தூயது ஆவும் துதியே

என்னிடம் கேளுங்கள் உங்களின் வேண்டுதலை அங்கீகரிப்பேன்' என்று அல்லாஹ்
தூயது ஆவும் துதியே

'என்னிடம் கேளுங்கள் உங்களின் வேண்டுதலை அங்கீகரிப்பேன்' என்று அல்லாஹ் அருமறை குர்ஆஈனின் 40-60 ஆவது வசனத்தில் கூறுகிறான். நேய நபி (ஸல்) அவர்கள் நோயுற்ற ஒருவரை நேரில் சென்று விசாரித்தார்கள். நோயினால் அவர் பறவையைப் போல் மெலிந்து நலிந்து இருந்தார். அவரிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்விடம் நீங்கள் என்ன துஆ கேட்டீர்கள்?'' என்று வினவினார்கள்.

நோயாளி- இறைவா! என்னை மறுமையில் வேதனை செய்ய துயரை வேண்டி துஆ செய்வது கூடாது. நன்மையை நாடியே துஆ கேட்க வேண்டும். தூய குர்ஆனின் 2-201 ஆவது வசனம் 'எங்களின் ரட்சகனே! இவ்வுலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நன்மையை எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களை காப்பாற்றுவாயாக' என்று துஆ செய்ய கூறுகிறது என்ற கோமான் நபி (ஸல்) அவர்களின் அறிவுறுத்தலை ஏற்று அந்நோயாளி துஆ என்னும் துதி தெய்தார்; அல்லாஹ் அருளால் நலம் பெற்றார்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அதிகமாக கேட்ட துஆ 'இறைவா! எங்களுக்கு உலகினும் அழகிய வாழ்க்கையை அருள்வாயாக! மறுமையிலும் அழகிய வாழ்வை அருள்வாயாக! நரக வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாப்பாயா!'' அறிவிப்பவர் அனஸ் (ரலி) நூல் -புகாரி, முஸ்லிம். சாந்த நபி (ஸல்) அவர்கள் சாதாரணமாக கேட்ட துஆ 'இறைவா! நிச்சயமாக நான் உன்னிடம் நேர் வழியையும் இறையச்சத்தையும் பேணுதலையும் பிறரிடம் தேவையை தேடாத நிலையையும் கேட்கிறேன்'' அறிவிப்பவர் - அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) நூல்- முஸ்லிம். இனிய நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவும் புதியவருக்கு முதலில் தொழுகையை கற்று கொடுப்பார்கள். இறைவனிடம் பின் குறிப்பிடும் துஆ வைக் கேட்க அறிவுறுத்துவார்கள். "இறைவா! என் பிழைகளைப் பொறுப்பாயாக! எனக்கு அருள்புரிவாயாக! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! எனக்கு உடல் நலனையும் உணவையும் வழங்குவாயாக!' அறிவிப்பவர் - தாரிக்பின் அஷ்யம் (ரலி) நூல்- முஸ்லிம். இந்த துஆ இம்மை மறுமை ஆகிய இரு உலக வளமான வாழ்விற்கு இறைவனிடம் இறைஞ்சும் வேண்டுதல். 

துதியான துஆ வைத் துதிக்க அல்லாஹ்வின் அருளை வேண்ட கேண்மை நபி (ஸல்) அவர்கள் கற்பித்தார்கள். 'இறைவா! உள்ளங்களைத் திருப்புபவனே! எங்களின் உள்ளங்களை உன்னை வழிபடுவதன் மீது திருப்புவாயாக!' அறிவிப்பவர் -அம்ருபின் ஆஸ் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம். உத்தம நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்தபொழுது இந்த துஆவை ஓதியதை அன்னை அறிவிப்பது திர்மிதீயில் உள்ளது.

ஷகல் பின் ஜுமைது (ரலி) கேட்டபடி கேண்மை நபி (ஸல்) அவர்கள் கற்று தந்த துஆ' என் செவி, பார்வை, நாக்கு, இதயம் இதர உறுப்புகளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்' நூல்-அபூதாவூத். திர்மிதீ. இந்த துஆ கெட்டதைக் கேட்காமல் பார்க்காமல் பேசாமல் எண்ணாமல் எத்தீய செயலையும் செய்யாமல் இருக்க, இறைவனிடம் இறைஞ்சுவது. உங்களுக்குக் கேடாகவோ, உங்களின் பிள்ளைகளுக்குக் கேடாகவோ உங்களின் பொருள்களுக்குக் கேடாகவோ நீங்கள் துஆ செய்ய வேண்டாம் என்று விழுமிய நபி (ஸல்) அவர்கள் விளம்பியதை உரைப்பவர் - ஜாபிர் (ரலி) நூல் -முஸ்லிம். ஒருவர் செய்த நன்மைக்கு நன்றி கூறுவதன் பொருட்டு 'அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக' என்று துஆ செய்திட செம்மல் நபி (ஸல்) அவர்கள் செப்பியதைச் செவிமடுத்து சொல்கிறார் உஸாமாபின் ஜைது (ரலி) நூல் திர்மிதீ. நன்றிக்கும் நற்றுவாவே நற்பதில் என்பதே நந்நபி (ஸல்) அவர்களின் நல்லுரை. 

நமக்காகவும் நம்நாட்டிற்காகவும் நம் நாட்டு மக்களுக்காகவும் உலக சமாதானத்திற்காகவும் அமைதியான வாழ்விற்காகவும் அல்லாஹ்விடம் துஆ என்னும் துதி செய்வோம்.
- மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com