ஸ்ரீமத் ஆதி சங்கரரின் அவதாரத்திற்கு மூல காரணம்!

ஸ்ரீமத் ஆதி சங்கர பகவத் பாதர், எப்பொழுது பிறந்தார் என்பதைப் போன்ற விஷயங்களை பற்றி அதிகப்படியாக
ஸ்ரீமத் ஆதி சங்கரரின் அவதாரத்திற்கு மூல காரணம்!

ஸ்ரீமத் ஆதி சங்கர பகவத் பாதர், எப்பொழுது பிறந்தார் என்பதைப் போன்ற விஷயங்களை பற்றி அதிகப்படியாக நாம் விசாரம் செய்வதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. அவருடைய ஜெயந்தியை, நாம் சித்திரை மாதம், வளர்பிறை பஞ்சமி திதியில் அனுஷ்டித்து வருகிறோம்.

எட்டாம் நூற்றாண்டில், மிகவும் நலிவுற்று இருந்த சனாதர்மத்தின் மறுமலர்ச்சிக்காக, விஷ்ணு மற்றும் பிரும்மாவை முன்னிலையாக வைத்து, தேவதைகள், மற்றும் ரிஷிகள் கைலாயத்திற்குச் சென்று, ஸ்ரீ கங்காதரனிடம் ஒரு உபாயம் கேட்டு, பிரார்த்தனை செய்து கொண்டார்கள். ஸ்ரீ பரமேஸ்வரன் ஆனவர், அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, தானே பூமில் அவதாரம் செய்வதாகத் தெரிவித்தார். இதுதான் ஸ்ரீமத் ஆதி சங்கரரின் அவதாரத்திற்கு மூலக காரணமாகத் திகழ்ந்தது.

ஸ்ரீமத் ஆதி சங்கரர், தக்ஷிணாமூர்த்தியான ஸ்ரீ பரமேஸ்வரரின் அவதாரம். கேரள மாநிலத்தில், ஸ்ரீ சிவகுரு, ஸ்ரீ ஆர்யாம்பிகை தம்பதியருக்கு, திருச்சூர், வடக்கு நாதரின் அருளால், சிரேஷ்ட புத்திரனாக பிறந்தார். மூன்று வயதிற்குள், எல்லா பாஷா ஞானமும், ஐந்து வயதிற்குள், சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தெளிந்தார். ஸ்ரீமத் ஆதி சங்கரர் , இந்தப் பூவுலகில் அவதரித்த காலத்தில் சுமார், எழுபத்தியிரண்டு வெவ்வேறு மதவாதிகள், தம்முடைய கருத்துக்களின் வேறுபாட்டின் அடிப்படையில், சண்டையிட்டுக் கொண்டு, லோகத்தில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தார்கள். 

'பிரும்மம் ஒன்றே நித்யம், சத்யம் . அதைத் தவிர இரண்டாவது வஸ்து  இல்லை' என்கிற உன்னதமான அத்வைத தத்துவத்தினை உலகிற்கு அளித்த ஞான ஆசிரியன். அத்வைத தத்துவத்தை உலகிற்கு போதித்த அம்மகான், பத்து உபநிஷத்துக்கள், பிரும்ம சூத்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம், பகவத் கீதை ஆகியவற்றிற்கு விளக்க உரை அளித்துள்ளார். சிவானந்தலஹரி, கோவிந்தாஷ்டகம், விவேக சூடாமணி, ஆத்ம போதம், கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரமண்ய புஜங்கம் போன்ற இன்னும் பிற நூல்களையும் இயற்றி உள்ளார். 

இந்து மதத்தில் இருந்த வேற்றுமைகளை, நீக்குவதற்கு, தனித்தனி பெயர்கள் கொண்ட தெய்வங்கள் காணினும், முடிவில் எல்லாம் ஒன்றே என்னும் எண்ணத்தினை மக்களிடையே பரப்பினார்.  ஆறு மதங்களை கைகொள்ளச் செய்தார். அதனால் இவருக்கு 'ஷண்மத ஸ்தாபனாச்சாரியார்' என்கிற திருநாமமும் உண்டு. அவை,
ஞானத்திற்கு, சிவன் - சைவம். 
ஐஸ்வர்யத்திற்கு, விஷ்ணு - வைணவம் .
சக்திக்கு, அம்பிகை -  சாக்தம்.
பலத்திற்கு, கணபதி - காணாபத்யம்.
வீரியத்திற்கு, முருகர் - கௌமாரம். 
தேஜஸ்ஸிற்கு, சூரியன் - சௌரம்.

ஆகியவை ஆகும். 

தன்னுடைய முப்பத்து இரண்டு அகவைக்குள், ஸ்ரீமத் ஆதி சங்கரர், பாரத தேசம் முழுவதும் பயணித்து, கிழக்கில், புரியில், ஸ்ரீ கோவர்த்தன பீடத்தினையும், மேற்கில், துவாரகையில், ஸ்ரீ துவாரகா பீடத்தினையும், தெற்கில், சிருங்கேரியில், ஸ்ரீ சாரதா  பீடத்தினையும், வடக்கில் ஸ்ரீ ஜோஷி மடத்தினையும் நிறுவினார், 

ஸ்ரீமத் ஆதி சங்கரரின் சரிதத்தினை, மாதவீய சங்கர விஜயம், கேரளீய சங்கர விஜயம், சங்கர விஜய விலாசம் , குரு  ரத்ன மாலிகை, மார்க்கண்டேய சம்ஹிதை போன்ற  கிரந்தங்கள், விவரிக்கின்றன. எத்தனையோ ஆண்டுகள் கழிந்தும், அவரால் போதிக்கப் பட்ட அத்வைத சித்தாந்தம் இன்னும் மங்காத பொலிவோடு திகழ்கின்றது. 

முக்கியமாக, நாம் அவரது வாழ்க்கை வரலாற்றினை படித்தால் ஒன்று நிதர்சனமாகத் தெரிகின்றது. அதாவது, வயது முதிர்ந்த காலத்தில் சத் காரியங்களைச் செய்வதைவிட, சிறு வயதிலேயே செய்ய வேண்டும் என்பதுதான். குமார பருவத்திலேயே பகவத் தர்மங்களை அனுஷ்டிக்க வேண்டும்.

ஸ்ரீமத் ஆதி சங்கரர் அவதரித்திராவிட்டால், நமது ஆலயங்களும், பண்டிகைகளும், உற்சவங்களும், வழிபாட்டு முறைகளும் அடியோடு மறைந்திருக்கும். இருந்த நிறைந்த காட்டில், திக்கு திசை தெரியாமல் தத்தளித்த மானிடர்களுக்கு, செப்பனிட்டு சாலையில், விளக்கு வெளிச்சத்தினையும் உண்டாக்கி, நமக்கு ஞான மார்க்கத்தை போதிக்க அவதாரம் செய்த ஞான ஆசிரியனை துதித்து நிற்போம்.

அவருடைய ஜெயந்தி அன்று கூற வேண்டிய ஸ்லோகம்,

'ஸ்ருதி,  ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் 
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com