சித்திரகுப்த ஜெயந்தி 

வருடத்தின் முதல் மாதமான, சித்திரையில், பௌர்ணமி அன்று அனுசரிக்கப்படும்

வருடத்தின் முதல் மாதமான, சித்திரையில், பௌர்ணமி அன்று அனுசரிக்கப்படும் தினமே சித்ரா பௌர்ணமி எனப்படும். 

அதற்கு என்ன அப்படி ஒரு முக்கியத்துவம்? அன்றுதான் சித்திரகுப்தன் தோன்றிய தினம்.

சித்திரகுப்தன் தோன்றிய காரணம் பலவாறாகக் கூறப்பட்டாலும், ஒரு வரலாற்றுக் கதை தான் இன்றுவரை பரவலாகக் கூறப்பட்டு வருகிறது.

தேவேந்திரனும், இந்திராணியும், தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று சிவபெருமானைப் பணித்து நின்றனர். அப்பொழுது அவர், தக்க நேரத்தில் குறை நிவர்த்தி செய்யப்படும் என்று ஆசிர்வதித்தார்.

சிவபெருமான், தன்னைப் போலவே தோற்றமுடைய ஒரு சித்திரத்தினை வரைந்தார். பதி வரைந்த சித்திரத்திற்கு, பார்வதி தேவி ஜீவன் கொடுத்தார். அவர் சித்திர புத்திரர் ஆனார்.

சர்வேஸ்வரன், சித்திர புத்திரரிடம், 'நீ  ஒரு பூவாக மாறி தேவேந்திரனின் மாளிகையில் உள்ள பொய்கையில் இருந்து வா.. தடாகத்தில் நீர் அருந்த வரும் பசுவால் உணவாகக் கொள்ளப்பட்டு, பசுவின் வயிற்றில் கருவாக வளர்ந்து, ஒரு புத்திரனாக வெளிவரும் உன்னை, தேவேந்திரன், இந்திராணி தங்கள் மகவாய் சுவீகரிக்கப்பார்கள். சிறிது காலம் அவர்களுடன் இருந்து, பின்பு யமலோகம் எய்தி, பூ லோகத்தில், ஒவ்வொருவர் செய்யும் நன்மை, தீமைகளை, பாவ, புண்ணியங்களைக் குறிப்பெடுத்து, யமனிடம் சேர்ப்பித்து அவருக்கு  உதவி வருவாய்' என்று அருளினார்.

அதன் படியே சித்திர புத்திரரும் ஒழுகினார்.

அவர் திருமொழிப்படி, தடாகத்தில் இருந்த புஷ்பத்தை, தேவேந்திரனின் வளர்ப்பு பசு நீருடன் சேர்த்து சுவைக்க, அதன் வயிற்றில் சிசுவாக வளர்ந்து வந்தார்.

சித்திரை மாதத்தில், பௌர்ணமி தினத்தில், பிரும்ம முகூர்த்தத்தில், அப்பசு, ஒரு ஆண்மகவை ஈன்றெடுத்தது.

அந்த மகவை தேவேந்திரன் சுவீகரித்தான்.

இதுதான் சித்திர குப்தனின் அவதார வரலாறு. அவர்  அவதரித்த நாளே, சித்திரா பௌர்ணமி அல்லது சித்திர புத்திர ஜெயந்தி என்று வழங்கப் படுகிறது.

அக்குழந்தை, ஈஸ்வரனால் தங்களுக்கு  அளிக்கப்பட்ட வரப்பிரசாதம் என்று மகிழ்ந்த தேவேந்திர தம்பதியினர், அக்குழந்தைக்கு 'சித்திர குப்தன்' என்று பெயரிட்டு செம்மையுடன் வளர்த்து வந்தார்கள்.

இளம் பிராயத்தில் இருந்த சித்திர குப்தன், தான் கைலாயம் செல்ல விரும்புவதாய்க் கூறவே, இந்திர லோகத் தம்பதி, அவர்  விருப்பத்திற்கு முதலில் வருந்தினாலும், முடிவில் வேறு வழி இல்லாமல் இசைந்தார்கள்.

அவரும், யமதர்ம அரசனின் பட்டணம் ஏகி, ஒவ்வொருவரின் பாவ, புண்ணியங்களை குறிப்பெடுக்கும் முக்கியமான பொறுப்பினில் அமர்ந்தார்.

***

புராணக் கதையை தெரிந்து கொண்டோம்.இனி லௌகீக முறைகளைப் புரிந்து கொள்வோம். அன்றைய தினம், பூஜை அறையே சுத்தம் செய்து, வீட்டில், மாக்கோலம் இட்டு, சிவரூபத்திலிருந்து உயிர்ப்பெற்றதால், சிவ ஆராதனை முடித்து, சித்திர குப்தன் படம் இருந்தாலும் வைத்து, பொங்கல், பானகம் நைவேத்தியம் செய்து வழிபடவேண்டும்.

பசுவிடம் இருந்து  வெளிவந்ததால், அன்றைய தினம், பால் சம்பந்தப்பட்ட எந்த பதார்த்தத்தையும் உண்ணக்கூடாது. இது, சித்திர குப்தனை ஈன்ற பசுவிற்கு நன்றி நவிலுதல் போல் ஆகும்.

அன்றைய தினத்தில் தானங்கள் செய்தால், அதிக பலன்கள் உண்டு,

என்ன, தினமணி டாட் காம் வாசகர்களே, கவனமா இருங்க. அவர் பெரிய லிஸ்ட்டா போட்டுவிடப் போகிறார். கொஞ்சம் காக்காய் பிடித்து வைத்துக் கொள்வோம் .

- மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com