திருவண்ணாமலை: தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
கொடியேற்றத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மன்.
கொடியேற்றத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மன்.

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதில், பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கொடியேற்றம்: காலை 7.15 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தனுர் லக்கினத்தில் கோயில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க மூலவர் சன்னதி எதிரே உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர், கொடிமரத்துக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அப்போது, கொடியேற்றத்தைக் காண வந்திருந்த பல ஆயிரம் பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பி அருணாசலேஸ்வரரை வழிபட்டனர். மேலும், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமூர்த்திகள், கொடிமரத்தை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.
விழாவில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, கோயில் இணை ஆணையர்கள் எஸ்.ஹரிப்பிரியா, வாசுநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி உள்பட பல ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

9-இல் தேரோட்டம்; 12-இல் மகா தீபம்

தீபத் திருவிழாவின் 6-ஆம் நாளான டிசம்பர் 8-ஆம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது.
7-ஆவது நாளான 9-ஆம் தேதி காலை 6.05 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் தனுர் லக்கினத்தில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் தொடங்குகிறது. விநாயகர், முருகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் தேர்கள் என 5 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக மாட வீதிகளில் வலம் வருகின்றன.
விழாவின் 10-ஆம் நாளான டிசம்பர் 12-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வர் கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலையில் மகா தீபமும் ஏற்றப்படுகின்றன. டிசம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com