முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை விழா: 2-ஆம் நாள் தெப்போற்சவம்

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழாவின் இரண்டாம் நாள் தெப்போற்சவத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, முருகப் பெருமானை
திருத்தணி முருகன் கோயில் சரவணப் பொய்கையில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் தெப்போற்சவம்.
திருத்தணி முருகன் கோயில் சரவணப் பொய்கையில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் தெப்போற்சவம்.

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழாவின் இரண்டாம் நாள் தெப்போற்சவத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, முருகப் பெருமானை வழிபட்டனர்.
அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில், ஆடிக் கிருத்திகை திருவிழா, ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திங்கள்கிழமை ஆடிப் பரணியும், செவ்வாய்க்கிழமை ஆடிக்கிருத்திகை விழாவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், இரண்டாம் நாள் தெப்போற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏராளமானோர், தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மொட்டை அடித்தல், உடல் முழுவதும் வேல், எலுமிச்சை, தேங்காய் அலகு குத்துதல், மயில் காவடி, புஷ்ப காவடி, பால் காவடி எடுத்தல், பம்பை உடுக்கையுடன் பக்தி பாடல்களை பாடியவாறு 365 படிகளில் ஏறுதல் உள்ளிட்ட நேர்த்திக்
கடன்களை செலுத்தினர். பின்னர், மலைக்கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை தரிசித்தனர்.
புதன்கிழமை மாலை 6 மணிக்கு சரவணப்பொய்கையில் கொட்டும் மழையில், இரண்டாம் நாள் தெப்போற்சவம் நடைபெற்றது. அப்போது, மலைக்கோயிலில் இருந்து உற்சவர் முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், பின்னணிப் பாடகி ஜீவா வர்ஷினி ஆகியோரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி, கோயில் தக்கார் வே.ஜெயசங்கர், கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
செங்கல்பட்டில்...
ஆடிக்கிருத்திகையையொட்டி, கோயில்களில் முருகருக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது.
செங்கல்பட்டு வ.உ.சி. தெருவில் உள்ள காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், பெரியநத்தம், கைலாசநாதர்கோயில் காட்டுநாயக்கன் தெருவில் மலைமீதுள்ள செம்மலை முருகன் கோயில், அண்ணாநகர் ரத்தின விநாயகர் கோயில், எல்லையம்மன் கோயில், மேட்டுத் தெரு செங்கழுநீர் விநாயகர் கோயில், ஜிஎஸ்டி சாலை சக்தி விநாயகர் கோயில், இருங்குன்றம்பள்ளி பாலமுருகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஆடிக்கிருத்திகையையொட்டி, சிறப்பு அபிஷேக-அலங்காரம் நடைபெற்றது. இதேபோன்று திருப்போரூர் கந்தசாமி கோயிலில் முருகருக்கு சிறப்பு அபிஷேகம், முத்தங்கி சேவை அலங்காரம் நடைபெற்றது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், வேல் குத்தியும், காவடிகள் சுமந்து வந்தும் சாமியை வழிபட்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் நற்சோணை உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக- அலங்காரம் நடைபெற்றது. பின்னர் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com