உமாமகேஸ்வரன் உமையொரு பாகனாய் காட்சியருளல்

சிவபெருமானின் 64 மூர்த்தங்களுள் ஒன்று அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம். இதுகுறித்து ஒரு புராண சம்பவம் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்...
உமாமகேஸ்வரன் உமையொரு பாகனாய் காட்சியருளல்

சிவபெருமானின் 64 மூர்த்தங்களுள் ஒன்று அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம். இதுகுறித்து ஒரு புராண சம்பவம் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்...

ஒரு சமயம், இயற்கை எழில் நிறைந்த வனத்தின் வழியே சிவபெருமானும், பார்வதி தேவியாரும் சென்றபோது ஒரு முல்லைக்கொடியானது மாமரத்தைச் சுற்றிப் படர்ந்திருந்ததை ஐயன் அம்மைக்குச் சுட்டிக்காட்டினார். அதைக் கண்ணுற்ற தேவி, மாமரத்தைத் தலைவனாகவும் முல்லைக்கொடியைத் தலைவியாகவும் பாவித்து நாணமுற்று தம் மெல்லிய கைகளால் பரமனின் திருக்கண்களை மறைத்தார். இதனால் பரமனின் இரு கண்களாக விளங்கும் ஞாயிறும் (சூரியனும்), திங்களும் (சந்திரனும்) மறைக்கப்படவே உலகத்தை இருள் கவ்வியது. அனைத்து இயக்கங்களும் முடங்கிவிட்டன. உயிரினங்கள் மயங்கி நின்றன.

இதுகண்ட தேவியார் தம் கைகளை விலக்கிக்கொள்ள, மீண்டும் உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஈசனின் கண்களை மூடி அதன் காரணமாய் உலகம் இருளில் மூழ்கி, படைத்தல் முதலான தொழில்கள் நின்றமையால் பார்வதி தேவியை பாவம் பற்றிக்கொண்டது.

ஈசன் அம்மையை நோக்கி அப்பாவம் நீங்க கேதாரத்திலும், காசியிலும், காஞ்சியிலும் தவம் மேற்கொள்ளுமாறு அருளினார். தான் வேறு உருவாகவும், அய்யன் வேறு உருவாகவும் இருப்பதனாலன்றோ இவ்விதம் நிகழ்ந்தது. ஆதலின் திரும்பவும் இவ்வித குறைகள் நேராதிருக்க அரிய தவம் செய்து அரனின் இடப்பாகத்தைப்பெற்று ஈரற்ற ஓருருவில் இருப்பதே நலம் என்று எண்ணிய அன்னையும் கேதாரம், காசி, காஞ்சி, திருவண்ணாமலை ஆகிய தலங்களில் தவமியற்றினார். சிவபெருமான் அருளாசியுடன் இறுதியாக கொங்குமண்டலத்தில் நாகாசலம் என வழங்கப்படும் திருச்செங்கோடு வந்தடைந்தார்.

மங்கலப் பொருட்களால் லிங்க மூர்த்தியை எழுந்தருளச்செய்து முறைப்படி பூஜை செய்து ஒரு புரட்டாசித் திங்கள் வளர்பிறை அஷ்டமித் திதியில் கேதார கெளரி விரதத்தை அன்னையார் துவங்கினார்.

பார்வதி தேவியின் தவத்திலும், பூஜையிலும் மனமகிழ்ந்த சிவபெருமான், புரட்டாசித் திங்கள் தேய்பிறை சதுர்த்தியன்று அன்னை பார்வதிக்கு காட்சி கொடுத்து அம்மை விரும்பியபடி தம்முடைய இடப்பாகம் கொடுத்தருளினார்.

இக்கோலத்திலேயே சக்தியை தவிர்த்து தம்மை மட்டுமே வணங்கி வந்த பிருங்கி முனிவருக்கு, "சக்தி இல்லையேல் சிவன் இல்லை' என உணர்த்தி அவரை ஆட்கொண்டருளினார்.

இந்த புராண சம்பவத்தை பிண்ணனியாகக் கொண்டு திகழும் இத்திருத்தலத்தின் மலைக்கோயிலில் கேதார அம்மன் (உற்சவ மூர்த்தி) கேதார கௌரி விரதத்தை அனுஷ்டிப்பதாக ஐதீகம். அவ்வாறே ஆலயத்தில் கேதார விரதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

மகாளய அமாவாசையன்று உமாமகேஸ்வரன் உமையொரு பாகனாய் காட்சியருளும் நிகழ்வும் நடைபெறுகிறது. அன்று அர்த்தநாரீஸ்வரர் மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், உற்சவர் உட்புறப்பாடும் நடைபெறுகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com