நவராத்திரியில் அம்பாளை எப்படி வழிபட வேண்டும்?

ஜகத் ஜனனியான ஸ்ரீ தேவியை, நவராத்திரி ஒன்பது நாட்களிலும் வழிபாடு செய்ய, முறைகள் கூறப்பட்டுள்ளன. 
நவராத்திரியில் அம்பாளை எப்படி வழிபட வேண்டும்?


ஜகத் ஜனனியான ஸ்ரீ தேவியை, நவராத்திரி ஒன்பது நாட்களிலும் வழிபாடு செய்ய, முறைகள் கூறப்பட்டுள்ளன. 

முதல் நாள், அன்னைக்கு அரிசி மாவினால் பொட்டுக் கோலம் போட வேண்டும். மல்லிகை மலர்கள் மற்றும் வில்வ இதழ்களாலான மாலையைச் சாற்றி வழிபட்டு, வெண்பொங்கல் நைவேத்தியம் செய்ய வேண்டும். 

மாகேஸ்வரி காயத்ரி 
ஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே, சூல ஹஸ்தாயை தீமஹி,  தன்னோ மாகேஸ்வரி ப்ரசோதயாத்

இரண்டாம் நாள், கோதுமை மாவினால், கட்டங்கள் கொண்ட கோலம் போட்டு, முல்லைப் பூக்கள் மற்றும் துளசியினால் ஆன மாலையைச் சார்த்தி, புளியோதரை நைவேத்தியம் செய்ய வேண்டும். 

கௌமாரி காயத்ரி
ஓம் சிகி வாஹனாய வித்மஹே, சக்தி ஹஸ்தாயை தீமஹி தன்னோ கௌமாரி ப்ரசோதயாத்

மூன்றாம் நாள், முத்துக்களைக் கொண்டு, புஷ்பங்கள் போல் கோலம் போட்டு, சம்பங்கி மற்றும் மருக்கொழுந்து மாலையைச் சாற்றி,  சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்ய வேண்டும். 

வாராஹி காயத்ரி
ஓம் மகிஷாத்வஜாய வித்மஹே,  தண்ட ஹஸ்தாய தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

நான்காம் நாள், மஞ்சள் அட்சதையினால், படிக்கட்டு அமைத்தாற்போல் கோலம் போட்டு, ஜாதிப்பூக்கள் மற்றும் கதிர்ப்பச்சையினால் ஆன மாலையைச் சாற்றி, கதம்ப சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். 

லக்ஷ்மி காயத்ரி
ஓம் பத்ம வாசின்யைச்ச வித்மஹே, பத்ம லோசனயைச்ச தீமஹி தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

ஐந்தாம் நாள்,  கடலையைக் கொண்டு, பறவையினம் கோலம் போட்டு, பாரிஜாத மலர்கள் மற்றும் விபூதிப் பச்சை மாலை சாற்றி, தயிர் சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். 

வைஷ்ணவி காயத்ரி
ஓம் ஷ்யாம வர்ணாயை வித்மஹே, சக்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்

ஆறாம் நாள், பருப்புக்களைக் கொண்டு தேவியின் நாமத்தை கோலமாக வரைந்து, செம்பருத்திப் பூக்கள் மற்றும் சந்தன இலைகளால் ஆன மாலையைச் சாற்றி, தேங்காய் சாதத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். 

இந்திராணி காயத்ரி 
ஓம் கஜத்வஜாயை வித்மஹே,  வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ இந்திராணி ப்ரசோதயாத்

ஏழாம் நாள், மலர்களைக் கொண்டு, நறுமணம் மிக்க மலர்களின் கோலத்தைப் போட்டு, தாழம்பூ மற்றும் தும்பை இலை மாலையைச் சாற்றி, எலுமிச்சம்பழம் சாதத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். 

சரஸ்வதி காயத்ரி
ஓம் வாக்தேவ்யை வித்மஹே, வ்ருஞ்சி பத்தின்யை ச தீமஹி தன்னோ சரஸ்வதி ப்ரசோதயாத்

எட்டாம் நாள், காசுகளைக் கொண்டு, தாமரைப்பூவைப் போன்ற கோலம் போட்டு, ரோஜா மலர்கள் மற்றும் பன்னீர் இலைகளால் ஆன மாலையைச் சாற்றி, பாயசம் நைவேத்தியம் செய்ய வேண்டும். 

துர்கை காயத்ரி
ஓம் மஹிஷாமர்த்தின்யை வித்மஹே,  துர்கா தேவ்யை தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்

ஒன்பதாம் நாள், கற்பூரக் கட்டிகளைக் கொண்டு, அம்பாளின் ஆயுதத்தை, கோலமாகப் போட்டு, தாமரைப்பூ மற்றும் மருக்கொழுந்து  மாலையைச் சாற்றி, வெல்லம் கலந்த அக்கார அடிசில் நைவேத்தியம் செய்ய வேண்டும். 

சாமுண்டி தேவி காயத்ரி 
ஓம் கிருஷ்ண வர்ணாயை வித்மஹே,  சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ சாமுண்டா  ப்ரசோதயாத்

கடைசியாக விஜயதசமி நாளன்று, படிக்கோலம் போட்டு, ரோஜா, அரளி, மல்லி செம்பருத்தி பூக்கள் கொண்டு அர்ச்சித்து, சர்க்கரைப் பொங்கல், இதர இனிப்புகள், வடை, வீட்டில் செய்த வடகம், சுக்கும் வெல்லமும் சேர்த்த கலவை, பானகம், நீர்மோர் இவற்றை நைவேத்தியம் செய்யலாம். 

விஜயா காயத்ரி
ஓம் விஜயா தேவ்யை வித்மஹே,  மஹா நித்யாயை தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்

இந்த ஒன்பது நாட்களிலும் தேவியின் ஆராதனை முடிந்த பிறகு ஒன்பது முறைகள் நமஸ்காரம் செய்து எழுந்தால் மிகவும் ஸ்ரேஷ்டம் எனக் கூறப்படுகிறது. மேற்சொன்ன பூக்கள், நைவேத்தியங்களைப் படித்துவிட்டு, நம்மால் முடியுமா? என்று யாரும் பயப்பட வேண்டாம். மாலை சாற்றி மகிழ முடியாதவர்கள்,  இரண்டு பூவும், அட்சதையுமாகக் கலந்து போடலாம். 

பராசக்தியானவள், இதை வைத்து பூஜித்தால்தான் அனுக்கிரகம் செய்வேன் என்று நினைக்க மாட்டாள். அவளின் சேய்களான நம்முடைய பக்தியை அவள் எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்வாள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com