திருமலையில் 192 போலி விரைவு தரிசன டிக்கெட் பறிமுதல்

திருமலையில் 192 போலி விரைவு தரிசன டிக்கெட்டுகளை ஊழியர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். 

திருமலையில் 192 போலி விரைவு தரிசன டிக்கெட்டுகளை ஊழியர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். 
ஏழுமலையான் தரிசனத்தை எளிதாக்க கடந்த 2014-ஆம் ஆண்டு தேவஸ்தானம் ரூ300 விரைவு தரிசன டிக்கெட் ஆன்லைன் முன்பதிவை தொடங்கியது. பக்தர்கள் தங்களின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வந்தனர். 
இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தேவஸ்தானம் இதன் கோட்டாவை அதிகரித்ததுடன் இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கியது. ஒரே சமயத்தில் 10 டிக்கெட் வரை முன்பதிவு செய்யும் வசதி, கூடுதல் லட்டு டோக்கன் பெறும் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தியது.
இந்த டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தர்கள் 2 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை காலை மகாராஷ்டிராவை சேர்ந்த 192 பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக திருமலைக்கு வந்தனர். ஆனால் அவர்களின் டிக்கெட்டுகள் ஸ்கேன் ஆகவில்லை. இதுகுறித்து அறிந்த ஊழியர்கள் தொழில்நுட்ப வல்லுநர்களின் துணையுடன் இந்த டிக்கெட்டுகள் போலியாக அச்சிடப்பட்டவை என்பதைக் கண்டறிந்தனர். 
இந்த டிக்கெட்டுகளை மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரசாந்த் தயானந்த் பகத் என்றவர் போலியாக தயாரித்துள்ளதும் அதற்கு அவர் போலியான பார்கோடை ஏற்படுத்தி உள்ளதும் தெரிய வந்தது. அதனால் திருமலை தலைமை கண்காணிப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா இதுகுறித்து விசாரணை நடத்தி பிரசாந்த்தை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். போலி டிக்கெட் வைத்திருந்த அனைத்து பக்தர்களையும் தேவஸ்தானம் தர்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க ஏற்பாடு செய்தது. 
இதுகுறித்து அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். பக்தர்களின் நன்மைக்காக தேவஸ்தானம் மேற்கொள்ளும் முயற்சிகள் இது போன்ற சிலரால் பாதிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகள் மட்டும் ஸ்கேன் ஆகி பக்தர்கள் தரிசனத்திற்கு சென்றிருந்தால் விரைவு தரிசன டிக்கெட்டில் மிக பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது. அது தற்போது தடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com