பக்தர்கள் குறைகளைப் போக்கும் பங்காரு காமாட்சி!

தஞ்சை மேலராஜவீதியில் உள்ள அன்னை ஸ்ரீபங்காரு காமாட்சி அம்மன் ஆலயத்தில்

தஞ்சை மேலராஜவீதியில் உள்ள அன்னை ஸ்ரீபங்காரு காமாட்சி அம்மன் ஆலயத்தில் சமீபத்தில் பல்வேறு திருப்பணி வேலைகள் நடைபெற்று நிறைவுறும் தருவாயில், புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண மஹாகும்பாபிஷேகம் மார்ச் 23-ம் தேதி (வியாழன்) ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள் முன்னிலையில் நடைபெறுகின்றது. யாகசாலை பூஜைகள் மார்ச் 20 தொடங்குகின்றது. 

***

அம்பிகை வழிபாடு பாரதத்தின் தொன்மையான வழிபாடு. அவள் பல்வேறு ரூபங்களில் பல திருநாமங்கள் கொண்டு அருள் பாலிப்பதில் ஒன்று ஸ்ரீ காமாட்சி. இது ஒரு தத்துவத் திருவுருவமாகும். காமாட்சி என்பது அடியவர்கள் விரும்புகின்ற வரத்தினையெல்லாம் அருள்மழையாக பொழியக் கூடியவள் என்று பொருள்படும்.

புராண வரலாற்றுப்படி காஞ்சித் திருத்தலத்தில் ஸ்ரீகாமாட்சி அம்பாள் ஆலயத்தில் பிரம்ம தேவர் தவம் செய்து தேவியின் அனுக்கிரகத்தைப் பெற்று அங்கு தங்கம் போல ஜ்வலிக்கும் பங்காரு காமாட்சியை ஸ்தாபிதம் செய்தார். (பங்காரு என்றால் ‘தங்கம்’ என்று பொருள்). இந்த அம்மனுடன் சேர்த்து  ஸ்ரீமூலகாமாட்சி, ஸ்ரீசக்ர காமாட்சி, ஸ்ரீ தபஸ்காமாட்சி, ஸ்ரீபிலாகாச காமாட்சி என மொத்தம் ஐந்து காமாட்சி திருவுருவங்கள் வழிபடப்பட்டு வந்தன.

கி.பி.16-ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் ஏற்பட்ட அந்நியர்கள் படையெடுப்பினால் புராதானக் கோயில்களுக்கும், தெய்விக விக்ரகங்களுக்கும் பங்கம் ஏற்பட்டது. அந்நிலை காஞ்சிக்கும் வருவதற்கான வாய்ப்புகள் இருந்ததால் அவ்வமயம் ஸ்ரீகாஞ்சி மடத்தில் 62-வது பீடாதிபதியாக விளங்கிய ஆசார்ய புருஷர், பங்காரு காமாட்சியை கயவர்களிடமிருந்து காப்பாற்ற தக்க ஏற்பாடுகள் செய்து பல்வேறு இடங்களுக்கு மாறி மாறி எடுத்துச் சென்று இறுதியாக தஞ்சை வந்து சேர்ந்தார். அன்றைய தஞ்சை அரசர் பிரதாபசிம்மர் அம்பிகைக்கு ஒரு திருகோயில் அமைத்துக் கொடுத்தார். அன்று முதல் பங்காரு காமாட்சி தஞ்சையிலேயே குடிகொண்டுவிட்டாள். பின்னாளில் ஸ்ரீசியாமா சாஸ்திரிகள் அந்த அம்பிகையை பூஜித்து அவள் அருளால் சங்கீத மும்மூர்த்திகளுடன் ஒருவராகும் பேறு பெற்றார். ஸ்ரீதுர்வாஸ மகரிஷி இயற்சிய செளபாக்ய சிந்தாமணி என்ற நூலைப் பின்பற்றியே ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு நித்ய உத்ஸவ பூஜைகள் நடைபெறுகின்றன என்பது சிறப்பான செய்தியாகும்.

தகவல்களுக்கு : 9443156411

- எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com