திருத்தணியில் ஆடிக் கிருத்திகை விழா: 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடிக் கிருத்திகை விழாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டனர்.
ஆடிக் கிருத்திகையையொட்டி, செங்கல்பட்டு சக்தி விநாயகர் கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகர்.
ஆடிக் கிருத்திகையையொட்டி, செங்கல்பட்டு சக்தி விநாயகர் கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகர்.

திருத்தணி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடிக் கிருத்திகை விழாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டனர்.
ஆறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில், ஆடிக் கிருத்திகை விழா, ஞாயிற்றுக்கிழமை ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. திங்கள்கிழமை ஆடி பரணியும், செவ்வாய்க்கிழமை ஆடிக் கிருத்திகை திருவிழாவும் நடைபெற்றது. விழாவையொட்டி, தமிழகம் மட்டுமில்லாது அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் திருத்தணிக்கு பக்தர்கள் காவடிகளுடன் வந்து குவிந்தனர்.
இதில் சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் தலையை மொட்டை அடித்தும், உடல் முழுவதும் வேல், எலுமிச்சை, தேங்காய் அலகு குத்தியும், மயில் காவடி, புஷ்பக் காவடி, பால் காவடிகள், பம்பை உடுக்கையுடன் பக்தி பாடல்களை பாடிய வண்ணம் 365 படிகள் ஏறி மலைக்கோயிலை வந்தடைந்தனர். பின்னர் மூலவரை பொதுவழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை வழிபட்டனர்.
விழாவில், மூலவர் முருகப் பெருமானுக்கு பால், பன்னீர், திருநீறு, சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பச்சை மாணிக்க மரகதக் கல், தங்க கீரிடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் அரக்கோணம் எம்.பி. திருத்தணி கோ.அரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். திருவள்ளூர் - காஞ்சிபுரம் மாவட்ட ஆவின் பால் தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன் ஏற்பாட்டில் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் அன்ன தானம் வழங்கினார். இதே போல் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்ன தானம், நீர் மோர், குடிநீர் வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் தக்கார் வே.ஜெயசங்கர், கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி மற்றும் கோயில் அதிகாரிகள் செய்திருந்தனர்.
வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில்...
வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆ டிக் கிருத்திகை விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை திரளான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி ஏந்தியும் முருகனை வழிபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டையில் பழைமைவாய்ந்த வள்ளி தெய்வசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை இன்னிசை நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு பரணி அபிஷேகமும், இரவு 12 மணிக்கு விபூதி காப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இதையடுத்து பிற்பகல் 3 மணிக்கு உற்சவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு கோடை ஆண்டவர் திருவீதியுலாவும் நடைபெற உள்ளது. விழாவில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பக்தர்களின் வசதிக்காக சென்னை, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் அகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ரத்தினகிரி கோயிலில்...
வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை பெருவிழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, பாலமுருகனடிமை சுவாமி தலைமையில் அதிகாலை 3 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத பாலமுருகன் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், 3.30 மணிக்கு ராணிப்பேட்டை நகரத்தார் சங்கம் சார்பில் பால்குட அபிஷேகமும், 4.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. அதிகாலை 5 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
இதைத் தொடர்ந்து, மூலவருக்கு தங்க , வெள்ளிக் கவசம் மற்றும் வைர ஆபரணம் அணிவிக்கப்பட்டு, உற்சவர் தங்க ரதத்தில் காட்சியளித்தார். கருவறை சுற்று புஷ்ப அலங்காரம், வெள்ளித் தேர் ரிஷப வாகனம், மயில் வாகனம் மூஷிக வாகனத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com