'அம்மா' என்று அழைப்பாயா கண்ணா?

 ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வானவர், ஸ்ரீ தேவகி மாதாவிற்கும், ஸ்ரீ வசுதேவருக்கும் நந்தனாய் அவதாரம் செய்தது மதுரா
'அம்மா' என்று அழைப்பாயா கண்ணா?

 ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவானவர், ஸ்ரீ தேவகி மாதாவிற்கும், ஸ்ரீ வசுதேவருக்கும் நந்தனாய் அவதாரம் செய்தது மதுராதான் என்றாலும், கோப கோபியரை நண்பர்களாகக் கொண்டு, ஆநிரை, திருச்செல்வனாக வளர்ந்ததென்னவோ கோகுலத்தில் தானே! இங்கு கூறப்போவது, கண்ணனிடம் பழம் விற்ற ஒரு கிழவியின் சுவாரஸ்யமான கதை. 

மதுராவில், கம்சனின் தோழமையோடு அரக்கர்களின் அச்சுறுத்தல் அதிகமாக இருந்த நாட்கள். அராஜகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால், நியாயமாக வாழ்க்கை நடத்திவந்த எவருக்கும் நிம்மதி இல்லாமல் இருந்தது. அன்றாடம், மலை ஜாதி கிழவி ஒருத்தி, காட்டிற்குச் சென்று,  இனிப்பான பழங்களைப் பறித்தோ, பொறுக்கியோ வந்து, ஊரில் விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். ஆனால் அவளை விற்க விடாமல், ராட்சதக் காவலர்கள், அவள் கூடையிலிருந்த பழங்களை கை நிறைய எடுத்து சாப்பிட்டு, ஏப்பம் விட்டு விட்டு சிரிப்பதை பழக்கமாகக் கொண்டு விட்டார்கள். 

இதை மனதில் கொண்டு,  ஒரு குறிப்பிட்ட தினத்தில், கிழவி, மகாவனம் சென்று, பழங்களைச் சேகரித்த பின்பு, கோகுலம் சென்று விற்றுவிட்டு, சிறிது பொருள் தேற்றிக் கொண்டு வரலாம் என்று எண்ணம் கொண்டாள். அவள் எதிர்பார்த்தாற் போல, புளிப்பில்லாத நல்ல இனிப்பான பழங்கள் வனத்தில் கிடைத்தன. பழுத்த, வண்ண வண்ண பழங்கள் பூமி எங்கும் இறைந்து கிடந்தன. எத்தனை கூடைகள் எடுத்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை. வனத்திற்கு ஏது வேலி? கிழவி, ஏதோ நம்பிக்கையுடன், அவசரம் அவசரமாக, பழங்களை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டாள். அந்தக் கூடையைத்  தூக்கவே கிழவிக்கு கஷ்டமாகத் தெரிந்தாலும், விற்றால்,  வீட்டில், சோறு பொங்க நெல்மணிகள் கிடைக்குமே என்கிற நம்பிக்கையினால் பாரத்தை சுமக்கவும் தயாரானாள். திடீரென்று அவள் மனதில் அச்சமும், அவநம்பிக்கையும் தோன்ற ஆரம்பித்தது. 

'இந்தப் பருவத்தில் எல்லா இடங்களிலுமே மரத்தில் மாம்பழங்கள் இருக்குமே. கோகுலத்தில் இருக்கும் சிறுவர்கள் போகாத இடம் கூட உண்டா என்ன? அவர்கள் சுவைக்காத பழங்களா? அதுவும் விலையில்லாமல் கிடைக்கும் பொருளை விலை கொடுத்து வாங்குவார்களா?' அடுக்கடுக்காய் சந்தேகங்கள் தோன்ற, கோகுலத்தை நோக்கி பத்தடிகள் வைத்த கிழவி, வந்த வழியே திரும்பத் தொடங்கினாள். 

'அம்மா கிழவி, ஏன் திரும்புகிறாய்? கோகுலத்திற்கு வருபவர்கள் யாரும் இது வரை அவநம்பிக்கையோடு திரும்பியது கிடையாது. நந்தகோபர் அதை சற்றும் விரும்பவும் மாட்டார். அவருடைய வீட்டிற்குச் சென்று வேண்டியதைப் பெற்றுக் கொண்டு திரும்பு' முனிவரைப் போல் தோற்றம் கொண்ட ஒருவர்,  கிழவியிடம் கூறினார். 

கிழவிக்கு ஜீவனே அப்பொழுதுதான் வந்தது போலிருந்தது. கோகுலத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள். 
'
பழம் வாங்கலியோ பழம். சக்தி கொடுக்கற  பழம், நோயைப் போக்குற பழம், இனிப்பான பழம்' எப்படியும் பழங்களை விற்று விடலாம் என்று நம்பி, கோகுலம் தெருக்களில் அலையத் தொடங்கினாள். ஆனால்..... 

கிழவி, கூவிக் கூவி களைத்தது தான் கண்ட பலன். நெஞ்சு வரண்டு போனது. நம்பிக்கை தளர்ந்து போனது. 

'இப்பொழுதே  கலியுகம் வரத் தொடங்கிவிட்டதா? எங்கே இந்த கோபர்கள்? தெருவில் ஒருத்தரைக் கூடக் காணவில்லையே? இந்தப் பெண்கள் என்ன விற்கிறேன் என்று பார்க்கக் கூட வெளியில் வரவில்லையே?'

'மாம்பழம் அம்மா மாம்பழம், வாங்குங்க. வெண்ணெய்யும் , தயிரும் சாப்பிடற உங்களுக்கு இந்தப்பழமெல்லாம் பிடிக்காதா?' அப்பொழுது, அவளுக்கு ஞாபகம் வந்தது. 'வ்ரஜ மன்னரின் வீட்டிற்கல்லவா முனிவர் போகச் சொன்னார். நான்தான் பைத்தியக்காரி போல் தெருக்களில் அலைகிறேன். ஆயர்கள் வீட்டவர்களே வாங்காத பொழுது, அரச குடும்பத்தவர்களா வாங்கப் போகிறார்கள்?'

வ்ரஜ மன்னரின் இல்லத்தின் முன்பு சற்று நிதானித்தாள். 'பழம் வாங்கலியோ பழம். இனிப்பான மாம்பழம்'

அவநம்பிக்கையுடன் மீண்டும் குரல் கொடுத்தாள். 

'ஏ....பழக்காரி...'

யார் கூப்பிட்டார்கள் என்று கூட கிழவி பார்க்கவில்லை. கூடையைத் தரையில் இறக்கி வைத்தாள். கூப்பிட்டது, ஒன்றரை வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை.

சுருண்டுருண்ட குழல்கள், மயிற்பீலி மகுடம், சுந்தர வதனத்தில் மை தீட்டிய கண்கள், வில்லினை ஒத்த வளைந்த புருவம், கால்களில் சிலம்பு, கைகளில் கற்கள் இழைத்த வளையல்கள், கழுத்தினில் பெரிய முத்துமாலை, இடுப்பினில் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட மேகலை, இத்தனை ஆபரணங்கள் அணிந்திருந்த அப்பாலகனின் மேனியில் பொட்டுத் துணி கூட இல்லை. உடம்பு, கை, கால்களில் மண்ணும், புழுதியும் அப்பிக் கிடந்தது. 

கிழவி, வந்த வேலையை மறந்தாள். பாலகனை உச்சி முதல் பாதம் வரை ஏற இறங்க பார்த்துக்கொண்டே இருந்தாள். அந்த லீலா விநோதனை, நாளெல்லாம் அன்னம், நீர் இன்றி பார்த்துக் கொண்டே இருப்பதில்தான் எத்தனையொரு சௌபாக்கியம். பாலகன், தன் கைகள் இரண்டையும் நீட்டி, 'பழம் கொடு' என்றான். 

கிழவிக்கோ, பழத்தைக் கொடுத்து விட்டால், பாலகன் உள்ளே சென்று விடுவானோ? அந்த திவ்ய தரிசனம் கிடைக்காமல் போய்விடுமோ? என்று எண்ணினாள். 

'இதற்குண்டான விலையைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு பழங்களை எடுத்துச் செல்'

'என்ன பாட்டி நீ. விலையெல்லாம் கேட்கிறாய். என் அம்மா பால் தருகிறாள். வெண்ணை தருகிறாள். என்னிடம் அதற்குண்டான விலை கேட்பதில்லையே' 

'ஏனென்றால் அவள் உன் தாய் இல்லையா? அதனால் கேட்டிருக்க மாட்டாள்'

'பீவரி பெரியம்மா, ரோகிணி பெரியம்மா, அதுலா சித்தி இந்த அம்மாவெல்லாம் கூட எனக்கு எல்லாமே தருகிறார்கள். ஆனால் யாருமே  என்னிடம் உன்னைப்போல் இப்படிக் கேட்டதில்லை'

'நீ அவர்களை அம்மா என்கிறாய் அல்லவா?'

திரு திரு என்று விழித்தான், தாமரைக்கண்ணன். 

பழங்களை பாலகனுக்கு அள்ளித்தந்து விட வேண்டும் என மனம் நினைத்தாலும், கிழவிக்கு, நீலமேகச்யாமளனின் அருகாமை பிடித்திருந்தது. அவனின் அமுத பாஷை பிடித்திருந்தது. பழத்தைக் கொடுத்தால், நடையைக் கட்டிவிடுவான். சுகானுபாவம் கிடைக்காது. 

'சரி பாட்டி, என்ன கொடுத்தால் பழம் கொடுப்பாய்?'

'எனக்கு  நெல்மணிகள் கொடுத்தால், சாதம் மட்டுமாவது செய்து கொள்வேன்'

இந்த முறை, நிச்சயமாக நெல்மணிகளுக்கு ஆசைப்பட்டு கிழவி கேட்கவில்லை. இருந்தாலும் அவனைப் பேச வைத்து கேட்பதில் அவளுக்கு ஆனந்தமாக இருந்தது. 

ஒரு கணம் யோசித்த மயிற்பீலி மகுடன், தன் சிறு பாதங்களால் உள்ளே சென்றான். முற்றத்தில் நெல் காயப்போட்டிருந்ததிலிருந்து, இரு கைகளாலும் நெல்மணிகளை அள்ளிக் கொண்டான். 

கிழவி அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். 

கோகுலவாசனை பார்ப்பவர்களுக்கு, கண்களும், மனமும்,  உயிரும், ஏன்?  எல்லாமுமே   அவனிடத்திலேயே  தான்  லயித்துதான் விடுகிறது. நெல் மணிகளை வழியெல்லாம் சிதறிய வண்ணம் கிழவியை அணுகினான். 

கைகளில் மீதம் இருந்த இரண்டு நெல் மணிகளைக் கொடுத்தான். 

'எல்லாம் சிதறி விட்டது. இப்பொழுது பழங்களைக் கொடுத்துவிட்டு போ. நான் அப்பாவிடம் கேட்டு நிறைய நெல்மணிகள் வாங்கி வைக்கிறேன். நாளை வந்து வாங்கிக் கொள். சீக்கிரம் கொடு. அம்மா தேடுவார்'

'அதெல்லாம் முடியாது. நீ அம்மா என்று கூப்பிட்டாலே எல்லாமே உனக்கு விலையில்லாமல் கிடைத்து விடுகிறது இல்லையா?'

'ஆமாம்' என்கிற பாவனையில் தலையை மேலும், கீழும் அசைத்தான்,  மோகனன். 'அப்படியானால் ஒன்று செய். என் மடியில் வந்து உட்கார்ந்து கொள். உன் கொவ்வைச் செவ்வாயால் என்னை ' அம்மா'  என்று கூப்பிடு' கிழவிக்கு ஆசை அல்ல. பேராசையாகத்தான் இருந்தது. வ்ரஜ ராஜ குமாரனை ஒரு மலை ஜாதிக் கிழவி தாஜா செய்வதை யாராவது பார்த்தால் என்ன நேருமோ என்கிற அச்சம் உள்ளூர இருந்தாலும், கரியவனின் காந்த சக்தி அவள் அறிவை மழுங்கச்செய்து விட்டது. 

யசோதையின் இளம் சிங்கம், கிழவியின் மடியில் அமர்ந்தான். 

அவள் முகத்தை இரு கைகளாலும் மெதுவாகத் தாங்கி நிமிர்த்தினான். 

'அம்மா.........'

அவ்வளவுதான். கிழவியின் கண்கள் ஆனந்த நீரைச் சொரிந்தன. தன் இரு கைகளாலும் கண்ணனின் கன்னங்களைத் தழுவி, தன் நெற்றிப் பொட்டில் திருஷ்டி சொடுக்கினாள். 

'கண்ணா, இந்தா. இந்த இந்தக் கூடையில் இருக்கும் பழங்கள் அனைத்துமே உனக்குத்தான். உன்னுடைய ஸ்பரிசமும், அன்பு வார்த்தையும் எனக்கு இந்த ஆயுளுக்கு மட்டுமல்ல, வரப்போகும் ஜன்மங்களுக்கும் போதுமடா கண்ணே' கிழவி, முகுந்தன் கை நிறைய பழங்களைத் திணித்தாள். எல்லா பழங்களையும் அங்கேயே கொட்டினாள். பழங்களைத் தாங்கியபடி கோலாகலன் உள்ளே சென்றான். 

'எல்லோரும் மாம்பழம் சுவைக்க வாருங்கள்' பெரிய குரலில் தாமோதரன் எல்லாரையும் கூப்பிடுவது மட்டும் கிழவியின் காதில் கேட்டது. இனி அவளுக்கு எதுவுமே வேண்டாம். அவளின் உயிரில் கலந்த அந்த ஸ்பரிசமும், உணர்வும் அவளோடு கலந்த பிறகு எதை எதிர்பார்க்கப் போகிறாள்? 

காலியான தன் கூடையை, யமுனையின் ப்ரவாகத்தில் தூக்கி எறிந்தாள். மனம் குதூகலத்தில் நிரம்பி வழிய, தன் குடிலுக்குத் திரும்பினாள். என்ன ஆச்சர்யம்? அவளின் குடிசை முழுவதும் அன்னக்குவியல். ஒரு ஓரமாய் ரத்தினக் குவியல். நீலமேகச்யாமளனின் எல்லையற்ற கொடைத்தன்மைக்கு ஈடேது? மலை வாழ் மக்கள் எல்லோரும் வேண்டிய அளவு அன்னத்தையும், ரத்தினத்தையும் மீண்டும் மீண்டும் வந்து எடுத்துச் சென்றனர். அந்த அனாத நாத தீன பந்துவின் லீலைகளை யார் அறிவார்? அவனை நினைத்தால் போதுமே! அளவற்ற ஆசிகளை வழங்கி, நம்மை செம்மைப் படுத்தும் பீதாம்பரதாரியின் நாமம் போற்றுவோம்.  

- மாலதி சந்திரசேகரன் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com