வித்யைகளில் பரிமளிக்க பரிமுகனை ஆராதியுங்கள்

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றியவர், ஸ்ரீ பிரும்மா. 
வித்யைகளில் பரிமளிக்க பரிமுகனை ஆராதியுங்கள்

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றியவர், ஸ்ரீ பிரும்மா. 

பிரும்மா, தன் இருப்பிடமான, பத்மத்தில் அமர்ந்து கொண்டு, உலகத்தை சிருஷ்டிக்க வேண்டிய பணிகள் பற்றி மனனம் செய்து கொண்டிருந்தார். ஆனால் ஏதோ ஒரு குறைபாட்டினால்தான் அந்த ஞானம் தனக்கு சம்பவிக்கவில்லை என்று உணர்ந்து கொண்டார். 

ஸ்ரீ மகாவிஷ்ணுவை அணுகி, அதற்குண்டான காரணத்தைக் கேட்டார். 

கையிலைக்கு ஏகி, சிவபெருமானை தரிசித்தால், அவரால் காரணத்தைக் கூற முடியும் என்று பதிலளித்தார். 

பிரும்மாவும், ஸ்ரீ பகவானின் கூற்றுப்படி முக்கண்ணனைத் தரிசித்த பொழுது, கணநாதனைப் பணிந்து அவரின் அருளைப் பெற்றாலொழிய, எந்தச் செயலும் முழுமையடையாது  என இயம்பினார். 

அதன்படி, ஸ்ரீ விக்ன ராஜனைப் பணிந்து, தன் சேவையைத் தொடங்கினார். 

லோக தர்மங்களுக்கெல்லாம் வேதம்தான் ஆதாரமாக விளங்குகிறது. நாம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்களை, வேதங்கள்தான் உணர்த்துகின்றன. 

தொன்றுதொட்ட காலம் முதல் பரம்பரை பரம்பரையாக, செவி வாயிலாகத்தான் வேதங்கள் அறியப்பட்டன. 

ஸ்ரீமந்நாராயணன் விட்ட மூச்சுக்காற்றின் வழியே, அலை அலையாக வெளி வந்தன என்றும், அந்த வேத உபதேசத்தினை பிரும்மதேவனே முதலில் பெற்றார் என்றும் அறியப்படுகிறது. 

வேத உபதேசத்தின் மூலமே, ஸ்ரீ பிரும்ம தேவர், படைப்புத் தொழிலை நிறைவேற்ற முடியும் என்பதை அவரும் அறிந்திருந்தார். 

நான்முகன், ஸ்ரீ விஷ்ணுவினால் உபதேசிக்கப்பட்ட, 'ரிக்', 'யஜுர்', 'சாமம்' அதர்வணம்' ஆகிய நான்கு வேதங்களையும், நான்கு குழந்தைகளாக்கினார்.  

எம்பெருமானிடம் இருந்து, நேரிடையாக உபதேசம் பெற்ற மமதை, படைப்புத் தொழில் ஏற்ற தேவனிடம் சற்று தாராளமாகவே காணப்பட்டது. 

அதையறிந்த பெருமான், நான்முகனை நல்வழிப்படுத்த திருவுள்ளம் கொண்டார். 

பகவத் சங்கல்பத்தால், மது என்பவன், ரஜோ குணமுடைய அசுரனாகவும், கைடபர் என்பவன், தமோ குணமுடைய அசுரனாகவும் தோன்றினர். 

ஸ்ரீ நாராயணன், சயனக் கோலத்தில் இருந்த சமயத்தில், மது கைடப அசுரர்கள், குழந்தைகளாக உருப்பெற்றிருந்த நான்கு வேதங்களையும், குதிரைகள் ரூபத்தில் வந்து கவர்ந்து சென்று, மறைத்து வைத்தனர்.

வேதங்கள் பறிபோனதை அறிந்த சதுர்முகன், கவலையில் ஆழ்ந்தார். 

அவர் பெற்றிருந்த அபூர்வ ஞானம், சக்தி அனைத்தும் அவரை விட்டு விலகின. 

ஸ்ரீ பிரும்மாவின் படைப்புத் தொழில் நின்றது. 

வேதங்களை இழந்த லோகம் இருளில் மூழ்கியது. 

தேவர்கள் அஞ்சி நடுங்கினர். 

சதுர்முகன், ஸ்ரீ பரமாத்மாவை அணுகினார். 'வேதங்களே நான் உபாசிக்கும் தெய்வம். எனக்கு பலமும் வேதங்கள்தாம். பகவானே, தாங்கள் யோக நித்திரையிலிருந்து எழுந்து, வேதங்களை மீட்டுக் கொடுத்து, மீண்டும் ஞானத்தை அளிக்க வேண்டும்' என்று வேண்டி நின்றார். 

அவருக்கு அபய ஹஸ்தம் அனுக்கிரகித்த எம்பெருமான், துஷ்டர்களைக் களைய, ஸ்ரீ ஹயக்ரீவராய் அவதாரம் செய்தார். 

இனி ஸ்ரீ ஹயக்ரீவர் அவதார மூர்த்தியைப்பற்றிக் காண்போம். 

ஆவணி மாதம், பௌர்ணமி திதியில், திருவோண நட்சத்திரம் கூடிய சுபதினத்தில், அஸ்வ  வதனம்,  நரன்  உடல் கொண்டு, அஷ்ட கரங்களுடன்,   அழகிய நீண்ட நாசியுடன், ஆகாயமும், பாதாளமும் இரு கர்ணங்களாகவும், சூரிய கிரணங்கள் பிடரி கேசமாகவும், பூமியே நெற்றியாகவும், ஸ்ரீ சூரியனும், ஸ்ரீ சந்திரனும் இரு நயனங்களாகவும், ஸ்ரீ கங்கா மாதாவும், ஸ்ரீ  சரஸ்வதி மாதாவும் புருவங்களாகவும், ஸந்தியா தேவதை நாஸிகையாகவும், கோலோகமும், பிரும்ம லோகமும் இரண்டு உதடுகளாகவும், பித்ரு தேவதைகள் பற்களாகவும், காளராத்திரி கழுத்தாகவும் அமையப்பெற்று, ஸ்ரீ ஹயவதனப் பெருமாள் அவதாரம் செய்தார். 

ஸ்ரீ பெருமாள், பாதாள லோகத்திற்கு விரைந்து, 'உத்கீதம்' எனப்படும் சாம வேத ஸ்வரத்தை எழுப்ப, அசுரர்கள், ஒலி வந்த திக்கு நோக்கி விரைந்தார்கள். 

அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வேதங்களைக் கைப்பற்றி, ஸ்ரீ பிரும்மாவிடம் அளித்தார், ஸ்ரீ பகவான். 

மறைத்து வைத்திருந்த குழந்தைகளைக் காணாமல், அசுரர்கள், ஸ்ரீ நான்முகனைத் தேடி வந்தனர். 

ஸ்ரீ சதுர்முகனின் அருகில் ஸ்ரீ சங்கு சக்ரதாரியைக் கண்ட அசுரர்கள், அவருடன் கடுமையான போரில் ஈடுபட்டனர். 

ஆடையால் மூடப்படாத இடத்தில்தான் வதைக்கப்படவேண்டும் என்று வரம் பெற்றிருந்த அசுரர்களை, தன்னுடைய ஆடை விலக்கிய துடையில் கிடத்தி, அவர்களை வதைத்தார். 

ஸ்ரீ ஹயவதனப் பெருமாள், பிற்காலங்களில்,  நான்கு திருக்கரங்களுடன்,   வரத ஹயக்ரீவர், அபய ஹஸ்த ஹயக்ரீவர், யோக ஹயக்ரீவர் ஸ்ரீ லக்ஷ்மி பிராட்டியை, இடது பக்கத்தில் அமர்த்தி, சேவை சாதிப்பது போன்ற அர்ச்சாவதார மூர்த்திகள் நடைமுறையில்   உள்ளன.  

எல்லோரும் ஞானம் பெற ஸ்ரீ சரஸ்வதி தேவியை வேண்டி நிற்போம். அந்த ஞான தேவிக்கே குருவானவர், ஸ்ரீ ஹயக்ரீவர். 

கல்வி கேள்விகளில் சிறக்கவும், நல்ல ஞாபக சக்தி பெறவும், பணியில் உயர்ந்து சிறந்து விளங்கவும், நிறைந்த ஜஸ்வர்யத்தைப் பெறவும், ஸ்ரீ ஹயவதனப் பெருமாளை துதித்து சிறந்து விளங்குவோம். 

ஸ்ரீ ஹயக்ரீவர் காயத்ரி. 
ஓம் தம் வாகீச்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி 
தந்நோ ஹஸெள ப்ரசோதயாத் !

ஸ்ரீ ஹயக்ரீவர் துதி மந்திரம். 
ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் 
ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com