மருதமலை ஆண்டவனுக்கு அரோகரா!

கோவை நகரில் எங்கு இருந்து பார்த்தாலும் நம் கண்களுக்கு அற்புதக் காட்சி தருவது இயற்கை எழில் பொங்கும் மேற்கு தொடர்ச்சி மலை.
மருதமலை ஆண்டவனுக்கு அரோகரா!

கோவை நகரில் எங்கு இருந்து பார்த்தாலும் நம் கண்களுக்கு அற்புதக் காட்சி தருவது இயற்கை எழில் பொங்கும் மேற்கு தொடர்ச்சி மலைதான். அந்த மலைகளுக்கு இடையில் கம்பீரமான தோற்றத்துடன் மருதமலை முருகனின் திருக்கோவில் அமைந்துள்ளது.

தமிழ் மரபுகளில் மலையும் மலை சார்ந்த இடத்தை குறிஞ்சி நிலம் என்றும் வயலும் வயல் சார்ந்த இடத்தை மருதம் என்றும் அழைக்கிறார்கள்.  இந்த இரு நில அழகுகளையும் தனதாக்கிக் கொண்டது போன்ற அற்புதமான பெயருடன் மருதமலை என்று அழைக்கப்படும் ஸ்தலத்தில் முருகன் பிரகாசத்துடன் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் தரை மட்டத்தில் இருந்து ஐநூறு அடி உயரத்திலும் கோவையில் இருந்து வடமேற்கு திசையில் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

பார்ப்பவர்கள் மனம் மகிழ எழில் கொஞ்சும் இயற்கையான சூழலில் அமைந்திருக்கும் மருதமலை, அதன் மூன்று புறங்களிலும் மலை அரண்களால் சூழப்பட்டு உள்ளது. கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலைகளின் இயற்கை அமைப்போடு சேர்த்து பார்க்கும் போது மயில் தோகை விரித்தாற் போல் காட்சி அளிக்கிறது. இதனால் முருகன் மயில் மீது அமர்ந்த தோற்றம் நம் கண் முன் தெரிகிறது. மருத மரங்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த மலை மருதமலை என அழைக்கப்படுகிறது. மேலும் மருதமால்வரை, மருதவரை, மருதவெற்பு, மருதக்குன்று, மருதலோங்கல், கமற்பிறங்கு, மருதாச்சலம், வேள்வரை என்றெல்லாம் பேரூர் புராணத்தில் கூறப்படுகிறது. மலை அடிவாரம் வரை தமிழக அரசுப் பேருந்துகள் கோவையில் இருந்து செல்கின்றன. மலையின் மீது படியேறி கோவிலுக்கு நடந்து செல்லலாம், அல்லது கோயில் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மினி பஸ்களில் மலைப்பாதையில் செல்லலாம். தனியார் இரு சக்கர வாகனங்களும் கார்களும் கட்டணம் செலுத்தி மலைப்பாதை மூலம் மேலே கோயிலுக்குச் செல்லலாம்.

மருதமலையின் அடிவாரத்திலிருந்து நடைபயணமாக மலையேறி செல்லும் பாதையில் படிகள் ஆரம்பிக்கும் இடத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னதி உள்ளது.  இச்சன்னதியில் விநாயகர், சுயம்புவாக இருக்கிறார். யானைத்தலை மட்டும் உள்ள இவருக்கு உடல் இல்லை. இவர், மலையிலுள்ள முருகன் சன்னதியை நோக்கி, தும்பிக்கையை நீட்டி காட்சி தருவது விசேஷம். அருகில் மற்றொரு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுயம்பு விநாயகருக்கு பூஜை செய்த பின்பே, பிரதான விநாயகருக்கு பூஜை நடக்கிறது. முருகனுக்கு உகந்த நாட்களான கிருத்திகை, சஷ்டி, விசாகம் மற்றும் அமாவாசை நாட்களில் இவருக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. எனவே இவரை, ‘தம்பிக்கு உகந்த விநாயகர்' என்றும் அழைக்கிறார்கள். மருதமலை சுப்பிரமணியரை தரிசிக்கச் செல்பவர்கள் இவரை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம். இந்த விநாயகரை வணங்கிச் சென்றால் சரியாக பதினெட்டு படிகளைக் கொண்ட பதினெட்டாம் படி உள்ளது. சபரிமலைக்கு   சென்று அய்யப்பனை வழிபட இயலாத பக்தர்கள் இந்த பதினெட்டாம் படிக்கு வந்து வழிபட்டு செல்வார்கள்.

விநாயகரை வணங்கி சற்று மேலே பல இளைப்பறும் மண்டபங்களை கடந்து நடந்தால் இடும்பன் சன்னதி வரும், இந்த தலத்தில் அமைந்துள்ள இடும்பன் கோவிலில், இடும்பனின் உருவம் உருண்டை வடிவமாக பெரிய பாறையில் உள்ளது. காவடியைச் சுமந்து கொண்டு இருக்கும் தோற்றத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இடும்பனை வணங்கினால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பதால் பக்தர்கள் இடும்பனை வணங்கி செல்வார்கள். இடும்பனை வணங்கி சற்று மேலே சென்றால் குதிரைக் குளம்பு என்ற சுவடு உள்ளது. இதற்காக எழில்மிகு மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. முருகப் பெருமான் சூரர்களை வெற்றி கொள்ள புறப்படும்போது அல்லது வெற்றியுடன் திரும்பி வரும் போது குதிரைக் குளம்புகள் படிந்த இடம் எனக் கூறப்படுகிறது. உண்டியல் பொருட்களை திருடர்கள் திருடிச் செல்ல அவர்களை முருகப் பெருமான் தேடிச் சென்ற போது ஏற்பட்ட குதிரைக் குளம்படியாகவும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் அன்னதான கூடத்தின் வழியாக செல்கிறது, இக்கோவிலில் தினமும் மதியம் 12-15 மணிக்கு கோவிலுக்கு வரும் 150 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளிதோறும் வடை பாயசத்துடன் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதை தொடந்து

முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செய்யும் இடமும் உள்ளது, மருதமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய பிறகு குடும்பத்துடன் வந்து நேர்த்தி கடனை செலுத்தி வருகிறார்கள். அங்கிருந்து பார்த்தால் அப்பன் மருதமலை ஆண்டவனின் திருக்கோவில் ஏழுநிலை ராஜகோபுரம் அற்புதமாக காட்சி தரும்.

திருத்தல சுவரில் ‘ஓம் முருகா’ ‘கருணை கடலே கந்தா போற்றி’ என்ற வாசகத்துடன் வண்ணவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்திற்கு எதிராக மலைமேல் வரும் வாகனங்கள் நிறுத்தும் இடம் மிக விலாசமாக உள்ளது. ராஜகோபுரம் வழியாக சென்றால்  சுப்பிரமணியசுவாமி சன்னிதிக்கு எதிராக செல்லும், ஆனால் ஆதிமூலஸ்தானத்திற்கு நேர் எதிராக உள்ள இப்பாதைவழியாக செல்பவர்கள் முதலில் மருதமலைக் கோயிலின் ஆதி மூலஸ்தானத்தை அடைவர், புராதனமான சிவன் கோயில்களில் சிவன், சுயம்புலிங்கமாக இருப்பார். ஆனால், இத்தலத்தில் முருகன் சுயம்புமூர்த்தியாக இருக்கிறார். இவருடன் வள்ளி, தெய்வானையும் சுயம்புவடிவில் இருப்பது விசேஷம். இங்கு வள்ளியின் சுயம்பு உருவம், தெய்வயானையை விட சற்று உயரமாகக் காணப்படுகிறது. இந்த சுயம்பு முருகனே இத்தலத்தின் ஆதிமூர்த்தியாவார். இவரது சன்னதி ‘ஆதி மூலஸ்தானம்' எனப்படுகிறது. இவருக்கு முதல் பூஜை செய்யப்பட்ட பின்பே, பிரதான முருகனுக்கு பூஜை நடக்கிறது. கிருத்திகையில் இவருக்கு அதிகளவில் பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். ஆதிமூலஸ்தான கருவறை விமானமும், முன்புறம் தைப்பூசக் கல்யாண உற்சவ மண்டபமும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.

ஆதிமூலஸ்தானத்தின் முன்மண்டபத்திற்கும் சுப்பிரமணியசுவாமி சன்னிதி மண்டபத்திற்கும் இடையே பஞ்ச விருட்ச விநாயகர் சன்னிதி உள்ளது. பொதுவாக அரசமரத்தடியில் காணப்படும் விநாயகர் இங்கு அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்களுக்கடியில் ஐந்து முகங்களுடன் அமைந்துள்ளார். நடைப்பயணமாக மலையேறி வருவோர் இந்த விநாயகரைத் தாண்டிதான் சுப்பிரமணியசுவாமி சன்னிதிக்குச் செல்ல வேண்டும். பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் சுப்பிரமணியசுவாமி சன்னிதிக்குச் செல்லலாம். சுப்பிரமணியசுவாமி சன்னிதிக்கு நேராக புதியதாக ஏழுநிலை இராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இராஜகோபுர கல்ஹாரம், ஏழுநிலை கோபுரம், தங்கமுலாம் பூசிய ஏழு கலசங்கள், மேல்மண்டபம், இராஜகோபுரத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் மற்றும் இராஜ கோபுரத்திலிருந்து மேல் மண்டபத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் புதியதாய் இந்து சமய அறநிலைத் துறையால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லால் ஆன கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர், அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு, அடுத்து உலோகக் கொடிமரம், மயில்வாகனம், முன்மண்டபத்தில் வரதராஜப் பெருமாள் சன்னிதி, அர்த்தமண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும் (இடப்புறம்) வீரபத்திரரும் (வலப்புறம்), கருவறையில் தண்டத்துடன் காட்சிதரும் தண்டாயுதபாணி என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலை அடைந்து முருகன் முன் நிற்கும் போது நாம் அடையும் மகிழ்ச்சி, பூரிப்பு ஆகியவற்றை சொல்ல இயலாது, அழகு என்றால் முருகன் என்பது போல் இந்த அழகிய சுப்பிரமணிய சுவாமியை காணக் கண் கோடி வேண்டும்.

வலம்புரி விநாயகரின் முன்னுள்ள மயில்முக விளக்கின் அடிப்புற ஆமை வடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் குறிப்பிடத்தக்கவை. சிவன், அம்பாளுக்கு நடுவில் முருகன் இருக்கும் அமைப்பை, சோமாஸ்கந்த அமைப்பு என்பர். இங்கும் சிவன், அம்பாளுக்கு நடுவில்தான் முருகப்பெருமான் காட்சி தருகிறார். முருகத்தலம் என்றாலும் சுவாமிக்கு வலப்புறம் பட்டீஸ்வரர் சன்னதியும், இடப்புறத்தில் மரகதாம்பிகை சன்னதியும் உள்ளன. கோஷ்டத்தில் உள்ள முருகன் சிகிவாகனர் (மயிலை வாகனமாக உடையவர்), ‘சேனானி (படைத்தளபதி) என்ற பெயரில் அழைக்கப்படுவது விசேஷம்.

மருதம் மரங்கள் நிறைந்தும், நோய் நீக்கும் மருந்து குணங்களை உள்ளடக்கிய மூலிகைகளைக் கொண்டதுமான மலையில் அருளுபவர் என்பதால் இங்கு முருகன், ‘மருதாச்சலமூர்த்தி' என்று அழைக்கப்படுகிறார். மருதமரமே இத்தலத்தின் விருட்சம். தீர்த்தத்தின் பெயர் ‘மருது சுனை'. இந்த தீர்த்தம் பிரசித்தி பெற்றது. மலையில் உள்ள ஒரு மருதமரத்தின் அடியில் இருந்து இந்த தீர்த்தம் உற்பத்தியாகி வருவதாக சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

காமதேனு என்னும் தெய்வீகப்பசு இம்மலையில பசி நீங்க மேய்ந்து மருத மரத்தின் கீழ் இருந்த நன்னீரைப் பருகியதாக பேரூர் புராணத்தில் கச்சியப்ப முனிவர் கூறியுள்ளார். மிகப்பழமையான காலத்தே நம் முன்னோர்கள் வனத்தை இருப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்தனர். பின்னர் நாகரிக வளர்ச்சியில் காடு கெடுத்து நாடாக்கப்பட்ட பின்பு தெய்வங்களுக்குப் பெருங்கோவில்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு கோவில்கள் அமைக்கப்பட்ட போதிலும் ஆதியில் இருந்த மரத்தினை அழிக்காது அதனை இன்றளவும் சுவாமிக்கு அருகில் தல விருட்சம் (தலமரம்) என்ற பெயரில் வளர்த்து வருகின்றனர். அவ்வகையில் மருதமரமானது இங்கு ஸ்தல விருட்சமாக இருந்து வருகிறது.

இம்மலையை மருந்து மலை என்று சொல்லும் வகையில் மக்களின் உடற்பிணியும், மனப்பிணியும் நீக்கும் மூலிகைகளும் மரங்களும் உள்ளன. அருமையான காற்றும், அமைதியான சூழலும் மனத்திற்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. தவம் செய்வோர் அருளாளர்கள் இறப்பிலாப் பெருவாழ்வு அடைய காயகல்பம் தேடி இம்மலையில் வந்து தங்குகிறார்கள்.

திருக்கோவில் வளாகத்தில் மூலவர்க்கு சற்று தூரம் தள்ளி படிக்கட்டில் இருந்து கீழே சென்றால் பாம்பாட்டி சித்தர் கோவில் அமைந்துள்ளது. இந்த இடத்தை பாம்பாட்டி சித்தரின் குகை என்று கூறப்படுகிறது. இக்குகைக்கோயில் சிறு குடைவரை அமைப்பில் உள்ளது. உட்புறத்தில் ஒரு பாறை பாம்பு வடிவில் உள்ளது. பாம்பாட்டி சித்தர் சன்னதி முன்புறமுள்ள தியான மண்டபத்தில் இங்கு வருகை தருவோர் அமர்ந்து அமைதியாக தியானம் செய்து வழிபடுகின்றனர். தண்டாயுதபாணி கோயில் தலவிருட்சம் இக்கோயிலுக்கு முன்னால் உள்ளது. இக்கோயிலுக்கு இறங்கி வரும் பாதையில் சப்த கன்னியருக்கு ஒரு சிறு சன்னதி அமைந்துள்ளது.

கந்தனுக்கு அரோகரா !

கடம்பனுக்கு அரோகரா !!

வேலனுக்கு அரோகரா !!!

முருகனுக்கு அரோகரா !!!!

மருதமலை ஆண்டவனுக்கு அரோகரா...!

- ச.பாலகிருஷ்ணன், கோவை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com