சோமவாரப் பிரதோஷம் 

பிரதோஷ தினமானது, ஸ்ரீ சிவபெருமானுக்கு மிகவும் உகந்த தினமாகக் கருதப்படுகிறது
சோமவாரப் பிரதோஷம் 

பிரதோஷ தினமானது, ஸ்ரீ சிவபெருமானுக்கு மிகவும் உகந்த தினமாகக் கருதப்படுகிறது. 

பிரதோஷங்களில், சோமவாரப் பிரதோஷம், சனிப்ரதோஷமும் முக்கியமானவைகளாகக் கருதப்படுகின்றன. 

மாதத்தில், வளர்பிறை திரயோதசியும், தேய்பிறை திரயோதசியும் ஆக, ஒரு வருடத்தில் இருபத்து நான்கு பிரதோஷ தினங்கள் வருகின்றன. 

வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி தேவர்களும், அசுர்களும், திருப்பாற்கடலைக் கடைந்த பொழுது, எத்தனையோ அபூர்வ, ஸ்ரேஷ்டமான வரதானங்கள் நமக்குக் கிடைத்தன என்பது எல்லோரும் அறிந்த விஷயம்தான். 

ஆனால், அதைப்பெறுவதற்கு தேவர்கள் பட்ட கஷ்டங்கள் எழுத்திலோ, சொல்லிலோ வெளிப்படுத்த இயலாது. 

சரி, விஷயத்திற்கு வருவோம். 

தசமி திதியில், பாற்கடலைக் கடைய ஆரம்பித்தார்கள். ஏகாதசி திதியன்று வாசுகியின் உடல் முழுவதும் புண்ணாகி நஞ்சினைக் கக்கத் தொடங்கியது. நஞ்சின் விஷப்புகையைத் தாங்க முடியாமல், தெய்வங்களும், தேவர்களும், கயிலாய மலையைச் சுற்றி, பிரதட்சணமாகவும், அப்பிரதட்சணமாகவும் ஓடி, நந்தியெம்பெருமானிடம் தஞ்சம் புகுந்தனர். 

ஸ்ரீ சிவபெருமான்தங்களுக்கு வந்து உதவி நல்க, நந்தியை தூது செல்லுமாறு பணிந்து கேட்டுக்கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளை, நந்தி, சர்வேசனிடம் எடுத்துரைத்தார். 

ஸ்ரீ மகேசனும், மனமுவந்து, உதவ முன்வந்தார். விஷத்தினைப் பருகுவதைவிட வேறு உபாயம் இல்லை என்று முடிவு கொண்டார். 

விஷத்தினை, பருகிவிட, அதன் வெம்மையைத் தடுக்க, சர்வேசனின் கண்டத்தை, ஸ்ரீ உமா தேவி, தன்திருக்கையால் வருடிவிட, நஞ்சு கண்டத்திலேயே நிற்க,  ' திருநீலகண்டன்'  எனப்பெயர் பெற்றார். 

துவாதசி திதியில், அமிர்தம் பெருகிவர, அதை அள்ளிப் பருகியவர்கள், எப்பொழுதும் போல் ஸ்ரீ சிவபெருமானையே மறந்தார்கள். 

மயக்கம் தெளிந்த அவர்கள், நிலைமையை உணர்ந்து, திரயோதசி திதியன்று, அனைவரும், கைலாயம் சென்று, நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார்கள். அவர்களை, மன்னித்ததிற்கு அடையாளமாக, சந்தியான வேளையில், ஸ்ரீ சிவபெருமான், நடராஜப்பெருமானாக தாண்டவம் ஆடினார். அதுவே 'சந்தியா தாண்டவம் எனப்படுகிறது. 

அந்த ஆனந்தக்கூத்தினை, தேவர்கள், நந்திதேவனின், இரு கொம்புகளுக்கும் இடையே கண்டு களித்தார்கள். 

அனைவரின் தோஷங்களும் அகல, ஸ்ரீ சிவபெருமான், சந்தியா நடனமாடிய வேளையே, பிரதோஷ காலம் எனப்படும். 

8.5.2017, திங்களன்று, சோமவாரப்பிரதோஷம் வருகிறது. அது ஏன் அவ்வளவு முக்கியம்? 

ஒரு முறை, தட்சப்பிரஜாபதி கொடுத்த சாபத்தால், சந்திரபகவானின், ரூபலாவண்யம் தேயத் தொடங்கியது. அந்தக்குறைக்கு, ஸ்ரீ சிவபெருமான், ஒரு மாற்று அனுக்கிரகத்தைக் கொடுத்தார். 

தேயும் ரூபமானது, மீண்டும் ஒவ்வொரு நாளாக ஒளிர்ந்து, பதினைந்து நாட்களில் முழுப்பொலிவுடன் பூரண சந்திரனாகத் திகழ்வான் என்று அருளினார். சந்திரபகவான், இந்த அனுக்கிரகத்தைப் பெற்றது, ஒரு பிரதோஷ தினமான திரயோதசி அன்றுதான். 

சந்திரனுக்கு உகந்த தினமான, திங்களன்று, உயிர்களெல்லாம் ஒடுங்கும், சந்தியான வேளையில், சோமவாரப்பிரதோஷ நாளன்று,  நீலகண்ட பதிகத்தைப் படிப்பதுடன், ஆலயத்திற்குச் சென்று, ஸ்ரீ அம்பாள்,  ஸ்ரீ ஆலகால சுந்தரர்,  ஸ்ரீ நந்தி பகவான் ஆகியோரை வழிபட்டு, நற்பலன்கள் அனைத்தையும் பெறுவோம். 

- மாலதி சந்திரசேகரன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com