திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்தைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு நடைபெற்ற மகா தீபாராதனை.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்தைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு நடைபெற்ற மகா தீபாராதனை.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.
அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டம் வெள்ளிப் பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டு பஞ்சவாத்தியங்கள், வேத பாராயணங்கள் முழங்க, வாண வேடிக்கை நிகழ்ச்சியுடன் அதிகாலை 5.15 மணிக்கு கோயில் பிரகாரத்திலுள்ள செப்புக் கொடிமரத்தில் காப்புக்கட்டிய சண்முகசுந்தர பட்டர் ஆவணித் திருவிழா கொடியை ஏற்றினார்.
பின்னர், கொடிமரத்துக்கு மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், வாசனைத் திரவியங்கள் உள்பட 16 வகை அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரமாகி மகா தீபாராதனை நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் வேத பாராயணமும், கோயில் ஓதுவார்கள் திருமுறைப் பாராயணமும் பாடினர்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து, மாலையில் அருள்மிகு அப்பர் சுவாமிகள் கோயிலிலிருந்து தங்க சப்பரத்தில் புறப்பட்டு, திருவீதிகளில் உழவாரப் பணி செய்து கோயில் வந்து சேர்ந்தார். இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் வீதியுலா வந்து கோயில் சேர்ந்தார்.

விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள்.


திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 5ஆம் திருநாளானஆகஸ்ட் 16ஆம் தேதி மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமி}அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் வீதியுலா வருதல், 17ஆம் தேதி காலையில் கோ ரதம், இரவில் வெள்ளி ரதம் வீதியுலா, 18ஆம் தேதி அதிகாலை 4.30 }5 மணிக்குள் அருள்மிகு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து, 8.30 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சப்பரம் சேர்தல், அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தல் நடைபெறும்.
ஆகஸ்ட் 19ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி வெள்ளைச் சாத்தி எழுந்தருளி வீதியுலா வந்து மேலக்கோயில் சேர்ந்து, அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்று, முற்பகல் 10.30 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதியுலா வந்து கோயில் சேர்தல் நடைபெறும்.
ஆகஸ்ட் 20ஆம் தேதி இரவு சுவாமி தங்க கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதியுலா வருவர்.
தேரோட்டம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமி } அம்மன் தேர்கள் வீதியுலா வந்து நிலையை சேர்கின்றன.
ஏற்பாடுகளை கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) அ.தி. பரஞ்ஜோதி, அலுவலகக் கண்காணிப்பாளர் யக்ஞ. நாராயணன், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
நடைதிறப்பு நேரம்: ஆவணித் திருவிழாவை முன்னிட்டு 2ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக. 13) அதிகாலை 4 மணிக்கும், ஆகஸ்ட் 18ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கும், 20ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கும், மற்ற நாள்களில் வழக்கம் போல அதிகாலை 5 மணிக்கும் நடைதிறக்கப்பட்டு, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com