வெள்ளெருக்கு வேரில் விநாயகர் சிலைகள்

கல்லிலும், களிமண்ணிலும், உலோகங்களிலும் விநாயகர் சிலைகளைப் பார்த்திருக்கிறோம்.
வெள்ளெருக்கு வேரில் விநாயகர் சிலைகள்

கல்லிலும், களிமண்ணிலும், உலோகங்களிலும் விநாயகர் சிலைகளைப் பார்த்திருக்கிறோம். வெள்ளெருக்கு வேரில் மிகவும் அரிதாகவே விநாயகர் சிலை வடிவமைக்கப்படுகிறது.

தஞ்சாவூர் கோடியம்மன் கோயில் அருகேயுள்ள ராஜராஜசோழன் நகரைச் சேர்ந்த கே. கோவிந்தராஜன் (72) வெள்ளெருக்கு வேரில் விநாயகர் சிலைகளை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வடிவமைத்து வருகிறார். இவர் வெள்ளெருக்கு விநாயகர் சிலைகளைத் தயாரித்து பூம்புகார் மற்றும் காதி கைவினைப்பொருள்கள் விற்பனை நிலையங்களுக்கு விநியோகம் செய்து வருகிறார். 2 அங்குலம் முதல் ஓர் அடி வரையிலான உயரத்தில் இச்சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. இதன் விலை குறைந்தபட்சம் ரூ. 200 முதல் ரூ. 20,000 வரை உள்ளது.

இதுகுறித்து கோவிந்தராஜன் தெரிவித்தது:

வெள்ளெருக்கு வேரில் விநாயகர் சிலை வடிவமைக்கும் கலையை மரத்தேர் வேலைப்பாடு செய்து வந்த எனது மாமனார் ஏகாம்பர ஸ்தபதியிடமிருந்து கற்றுக் கொண்டேன். முதலில் தெரிந்தவர்களுக்கு மட்டும் செய்து கொடுத்து வந்தேன். நாளடைவில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், வெள்ளெருக்கு வேரில் விநாயகர் சிலைகள் வடிவமைப்பதை முழு நேரமாகச் செய்யத் தொடங்கினேன். மாதத்துக்கு சராசரியாக 40 முதல் 50 சிலைகள் வடிவமைப்பேன். வேர் கிடைப்பதைப் பொருத்தும், விற்பனை ஆணைகளைப் பொருத்தும் சிலைகளைச் செய்கிறோம்.

பெரும்பாலும் வலம்புரி விநாயகர் சிலை செய்யப்படுகிறது. விரும்பிக் கேட்பவர்களுக்காகப் புன்னைநல்லூர் மாரியம்மன், ஆஞ்சநேயர், கஜலட்சுமி, சரஸ்வதி ஆகிய சிலைகளும் வடிக்கப்படுகின்றன என்றார்.

வெள்ளெருக்கு வேரின் குணம் மிக உயரியது. இச்சிலைகளை அபிஷேகம் செய்ய முடியாது. தைலக்காப்பு மட்டுமே செய்ய முடியும். அவ்வாறு செய்து வந்தால், இச்சிலை கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு நீடிக்கும்என்றார் கோவிந்தராஜனுக்கு உதவியாக ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இக்கலையில் ஈடுபட்டுள்ள அவரது மகன் ஜி. நவநீதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com