனர் அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி உள்ளது.

தலத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது இங்குள்ள ரம்பையின் உருவம். தேவலோகத்தில் ரம்பையும், ஊர்வசியும் நடனமாடி கொண்டிருந்தார்கள். அப்போது தேவ குருவான பிரகஸ்பதி அங்கு வருகை தந்தார். ஆனால் அவரை கவனியாது இருவரின் ஆட்டமும் தொடர்ந்ததால், பிரகஸ்பதி ரம்பையையும், ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சாபம் தந்தார். 

ரம்பை குபேரனின் மகனான நளகூபனின் மனைவி. குபேரனின் மாற்றாந்தாய்க்கு பிறந்தவன் ராவணன். எனவே ரம்பை ராவணனது மருமகளாகிறாள். ஒரு முறை ராவணன் ரம்பையின் அழகில் மயங்கி அவளை நெருங்க, தன்னுடைய உறவுமுறையை அவனிடம் விளக்கி விலகுகிறாள் ரம்பை. அதையும் கேளாமல் ராவணன் வன்புணர்வு செய்தமையை தன்னுடைய கணவனிடம் கூறுகிறாள். அதையறிந்த நளகூபன் ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவளை ராவணன் தீண்டினால் அவன் தலை வெடித்துவிடும் என்று சாபமிடுகிறான்.
 

இக்கோவிலில் ஈசனை நோக்கி இடது கால் ஊன்றி, வலது கால் மடித்து, உள்ளங்காலில் இடது கையை வைத்து, வலது கையை தலைமேல் வைத்தபடி அக்னியில் நின்று தவம் செய்தாள். ரம்பைக்கு தரிசனம் தந்த இறைவன் வரங்கள் பல தந்து மறைந்தார். அவள் முன்பை விடவும் அதிக ஈடுபாட்டுடன் சிவனை அனுதினமும் பூஜித்து வந்தாள். தவம் செய்த அமைப்புடன் காணும் ரம்பையின் உருவச்சிலை காணவேண்டிய ஒன்று.

இக்கோயிலினுள் உள்ள அமுதக் கிணற்றோடு முள்ளியாறு, சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவ தீர்த்தம், விஸ்வகர்ம தீர்த்தம், ரம்பை தீர்த்தம் மற்றும் மண்டை தீர்த்தம் என ஒன்பது தீர்த்தங்கள் இத்தல தீர்த்தங்களாக உள்ளன.

தல விருட்சமாக வன்னி மரம் திகழ்கிறது.. 

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் இத்தல இறைவனை ‘கோட்டூர் நற்கொழுந்தே’ என்று போற்றுகின்றார். 

கோட்டூர் கொழுந்தீசரை வணங்குபவர்கள் தேவருலகில் தேவரோடும் இனிந்திருப்பார்கள், அழியாத செல்வமுடையவராய் இவ்வுலகில் புகழோடு வாழ்வார்கள், அடியவர்களின் வினைகள் நீங்கி இறைவன் திருவருளைப் பெறுவார்கள், வழிபடுவர்களுக்கு இடரும், கேடும் ஏதும் இல்லாமல் உலகெலாம் புகழுடன் விளங்குவர் 

தற்போதைய கோயில் நகரத்தார் திருப்பணியில் நேர்த்தியாக உள்ளது. அம்பிகை கோட்டத்தின் சுவர்கள் அழகாக சிற்ப தூண்களும் மாடங்களும், கும்பபஞ்சரங்களும் கொண்டுள்ளன.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கல்வெட்டு:

இக்கோயிலில் 23 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் சோழர்களுடையன. இவைகளுள் விளக்குத்தானம், கோயிலுக்கு நிலதானம், முதலியவைபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு ஒன்றில் குலோத்துங்க சோழ வளநாட்டுக் குன்றத்தூரில் சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன் என்ற ஒரு பெருமகனார் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இதில் சேக்கிழார் தம்பியாரது பெயர் வருதல் காண்க. திருத்தருப்பூண்டி மடாதிபதி திருமாளிகைப் பிச்சர் பெயர் காணப்படுகிறது.

இத்திருக்கோயிலில் பெயர் குறிப்பிடப்பெறாத பரகேசரி வர்மன் காலத்தது ஒன்று, முதலாம் ராஜராஜ சோழன் காலத்தது ஒன்று, முதற்குலோத்துங்கசோழன் காலத்தன நான்கு, இரண்டாம் ராஜாதி ராஜன் காலத்தன ஐந்து, மூன்றாங் குலோத்துங்கன் காலத்தன நான்கு, மூன்றாம் ராஜராஜன் காலத்தன நான்கு, ஆக சோழமன்னர்களின் கல்வெட்டுக்கள் பத்தொன்பதும், ஒருவயலில் நட்டுவைத்துள்ள தஞ்சை மராட்டிய மன்னருடைய கல்வெட்டு ஒன்றும், மற்றொரு வயலில் நட்டு வைத்துள்ள தளவாய் அனந்தராயர் சாஹேப் கல்வெட்டு ஒன்றும் , ஒரு தோப்பில் நட்டு வைத்துள்ள தஞ்சை இரகுநாத நாயக்கர் காலத்தது ஒன்றும், மற்றொரு தோப்பில் நட்டு வைக்கப்பெற்ற கல்வெட்டு ஒன்றும் ஆக மொத்தத்தில் 23 கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர், இரண்டாம் ராஜாதிராஜன் கல்வெட்டில், கொழுந்தாண்டார் என்றும் மூன்றாம் ராஜராஜதேவன் காலத்தில் மூலஸ்தானம் உடையார் என்றும், தஞ்சை மராட்டிய மன்னர் (மகாராஜா சாஹேப்) கல்வெட்டில் கொழுந்தீசுவர சுவாமி என்றும் கூறப்பெற்றுள்ளனர்.

முதலாம் ராஜராஜ சோழதேவர் காலத்தில் இவ்வூர், அருண்மொழித் தேவவளநாட்டு நென்மலிநாட்டிலுள்ள கோட்டூர் எனவும் முதல் குலோத்துங்கன் கல்வெட்டில் ராஜேந்திர சோழவள நாட்டுத் நென்மலிநாட்டிலுள்ள கோட்டூர் எனவும் குறிக்கப் பெற்றுள்ளது. எனவே அருண்மொழித்தேவ வளநாடு என்றும் பெயர் பெற்ற செய்தி புலனாகின்று.

மேலும் இக்கோயிலிலுள்ள முதற் குலோத்துங்க சோழ மன்னனது 27-ஆம் ஆண்டுக்கல்வெட்டு, இவ்வூர், அருண்மொழித் தேவவள நாட்டிற்கு உட்பட்டிருந்ததையும், அம்மன்னனது 50ஆம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டு இவ்வூர் ராஜேந்திர சோழ வளநாட்டிற்கு உட்பட்டிருந்ததையும் உணர்த்துவதால் ராஜேந்திர சோழ வளநாடு என்னும் பெயர் முதற் குலோத்துங்க சோழனது ஆட்சி யின் பிற்பகுதியில் ஏற்பட்டது என்பது உறுதியாகும். (ராஜேந்திர சோழன் என்பது முதற் குலோத்துங்கனுடைய பெயர்களுள் ஒன்றாகும்.)


மூன்றாங் குலோத்துங்க சோழதேவரின் இரண்டாம் ஆண்டில் குலோத்துங்க சோழ வளநாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் பல்லவ அரையன் களப்பாளராயர் ஒரு நந்தாவிளக்கினுக்குப் பணம் உதவியுள்ளார். ரகுநாத நாயக்கர் பத்து வேலி நிலத்தைக் கொடுத்துள்ளார்.

இத்திருக்கோயிலில் திருஞானம் பெற்ற பிள்ளையாரை எழுந்தருளுவித்தவர் நாகமங்கலமுடையான் அம்பலங் கோயில் கொண்டவர் ஆவர். இச்செய்தி மூன்றாம் ராஜராஜசோழ தேவரின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் நிகழ்ந்ததாகும்.

இவ்வம்பலங் கோவில் கொண்டவர், இம்மன்னனது 18ஆம் ஆண்டில் இப்பிள்ளையார்க்குத் திருவமுது உள்ளிட்டவைகளுக்கு நிலம் அளித்துள்ளார். அதில் இப்பிள்ளையார், திருஞானம் பெற்ற ஆளுடைய பிள்ளையார் என குறிக்கப் பெற்றுள்ளனர்.

ராஜேந்திர சோழ வளநாட்டு வெண்டாழை வேளிர்க் கூற்றத்துத் திருத்தருப்பூண்டியில், திருமாளிகைப் பிச்சர் என்ற மடாதிபதியைப்பற்றி மூன்றாங் குலோத்துங்கசோழதேவரது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டில் காணப்பெற்றுள்ளது.

-கடம்பூர் விஜயன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com