பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் நிறைவு

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்.
திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
முன்னதாக, இக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. இதன் ஒன்பதாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, பத்மாவதி தாயாரின் ஜென்ம நட்சத்திரமான உத்திராடத்தை முன்னிட்டு பத்மசரோவரம் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
இதையொட்டி, திருமலை ஏழுமலையான் தாயாருக்கு தங்க, வைர நகைகள், பட்டுப் புடவை, மஞ்சள், குங்குமம், வளையல், கங்கணம், மலர்கள், பிரசாத வகைகள் உள்ளிட்ட பொருள்களை சீர்வரிசையாக அனுப்பி வைத்தார்.
தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு சீர்வரிசைப் பொருள்களை மூங்கில் கூடையில் வைத்து திருப்பதி அலிபிரிக்கு கொண்டு வந்தார். பின்னர், அவை யானை மீது வைத்து கோவிந்தராஜ சுவாமி கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.


சிறப்புப் பூஜைக்கு பின் அங்கிருந்து பத்மாவதி தாயார் கோயில் அருகிலுள்ள பசுப்பு மண்டபத்துக்கும், தொடர்ந்து குளக்கரைக்கும் சீர்வரிசைப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து, தாயாருக்கு சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.
திருமலை ஜீயர்கள் திருமஞ்சனப் பொருள்களை எடுத்துத் தர, தாயாருக்கு அர்ச்சகர்கள் அபிஷேகத்தை நடத்தினர்.
தொடர்ந்து, சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர்.
செவ்வாய்க்கிழமை வரை பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பின்னர், பிரம்மோற்சவம் நிறைவுபெற்றதற்கு அடையாளமாக கொடிமரத்தில் ஏற்றப்பட்ட யானைக் கொடி மாலை 5 மணிக்கு இறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தாயார் தங்கப் பல்லக்கில் மாட வீதியில் வலம் வந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com