பாவச் சுமைகளை நீக்கும் மயிலாடுதுறை திருக்கோயில்கள் (பகுதி 1)

காவிரிக் கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள் காசிக்கு நிகராகக் கருதப்படுகின்றன.


காவிரிக் கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள் காசிக்கு நிகராகக் கருதப்படுகின்றன. அவை –

  • திருமயிலாடுதுறை
  • திருவையாறு
  • திருவெண்காடு
  • திருவிடைமருதூர்
  • திருவாஞ்சியம்
  • திருசாய்க்காடு

இவற்றில் மாயவரம், மாயூரம் என்று அழைக்கப்படும் மயிலாடுதுறை திருத்தலம், மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும்.

புண்ணிய நதிகளான கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள், மக்கள் நீராடியதால் அவர்களின் பாவக்கறை தங்கள் மீது படிந்துள்ளதால், தங்களைப் புனிதப்படுத்த வேண்டுமென சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான், “மாயூரத்தில் ஓடும் காவிரியில் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நதியாக நீராடித் தங்கள் பாவச் சுமைகளை நீக்கிப் புனிதம் பெறலாம்” என்று அருளினார்.

அதன்படி, ஐப்பசி மாதத்தில் கங்கை உள்ளிட்ட நதிகள் மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் நீராடி, தங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு புனிதம் அடைந்தன. அவர்களுடன் தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் போன்றோரும் மாயூரத்தில் உள்ள காவிரியில் நீராட வருகின்றனர். ஆகையால், துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும்.

கங்கைக்கே புனிதம் தரும் நதியாக காவிரி விளங்குவது சிறப்புக்குரிய ஒன்றாகும். ஐப்பசியில் முதல் நாளன்று முதல் முழுக்கு, அமாவாசையன்று அமாவாசை முழுக்கு, மாத நிறைவு நாளன்று கடைமுழுக்கு என மூன்று நாட்களிலும் காவிரி தென்கரையில் மாயூரநாதர், மாயூரம் ஐயாறப்பர், காசி விஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர், பஞ்சமூர்த்திகளுடனும், வடகரையில் வேதாரண்யேஸ்வரர் எனும் வள்ளலார், பஞ்சமூர்த்திகளுடனும் காவிரி துலாகட்டத்தில் காட்சிதரும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

இப்படி பல பெருமைகள் பெற்ற மயிலாடுதுறையை மையமாகக் கொண்டு சப்தஸ்தான தலங்கள் என போற்றப்படும் ஏழூர் கோயில்கள் உள்ளன. அவை –

            1. மயிலாடுதுறை - ஐயாறப்பர் கோயில்
            2. தனியூர் - புனுகீஸ்வரர்
            3. சித்தர்காடு - பிரம்மபுரீஸ்வரர்
            4. மூவலூர் - மார்க்கசகாயர்
            5. சோழம்பேட்டை - அழகியநாதர்
            6. துலாகட்டம் - காசிவிஸ்வநாதர்
            7. மயூரநாதர்

மயிலாடுதுறையை மையமாகக் கொண்டு நான்கு திசைகளிலும் நாற்றிசை வள்ளல்கள் உண்டு. அவை -

     1. கிழக்கே திருவிளநகரில் துறைகாட்டும் வள்ளல்
     2. தெற்கே பெருஞ்சேரியில் மொழிகாட்டும் வள்ளல்
     3. மேற்கே மூவலூரில் வழிகாட்டும் வள்ளல்
     4. வடக்கே உத்திர மாயூரத்தில் கைகாட்டும் வள்ளல்

மேலும், காவிரிக்கரை விஸ்வநாதர் மூவர் உள்ளனர். அவை -  

              1. கூறைநாடு காசிவிஸ்வநாதர்
              2. படித்துறை காசிவிஸ்வநாதர்
              3. துலாகட்டம் காசிவிஸ்வநாதர்

இவை தவிர, மயிலாடுதுறையைச் சுற்றி ஐந்து கிலோ மீட்டர் சுற்றுக்குள் திருஇந்தளூர் திருக்கோயில், கழுக்காணி முட்டம் திருக்கோயில், பல்லவராயன் பேட்டை திருக்கோயில், கருங்குயில்நாதன் பேட்டை திருக்கோயில், நல்லத்துக்குடி திருக்கோயில் ஆகியவையும் உள்ளன. இக்கோயில்களை இந்த ஐப்பசி மாதத்தில் தரிசித்து நீங்கள் எல்லாம் வல்ல இறைவனின் கருணைக்குப் பாத்திரமாக வேண்டுகிறேன்.
*
மயிலாடுதுறை ஐயாறப்பர் திருக்கோயில்

இறைவன் – ஐயாறப்பர்; இறைவி - அறம் வளர்த்த நாயகி

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஐயாறப்பர் ஆலயம்.

திருவையாறில் எழுந்தருளியிருக்கும் இறைவன் ஐயாறப்பரும், இறைவி அறம்வளர்த்த நாயகியும், அதே பெயர்களில் இங்கும் எழுந்தருளியிருக்கின்றனர்.

தஞ்சாவூர் அருகே உள்ளது சக்கரப்பள்ளி. அங்கே நாதசன்மா என்ற சிவபக்தர் வசித்து வந்தார். அவருடைய மனைவி அநவித்யை. அவளும் ஒரு சிறந்த சிவபக்தையாக திகழ்ந்தாள். இருவரும் தினசரி மூன்று வேளையும் திருவையாறில் அருள்பாலிக்கும் இறைவன் ஐயாறப்பரையும், அன்னை அறம்வளர்த்த நாயகியையும் பூஜை செய்து வந்தனர். ஐப்பசி மாதக் கடைசி நாளன்று மாயூரம் (இன்று, மயிலாடுதுறை) நடைபெறும் விழா கடைமுழுக்கு. அன்று அங்குள்ள அனைத்து ஆலய மூர்த்திகளும் உலாவந்து, மாயூரநாதர்-அபயாம்பிகையோடு காவிரியில் தீர்த்தம் கொடுப்பது வழக்கம். துலா மாதமாகிய ஐப்பசியில் அறுபத்தாறு கோடி நதிகளும் காவிரியில் கலப்பதாக ஐதீகம். அதனால் இங்கு நீராடுவதால் பல தலைமுறைகளாக நாம் செய்த பாவம் கரைந்து போகும் என்பது அனைவரின் நம்பிக்கை.

நாதசன்மா - அநவித்யை தம்பதிக்கு, இந்த ‘கடை முழுக்கு’ விழாவில் கலந்துகொண்டு, துலா கட்டத்தில் நீராட வேண்டும் என்பது  நீண்டநாள் ஆசை. உடனே, காலை பூஜைகளை திருவையாறில் முடித்துவிட்டு இரவு திரும்பிவிடும் எண்ணத்தோடு மாயூரம் புறப்பட்டனர். ஆனால், இரவு நேரம் நெருங்கிவிட்டது. நினைத்தபடி ஐப்பசி கடைசி நாளில் பகலில் காவிரியில் நீராட முடியவில்லையே என வேதனைப்பட்டனர்.

இரவு நேரம் ஆகிவிட்டதால், அவர்களால் உடனடியாக திருவையாறுக்குத் திரும்பி ஐயாறப்பரையும் தரிசனம் செய்ய முடியவில்லை. இதனால் அவர்கள் பெரும் கவலையடைந்தனர். அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. ‘கவலை வேண்டாம். பொழுது விடிவதற்குள் காவிரியில் போய் நீராடுங்கள். உங்களுக்கு ஐப்பசியில் நீராடிய அனைத்து புண்ணியங்களும் கிடைக்கும். மேலும், திருவையாற்றுக்குத் திரும்ப முடியவில்லையே என வருந்த வேண்டாம். மாயூரநாதர் ஆலயத்துக்கு மேற்கில் உள்ள ஆலயத்தில் யாம் எழுந்தருளியுள்ளோம். அங்கு வந்து எம்மைத் தரிசித்துச் செல்லுங்கள்’.

அதன்படி, இருவரும் மறுநாள் விடியற்காலையில் காவிரியில் நீராடிவிட்டு, ஆலயத்துக்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டனர். தன்னை வணங்கிய இருவரையும் தன்னுள் ஐக்கியமாகும்படி இறைவன் பணிக்க, அப்படியே நாதசன்மாவும், அநவித்யையும் சிவபெருமானுடன் ஐக்கியமாயினர். நாதசன்மா ஐக்கியமான சிவலிங்கம், மாயூரநாத சுவாமி ஆலயத்தில் கணக்கடி விநாயகர் சந்நதிக்கு அருகே தனிச் சந்நதியில் அமைந்துள்ளது. அநவித்யை ஐக்கியமான சிவலிங்கம், மாயூரநாதர் ஆலயத்தில் உள்ள அன்னை அபயாம்பிகை சந்நதிக்கு தென்புறத்தில் இருக்கிறது. அநவித்தை ஐக்கியமான சிவலிங்கத்துக்கு வழக்கமான ஆடை அலங்காரங்கள் கிடையாது. மாறாக, சிவலிங்கத்துக்கு இங்கு சேலையையே அணிவிக்கின்றனர். இது எந்த சிவாலயத்திலும் காண முடியாத சிறப்பு அம்சமாகும்.

இந்த ஐயாறப்பர் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்று நிலை முதன்மை கோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் திருக்குளமும், அதன் அருகே படித்துறை விநாயகர் ஆலயமும் உள்ளன. ராஜகோபுரத்தை கடந்ததும், விசாலமான பிராகாரத்தில் பலிபீடம், நந்தியம்பெருமான், கொடிமரம் ஆகியவை உள்ளன. மேற்கு பிராகாரத்தில் விநாயகர், தென்கயிலைநாதர், வடகயிலைநாதர், வள்ளி-தெய்வானை சமேத முருகன், மகாவிஷ்ணு, கஜலட்சுமி சந்நதிகள் உள்ளன.

மகா மண்டபத்தில் கருங்கல் நடராஜர் - சிவகாமி உள்ளனர். மண்டப சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகள் நிறைந்துள்ளன.

பின் புறம் கருவறை கோட்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் உள்ளார். இவரை வணங்குவோருக்கு திருமணத் தடை நீங்குகிறது. தென்புறம் தென்முகக் கடவுள் அழகிய வடிவுடன் உள்ளார். அடுத்த கோட்டத்தில் விநாயகர் உள்ளார். தென்புறத்தில் அறுபத்து மூவர் சிலைகள் உள்ளன. அதன் கடைசியில் சரஸ்வதி உள்ளார். கோயில் தற்போதுதான் குடமுழுக்குப் பொலிவுடன் உள்ளது.
*

மயிலாடுதுறை கூறைநாடு புனுகீஸ்வரர் கோயில்

இறைவன் – புனுகீஸ்வரர்; இறைவி - சாந்த நாயகி

சோழ நாடு பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது, அவற்றில் கூறைநாடு என இப்பகுதிக்குப் பெயர். கூறைப் புடைவைகள் நெய்யும் செங்குந்தர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால், அந்தப் புடைவையின் பெயராலேயே கூறை நாடு என அழைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.

இந்திரன், புனுகுப்பூனை உருக்கொண்டு பூஜித்த இறைவன் என்பதால் ஈசன் ‘புனுகீஸ்வரர்’ என்ற பெயரைப் பெற்றார்.

ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது, முன்மண்டபத்தில் கொடி மரம் உள்ளது. கொடி மரத்தை அடுத்து பலிபீடமும், நந்தியும் உள்ளன. கோயில் வளாகத்தின் இடப்புறம் முதலில் அம்மன் சன்னதி உள்ளது. அம்பிகை கருவறையைச் சுற்றி வரும்போது சண்டிகேஸ்வரி சன்னதியைக் காணலாம். அம்மன் சன்னதியின் முன்பாக பலிபீடமும், நந்தியும் உள்ளன. அம்மன் சன்னதி அருகே அலங்கார மண்டபமும், பள்ளியறையும் உள்ளன.

கருவறைக்கு வெளியில் உள்ள முதல் பிராகாரத்தில் சுற்றி வரும்போது, இடப்புறம் முருகன் வள்ளி தெய்வானை உள்ளனர். முருகன் சன்னதி உட்புறமாகவே மகாலட்சுமி சன்னதியும் உள்ளது.

பின்புறம் கருவறை கோட்டங்களில் பிரம்மன், துர்க்கை, லிங்கோத்பவர் தென்முகக் கடவுள், ஜுரகறேஸ்வரர் உள்ளனர். லிங்கோத்பவர் அருகில் சுவற்றில் சமீப கால கல்வெட்டு ஒன்று உள்ளது தென்முகக் கடவுளின் மேல் வரந்தையில் ஒரு கல்வெட்டும் ஓவியமும் உள்ளது.

இத்தலத்தில், திருஅவதாரம் செய்ததாகக் கருதப்படுபவரும்,  அறுபத்துமூன்று நாயனார்களில் ஒருவருமாகிய நேசநாயனாரின் சந்நிதி உள்ளது. சிவனடியார்களுக்கு ஆடைகள் அளிக்கும் தொண்டினை இவர் செய்ததாகப் பெரியபுராணம் கூறுகிறது.

தற்போது (அக் 2016) கோயிலில் திருப்பணி நடைபெற்று வருகிறது.
*

மயிலாடுதுறை - துலாகட்டம் காசிவிஸ்வநாதர் கோயில்

இறைவன் – காசிவிஸ்வநாதர்; இறைவி - காசிவிசாலாட்சி

மயிலாடுதுறை மகாதானத் தெருவின் வடக்கில் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது இக்கோயில். திருத்தருமபுரம் மடத்தின் பொறுப்பில் உள்ள கோயில் இதுவாகும்.

கிழக்கு நோக்கியபடி, சிறிய சந்துபோல் வாயில் இருப்பினும், ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ளது கோயில் வளாகம். ஆதீனகர்த்தர் காசி சென்று திரும்பியதன் நினைவில் கட்டப்பட்ட கோயில் இதுவாகும். இதன் விமானமே இதன் சிறப்பம்சம் ஆகும். ஒரு ஸ்தூபி போன்று வடநாட்டு பாணியில் அமைக்கப்பட்டுள்ளது இறைவன், இறைவி இருவரது விமானமும். தமிழக சிவாலயங்களில் காண இயலாத விமான அமைப்பு இதுவாகும்.

தரை மட்டத்தில் இருந்து கருவறை படிப்படியாக உயர்ந்து நிற்கிறது . இறைவன் அழகிய லிங்க வடிவில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார், அம்பிகை தெற்கு நோக்கி உள்ளார்.

கருவறை கோட்டங்களில் விநாயகர், தென்முகக் கடவுள், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை என உள்ளனர். மேற்கு திருமாளபத்தியில் வரசித்தி விநாயகர், முருகன், ஞானேஸ்வரர், ஞானேஸ்வரி என சிறிய மூர்த்திகள் உள்ளன. ஞானேஸ்வரி அருகில் திருமால் பாதம் உள்ளது. அடுத்த சன்னதியில் மகாலட்சுமி. பைரவர், நவகிரகங்கள் வடகிழக்கில் உள்ளார்கள்.

முழுமையும் செங்கல் பணிகளாக உள்ளது. அதனால் ஆங்காங்கே பழுதுகள் தோன்றியுள்ளன. குடமுழுக்கு கண்டு அறுபது ஆண்டுகள் கடந்துவிட்டன என சென்ற குடமுழுக்கின் கல்வெட்டு நினைவூட்டிக்கொண்டே உள்ளது.
*

மயிலாடுதுறை கூறைநாடு காசிவிஸ்வநாதர்

இறைவன் – காசிவிஸ்வநாதர்; இறைவி - காசிவிசாலாட்சி

மயிலாடுதுறையின் மேற்கில் தொடர்வண்டி நிலையம் உள்ள பகுதி கூறைநாடு எனப்படுகிறது. இங்கு ராஜாஜி தெருவில் காவிரியின் கரையோரத்தில் உள்ளார் இந்த காசி விஸ்வநாதர்.

காவிரி வாய்க்கால்போல் குறுகி கரை தெரியாத அளவுக்கு குடிசை ஆக்கிரமிப்புக்கள், குப்பைக் கூளங்களுடன் காய்ந்து கிடக்கிறது.

முகப்பு ராஜகோபுரம் சிறியதாக அழகுடன் உள்ளது. கிழக்கு நோக்கிய இறைவன், தெற்கு நோக்கிய இறைவி. இணைப்பு மண்டபத்தில் நந்தி பலிபீடம் உள்ளன.

சிறிய லிங்க பாணத்துடன் சதுர பீடம் கொண்டு, அழகிய வெள்ளிக் கவசமிட்டு பளிச்சென்று நம்மை வரவேற்கிறார். அம்பிகையும் அவ்வாறே வெள்ளி தாமரைபீடத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

கோயில் சமீபத்தில் திருப்பணி செய்யப்பட்டு தூய்மையான கோயிலாக உள்ளது. சுற்றிலும் பூஜைக்காக பூச்செடிகள் வைக்கப்பட்டுள்ளன.

பிராகாரச் சுற்றில் தென்மேற்கில் விநாயகர், வடமேற்கில் முருகன் வள்ளி தெய்வானை சகிதமாக உள்ளார். அவரின் இருபுறமும் பின்னிய நாகர்கள் உள்ளனர், பின்புறம் ஷடாக்ஷர யந்திரம் உள்ளது. இதனால் ராகு கேது தோஷம் உள்ளோர் இவரை வழிபட்டால் பலன் உண்டு. வருபவர் உள்ளம் நிறைய நிதானமாகப்  பரிகார பூசை செய்ய அர்ச்சகர் திரு.தண்டபாணி அவர்கள் காத்திருக்கிறார்.

இந்த அர்ச்சகரின் ஆறு தலைமுறைக்கு முந்தியவர்கள் 300 ஆண்டுகளின் முன் இக்கோயிலை கட்டியுள்ளனர். இவர் ஏழாவது தலைமுறை பூசகர்.

முருகனின் அருகில் மகாலட்சுமி உள்ள இடத்தில் லட்சுமி துர்க்கை எனும் துர்க்கை உள்ளார். அதனால் கோஷ்ட்ட துர்க்கை இல்லை. நவகிரகங்கள் உள்ளன. சிறிய அளவிலான நடராஜர் சிவகாமி தனி சன்னதி கொண்டுள்ளனர்.
*

மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதர் கோயில்

இறைவன் – விஸ்வநாதர்: இறைவி - விசாலாட்சி

சிதம்பரம் – மயிலாடுதுறை சாலையில், நகரின் வடக்கில் ஓடும் காவிரி பாலத்தின் தென் கரையில் உள்ளது படித்துறை விஸ்வநாதர் கோயில். மூன்று நிலை ராஜகோபுரம் முன்புறம் அணி செய்கிறது. அதனை அடுத்து முகப்பு மண்டபமும் உள்ளது. சிறிய முகப்பு மண்டபத்துடன் இறைவன் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். சிறிய வடிவிலான அம்பிகை தெற்கு நோக்கி உள்ளார். பிராகாரத்தைச் சுற்றிலும் மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. பிராகார வலத்தில் முதலில் உள்ளவர் மகாகணபதி. தனி சிற்றாலயத்தில் உள்ளார். அடுத்து, ஓங்கி வளர்ந்த வேம்பு ஒன்று பக்தர்களின் பிணி தீர்க்க பல வேண்டுதல் கயிறுகள், தொட்டில்கள் ஆகியவற்றைச் சுமந்து நிற்கிறது.

முருகன் தனி சிற்றாலயத்தில் உள்ளார். அவருக்கு முகப்பு மண்டபமாக ஓடுகள் வேயப்பட்ட மண்டபம் உள்ளது. மகாலட்சுமியும் தனி சிற்றாலயம் கொண்டுள்ளார்.



கோஷ்டங்களில் தென்முகக் கடவுள், திருமால், பிரம்மன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். இக்கோயிலில் மங்கள சனி பகவான் தனி சன்னதியில் உள்ளார்.
*

மயிலாடுதுறை வதாரன்யேஸ்வரர் திருக்கோயில் (வள்ளலார் கோயில்)

சிதம்பரம் சாலையில் இருந்து மயிலாடுதுறைக்கு உள்ளே நுழையும் இடத்தில் உள்ளது கால்டாக்ஸ் பேருந்து நிறுத்தம். இந்த இடத்தின் அருகில் உள்ளது இக்கோயில். இந்த தலத்துக்கு உத்திர மாயூரம் என்ற பெயரும் உண்டு.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஞானாம்பிகா சமேத அருள்மிகு வதாரன்யேஸ்வரர், ஞானத்தையும், தர்மநெறியையும் அளிப்பதில் பிரத்யேக சக்தி கொண்ட பெருமான். இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி, கல்வி முன்னேற்றம் அளிப்பதில் தன்னிகரற்ற பெருமானாவார். காசிக்குச் சமமாகப் பூஜிக்கப்படும் இத்திருத்தலத்தில், ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தியை வழிபட்டு ஞானஉபதேசம் பெற்ற மகரிஷிகளில் கண்வ மகரிஷி, அகத்தியர் ஆகியோரைக் கூறலாம். இக்கோயிலை பக்தர்கள் வள்ளலார் கோயில் என்று அழைக்கின்றனர்.

மேற்கு நோக்கிய திருக்கோயில், ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்டது. அதனை அடுத்து ஒரு இணைப்பு மண்டபம், நம்மை இறைவனின் முன்னர் உள்ள மகாமண்டபத்துக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு பெரிய உருவிலான இருபெரும் வாயிற்காவலர்கள் சுதை வடிவில் காட்சியளிக்கிறார்கள். இறைவன் மேற்கு நோக்கி இத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். அம்பிகை தெற்கு நோக்கி உள்ளார்.

ஒரு சமயம், தர்ம தேவன் ரிஷப வாகனமாக இறைவனை சுமந்து செல்லும் பேறு பெற்றான். உலகை ஆளும் ஈசன்கூட நம்மால்தான் வேகமாக பல இடங்களுக்கும் செல்லமுடிகிறது என மனத்தில் நினைத்து கர்வமடைந்தது, அது சிவபெருமானுக்கு தெரிந்து தன்னுடைய சடைமுடி கற்றை ஒன்றினை ரிஷபத்தின் மேல் வைக்க அது பாரம் தாங்காமல் மயங்கியது. பின் இறைவன் அதனை நோக்கி, உனக்கு தான் எனும் கர்வம் வந்துவிட்டது அதனால், என்னை சுமைக்கும் அருகதை உனக்கில்லை. உனது பாபம் நீங்க காவிரியில் நீராடி எம்மை வில்வ இலைகள் கொண்டு பூஜித்தால், உனது பாபம் நீங்கப்பெற்று எம்மை வந்தடைவாய் என கூறினார்.

நந்தியும் அவ்வாறே செய்து வர, இறைவன் அதற்கு குரு வடிவாகக் காட்சி தந்து அருள் செய்தார். நந்தி அப்போது இறைவனை நோக்கி எட்டு பாடல்கள் பாடி வணங்கினார். பின்னர், “குரு வடிவாய் காட்சி தந்த இறைவா” தாங்கள் இத்தலத்தில் என் மீது அமர்ந்து அனைவருக்கும் அருள் பாலிக்க வேண்டும்; நான் எப்போதும் உங்கள் அருகிலேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இறைவனும் அவ்வாறே தன் எதிரில் இருத்திக்கொண்டார். அதனால், குரு பகவானின் முன்னர் நந்தி இருப்பதை இத்தலத்தில் காணலாம்.

மேலும் சப்த கன்னியரில் சாமுண்டி பூஜித்து பேறுபெற்ற தலம் ஆகும். இத்தல குரு பகவானை நந்தி தேவர் பாடிய எட்டு பாடல்களையும் பாடி வணங்குவோருக்கு .சகல ஞானம் பெறலாம்

திருஞானசம்பந்தரின் தேவாரம் - பாடியவர்கள் பாலச்சந்திரன் - சிவக்குமார்

-    கடம்பூர் விஜயன் (kadamburvijay@yahoo.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com