கருடனும், நாகமும்

கருடனின் தாயான வினதையை , மாற்றாந்தாயான கத்ருவின் புதல்வர்களான , நாகர்கள்
கருடனும், நாகமும்

கருடனின் தாயான வினதையை, மாற்றாந்தாயான கத்ருவின் புதல்வர்களான, நாகர்கள் செய்த சூழ்ச்சியால், வினதை, கத்ருவிடம் அடிமையாக இருந்ததும், கருடனானவர், அமுதத்தினைக் கொண்டு வந்து, தாயை  மீட்டது, அனைவரும் அறிந்த கதை.

அறியாத புராணக் கதை ஒன்றைப் பார்ப்போமா?

சௌபரி முனிவருக்கு, எப்பொழுதுமே தன்னுடைய தவத்தின் மேல், மிகுந்த கர்வம்  இருந்தது. அதனால், அவர் எப்பொழுதும், தன்  விருப்பப்படியே எல்லாம் நிறைவேற வேண்டும் என்கிற எண்ணமும் கொண்டிருந்தார். அவர், பிருந்தாவனத்திற்கு அருகாமையில், யமுனை நதியில், நீர் மடுவிற்கு கீழே அமர்ந்து, தவம் செய்யும் வழக்கத்தினை மேற்கொண்டிருந்தார்.

அருகாமையில் இருந்த கதம்ப மரத்தில், கருடனானவன், அமர்ந்து கொண்டு, நதியிலிருந்து மீனைப் பிடித்து உண்ணும் பழக்கத்தினைக் கொண்டிருந்தான்.

ஒவ்வொருமுறை கருடன் வந்து அமரும் பொழுதும், 'ஏய், இந்த இடத்திற்கு வராதே. வேறு எங்காவது போய் விடு' என்று முனிவர் கூறத் தவறுவது இல்லை.

ஆனால், அமிர்தக் கலசம் கொண்டு வரும் பொழுது, ஒரு துளி சிந்திய அந்த இடத்தில் வளர்ந்த கதம்ப மரம் மட்டும் தான் கருடனின் எடையைத் தாங்கும் என்பதை முனிவரும் அறியாதவரல்ல .

அன்று, நீரில், ஒரு அபாரமான பெரிய மீன் தென்படவே, மரத்தின் மீது அமர்ந்திருந்த கருடன், 'சர்' என்று நீர் நிலையின் மேல்மட்டத்திற்கு வந்த ஜந்துவை, அலகால் கொத்தி, பட்சிகளுக்கே உண்டான வழக்கத்தில், 'பட பட' வென்று நீரில் அலசி ஆகாரமாக்கிக் கொண்டது.

அவ்வளவுதான். முனிவருக்கு அசாத்திய கோபம் வந்தது.

'ஏய் கருடா, இனிமேல் இந்த  இடத்திற்கு வந்து எந்தப் பிராணியையாவது வதம் செய்தாயோ, அந்த வினாடியே நீ மடிந்து போவாய்' என்கிற சாபத்தினைக் கொடுத்தார்.

எந்த சாபமும் ஸ்ரீஹரியின் சேவகனை அணுக முடியாது என்பதுதான் விதி. இதை இருவருமே அறிந்திருந்தார்கள்.

முனிவரும் ஸ்வாமியின் பக்தர்தானே. பக்தனுக்கு இம்சை கொடுப்பதை பகவான் விரும்ப மாட்டார் என்பதை நன்றாகவே அறிந்திருந்த கருடன், அவ்விடம் விட்டு அகன்றான்.

சிறு பிராயம் முதல், கருடனுக்கு , நாகர்கள் மீது பகை உண்டாகி இருந்தது .

தன்னுடைய தாயை அடிமை ஆக்கியதோடு அல்லாமல், தன்னையும் வாகனமாக்கி அவமானப்படுத்தினார்கள் என்பது பகை ஏற்படக் காரணமாக இருந்தது.

அடிமைத்தனத்தை  விலக்கியபிறகு, நாகர்களையே உணவாகக் கொண்டான், கருடன். கடலில் அமைந்த 'ரமணத் தீவு' நாகர்களின் உறைவிடமாகத் திகழ்ந்தது. கருடன் அவ்வப்பொழுது ரமணத் தீவிற்குச் சென்று கிடைத்த நாகத்தை எல்லாம் சம்ஹாரம் செய்து வந்தான்.

பின்னென்ன ?  பகைவர்களைப்  பக்குவமாகவா வேட்டை ஆடுவார்கள்?

நாகர்கள், கருடனின் வரவினை அறிந்தவுடனேயே, பெரும் அவலக் குரல் எழுப்பத் தொடங்கினார்கள். அவர்களின் அவலக் கூக்குரலினால், மிகவும் வருத்தமடைந்த சேஷ பகவான், இருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைக்க முன்வந்தார். 

விராட் ஸ்வரூபனுக்கு அடுத்தபடியாக கருடன் வணங்கும் ஸ்வாமி  யாரென்றால் , அவர் சேஷபகவான் தான்.

அவர், இருவருக்கும் உபாயம் ஒன்றைப் பகன்றார் .

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும், ரமணத் தீவில், ஒரு குறிப்பிட்ட பெரிய ஆலமரத்துக்குக் கீழ், கருடனுக்குத் தேவையான ஆகாரமும், அத்துடன் ஒரு பெரிய நாகத்தையும், நாகர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பிட்ட பௌர்ணமி அன்றுதான், கருடன் ரமணத் தீவு செல்ல வேண்டும். அன்று அந்தப் பலியை  ஏற்றுக்கொண்டு, திருப்தி அடைய வேண்டும். வேறு நாகர்களை  துன்புறுத்தக் கூடாது என்பதுதான் அந்த உடன்படிக்கை. இருவருமே ஏற்றுக்கொண்டார்கள்.

கிரமப்படி பல பௌர்ணமிகள் கழிந்தன. தன்னுடைய நூறு தலைகளால் கர்வம் கொண்டிருந்த காளிங்கன், அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த ஒப்பந்தத்தினை உடைக்கும்படியான  ஒன்றைச் செய்தான்.

கருடனுக்காகச் சமர்ப்பித்து இருந்த பலியை, நாகர்கள் எவ்வளவு தடுத்தும் கேளாமல், காளிங்கன், தானே உண்ணத்  தொடங்கினான்.

அப்பொழுது, கருடன் தாழப் பறந்து இறங்கும் நிழலைக் கண்ட மற்ற நாகங்கள் புற்றுக்குள் ஒடுங்கின. ஆனால், காளிங்கன், தன்னுடைய நூறு தலைகளையும் விரித்தபடி சீறியவாறு படமெடுத்தான் .

தன்னுடைய பறந்து விரிந்த இறக்கைகளில், இடது இறக்கையால், ஓங்கி ஒரு அடி கொடுக்க, காளிங்கன், ரமணத் தீவு தாண்டி, சமுத்திரத்தில் போய் விழுந்தான். 

சமுத்திரத்தில் மூழ்கிய படியே, தேவநதி கங்கை, கங்கை மூலம் யமுனை, பின்பு பிருந்தாவனம் சென்று அடைந்தான்.

அனந்த பகவான்  ஆனவர், கருடனின் நிலையை அறிந்து கொண்டவர் .இறைவன், உயிரினங்களுக்குத் தகுந்தபடிதானே உணவையும் படைத்திருக்கிறார்.

காளிங்கன் சென்ற பின் நாகர்கள், எப்பொழுதும் போல் பௌர்ணமி அன்று கருடனுக்கு உணவளித்து வந்தார்கள்.முனிவரின் சாபத்தினை எப்பொழுதுமே நினைவில் கொண்ட கருடன், அதன்படி வழுவினான்.

மேற்சொன்ன தகவலுக்கும் நாக பஞ்சமிக்கும் என்ன தொடர்பு ?

நாகர்களும் ,கருடனும் சம்பந்தப் பட்ட கதை , நாக பஞ்சமி, கருட பஞ்சமிக்காக சொல்லப்பட்டது. நமது புராணங்களின்படி, முக்கியமான நாக ராஜாக்கள், என்பவர்கள், வாசுகி, அனந்தன், சங்கன், கார்கோடகன், காளிங்கன், தக்ஷன், பிங்களன் எனப்படுவார்கள். 

சாயா கிரகங்கள் ஆன ராகுவிற்கும், கேதுவிற்கும் ஆடி அமாவாசை கழிந்த சதுர்த்தி திதி உகந்த நாளாகும்.

பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குபவர், கருட பகவான். இவருக்கு, ஆடி அமாவாசை கழிந்த பஞ்சமி திதி உகந்ததாகும். இந்நாட்களில், நாக தோஷம் உள்ளவர்கள், தடைப் பட்ட திருமணம்  நடக்கவும், புத்திரப்  பேறு இல்லாதவர்கள் அனுகூலம் பெறவும் உகந்த நாட்களாகும்.

ராகு காயத்ரி 

ஓம் நாகத்வஜாய வித்மஹே

 பத்ம ஹஸ்தாய தீமஹி 

தந்நோ ராகு ப்ரசோதயாத் 

கேது காயத்ரி 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே 

சூல ஹஸ்தாய தீமஹி 

தந்நோ கேது ப்ரசோதயாத் 

கருட காயத்ரி 

ஓம் தத்புருஷாய வித்மஹே 

 ஸ்வர்ண பட்சாய தீமஹி 

தந்நோ கருட ப்ரசோதயாத்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com