சிவபெருமானுக்கு இத்தனை மனைவியரா?

சிவபெருமானுக்கு பல மனைவியர் உள்ளார்கள் என்று தெரியுமா? அவர்கள் அனைவரும்
சிவபெருமானுக்கு இத்தனை மனைவியரா?

சிவபெருமானுக்கு பல மனைவியர் உள்ளார்கள் என்று தெரியுமா? அவர்கள் அனைவரும் பெண்மை சக்தியின் சின்னங்கள். இவர்கள் யாரென குழப்பமாக உள்ளதா?

வெகுகாலம் சிவபெருமான் திருமணமாகாமல் இருந்தார்.  பல ஆண்டுகாலம் தவம் இயற்றிக் கொண்டிருந்தார். தம்மை யாரும் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்று யாரும் அறியாத ஓரிடத்தில் தியானம் செய்துவந்தார். இப்படியே சிவன் தியானத்தில் இருந்தால் என்ன செய்வது என அவருடைய நன்மைக்காக பிரம்ம தேவனும் மகாவிஷ்ணுவும் ஆலோசித்தனர். சிவனுக்கு மணமகளாக சக்தியை பிரம்ம தேவன் பரிந்துரைத்தார்.

சக்தி

பால்ய காலத்திலிருந்தே சிவபக்தி அதிகம் சக்திக்கு. வாழ்ந்தால் சிவனுடன் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைத்தாள். சதி என்று அவளுக்கு மற்றொரு பெயர் உண்டு. பல இடங்களில் இருந்து வரன் வந்தாலும் கூட அவற்றை எல்லாம் நிராகரித்து சிவனை நோக்கி தவம் புரிய ஆரம்பித்தாள். தீவிர தவத்தில் இருந்த அவள், நாளடைவில் உணவு மற்றும் நீரைத் துறந்து, இலைகளை மட்டுமே உட்கொண்டு, பின் அதையும் கூட துறந்தாள்.

சக்தியின் கடும் தவத்தை மெச்சி, சிவபெருமான் அவள் முன் தோன்றினார். அவள் மனத்தில் இருந்ததை அறிந்த சிவபெருமான் அவளை பார்த்து புன்னகைத்தார். தன் கோரிக்கையை அவள் கூறுவதற்கு முன்பாகவே, சிவபெருமான் அவளை மணக்க முன் வந்தார்.

பார்வதி

பார்வதி என்றால் மலை என அர்த்தம். இளமைப் பருவத்திலிருந்தே பார்வதிக்கு சிவன் மீது அளவற்ற அன்பு. அவள் வளர வளர சிவனின் மீதான காதலும் வளர்ந்து கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் அந்தக் காதல் சிவனை மணந்தே தீருவது என்ற பிடிவாதத்தை பார்வதிக்கு ஏற்படுத்தியது. அவரின் காதலையும் அன்பையும் பெற முடிவு செய்து தவம் இயற்றினாள். அதுவும் சிவன் தவம் செய்த அதே குகைக்கு பார்வதி சென்றாள். முதலில் அந்த இடத்தை சுத்தம் செய்து பூக்களாலும் அழகிய கோலங்களாலும் அலங்கரித்தாள் பார்வதி. பார்வதியின் இச்செயல் சிவனை சிறிதும் அசைக்கவில்லை. அவர் ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்தார். காட்டில் அலைந்து திரிந்து சிவனுக்காக பழங்களைக் பக்தியுடன் கொண்டு வந்தாள் பார்வதி. ஆனாலும் அவரிடம் அதை சேர்ப்பிக்க முடியவில்லை. கடுமையான தவத்தில் சிவன் இருந்தார். கடைசி முயற்சியாக, தானும் சிவனைப் போல தவம் செய்ய பார்வதி முடிவு செய்தாள். உணவு துறந்து மிகக் கடுமையான தியானம் செய்தாள்.

பார்வதியின் தவத்தால் மனம் இளகிய பிரம்ம தேவன் பார்வதி தேவிக்கு ஒரு வரத்தை அளிக்க முன் வந்தார். சிவன் தன்னை ஏறெடுத்துப் பார்க்காத காரணம் தன்னுடைய கருப்பு நிறமாக இருக்கலாம் என்றெண்ணிய பார்வதி பிரம்மனிடம் தான் சிவந்த நிறமுள்ள அழகிய பெண்ணாக மாற வேண்டும் என்ற வரம் கேட்டாள். அவ்வரத்தை அளித்த பிரம்ம தேவன், அவ்வண்ணமே பார்வதியை மிக அழகான செக்கச் சிவந்த பெண்ணாக மாற்றினார். உருமாறிய பார்வதி மீண்டும் குகைக்குள் சென்றார். அவளுடைய அழகில் மயங்கிய சிவன் பார்வதியை திருமணம் செய்து கொண்டார்.

உமா

சதி மறைந்து அவள் மீண்டும் உமாவாக அவதரித்தாள் என ஒரு புராணக் கதை உண்டு. சதி இறந்துபோனதால் சிவன் மனம் வருந்தி இருந்தார். சிவபெருமானுடன் மீண்டும்  சேர்வதற்காகவே உமா அவதரித்தாள். புதிய பிறவியில் உமாவுக்கு சிவனை நினைவிருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிவபெருமானுக்கு அவள் துளியும் நினைவில் இல்லை. முந்தைய பிறவியில் சிவன் யார் என்றும் அவருடன் தனக்கு நடந்த விவாகத்தைப் பற்றியும் உமா அடிக்கடி நினைத்துக் கொள்வாள்.

இந்தப் பிறவியிலும் மீண்டும் சிவனுடைய மனைவியாக வேண்டும் என்பதே அவளுடைய ஒரே விருப்பம்.  வழக்கம் போல சிவன் அவளை சற்றும் கண்டுகொள்ளவில்லை. அவருடைய நினைவுக்குள் புகுந்து தன்னை நிரூபிக்க உமாவுக்குத் தெரியவில்லை. தவித்தாள். பல்வேறு தடைகளுக்குப் பிறகே சிவனுக்கு அவள் தன் மனைவி சதியின் மறு அவதாரம் எனத் தெரிந்தது. அதன் பின் உமா சிவன் இருவரின் திருமணமும் அமோகமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகு கணேசனையும், முருகனையும் பெற்றாள் உமா.

காளி

மகாபாகவத புராணத்தில்காளியைப் பற்றி சில கதைகள் உள்ளன. இதில் சதியும் காளியும் ஒருவரே எனச் சித்தரிக்கப்பட்டுள்ளது. காளியை தன் மனைவியாக்கி கொள்ள ஒரு போட்டி நடைபெற்றது. தன்னை மணக்க விரும்பியவர்களின் முன் காளி தேவி மிகவும் அகோரமாக தோன்றினார். அதை பார்த்தவர்கள் பயந்து போய்விட்டனர். ஆனால் சிவன் மட்டும் பயம் கொள்ளாமல் இருந்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற்று, தக்ஷாவின் மகளாக சதியாக காளி தேவி பிறக்கையில் அவரை மணந்தார் சிவபெருமான் என்றும் அப்புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

துர்கா

பெண் தெய்வங்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்றவள் துர்கா. இவளும் சிவனின் மனைவி என்றே புராணம் கூறுகிறது. துர்கா என்பது தேவி அல்லது கடவுள்களின் தாய் என்று அர்த்தம். துர்காதான் சதி என்றும் பார்வதி என்றும் புராணங்கள் கூறுகின்றது.

பார்வதியின் வெவ்வேறு வடிவங்கள் தான் மேற்சொன்ன அனைவரும். அவர்களேதான் சக்தி, உமா, துர்கா மற்றும் காளி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிறப்பானவர்கள். காதலுக்கானவள் பார்வதி. தாய்மையின் சின்னம் உமா , நியாய தர்மங்களை காப்பவள் துர்கா, அநீதியை எதிர்த்து மரணத்தை குறிப்பவள் காளி. சிவபுராணத்தில் இவர்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com