உழவாரப் பணி!

நவாஸ்பேட்டை - சென்னை காஞ்சிபுரம் மார்க்கத்தில் படைப்பை ஒரகடம் வாலாஜாபாத்
உழவாரப் பணி!

19.2.2017 நடைபெறவுள்ள உழவார பணி பற்றி ஒரு சிறு குறிப்பு.

சென்னை காஞ்சிபுரம் மார்க்கத்தில் படைப்பை ஒரகடம் வாலாஜாபாத் வழித்தடத்தில், வாலாஜாபாத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் ஏகனாம்பேட்டை மற்றும் கருக்குப்பேட்டை இடையே உள்ளது நவாஸ்பேட்டை எனும் கிராமம். பேருந்து மூலம் வருபவர்கள் கருக்குப்பேட்டை பேருந்து நிறுத்ததில் இறங்கி 500 மீட்டர்  நடந்து வரலாம்.

நெடுஞ்சாலையை விட்டு விலகி சிறிது தூரம் கிராமிய மணம் கமழும் மண் பாதையில் நடக்கையில் அது நேரே இந்தக் கோவிலுக்கு இட்டுச் செல்கிறது. சற்று தொலைவிலிருந்து பார்க்கும் போதே, இதன் பிரமாண்டம் ஆர்வம் கொள்ளச் செய்கிறது. ஆனால் அருகே செல்லச் செல்ல முற்றிலும் புதர்களும் முட்செடிகளும் மண்டி கிடப்பதை பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் அழகிய ஆலயமாய் இருந்திருக்கக் கூடிய இத்தலம் இன்று அங்குள்ளவர்களின் அலட்சியத்தால் பராமரிப்பின்றி இருப்பதை பார்த்து பக்தர்கள் வேதனை அடைகிறார்கள்.  

மண்டியுள்ள முட் புதர்களை கவனமாக கடந்துதான் ஆலயத்தை அடைய முடியும் அவல நிலை.

சுமார் 20 சென்ட் பரப்பளவில் இந்த பிரமாண்ட கோவில் உள்ளது. தொண்டை மண்டலத்தில் உள்ள மற்ற ஆலயங்களை போலவே இந்த கோவிலும் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறை கிழக்கு முகமாக அமைந்துள்ளது. நந்தி பீடமும் பலி பீடமும் கிழக்கு பக்கம் உள்ளது. ஆனால் நந்திகேஸ்வரர் கொம்பு உடைந்த நிலையில் வேறொரு இடத்தில் தரையில் அமர்ந்துள்ளார்.

மண்டபத்தை அழகுற அலங்கரித்த நடராஜரின் மிக பெரிய சுதை சிற்பம் மண்ணில் விழுந்து கிடக்கிறது. மற்ற எந்த விக்கிரஹங்களும் காணவில்லை. கருங்கல்லினால் ஆன கலை நயத்துடன் கூடிய மண்டப தூண்கள் பார்க்க முடிகிறது. மேற்கூரையும் கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே பொறிக்கப்பட்டுள்ள மீன், சூரியன் மற்றும் சந்திரன் உருவங்கள் மூலம் இது பரிகார தலமாக இருந்திருக்கவேண்டும் என அறிகிறோம் . கோயில் சுவர்கள் உறுதியான செங்கல்லால் கட்டப்பட்டு க்ரானைட் கற்களால் மூடப்பட்டுள்ளது. ஆனால், பல வருடங்களாக பராமரிப்பு இல்லாமையால் இப்போது செடி, கொடி, மரங்கள் அவற்றின் மீது வளர்ந்துள்ளது.

கோவிலின் தெற்கே சதுர வடிவில் ஒரு குளத்தை காண முடிகிறது. தேவ ப்ரச்னத்தில் அறியப்பட்ட சர்வ மங்கள தீர்த்தம் அது தான் எனக் கருதுகிறோம். . கோவிலை சுற்றி அரணாக மிக பெரிய சுற்று சுவர். ஆனால் தற்சமயம் பாதிக்கும் மேல் சிதிலமடைந்துள்ளது. தேவ பிரசன்னம் மூலம் தல விருட்ஷம் வில்வம் என்று அறிந்தோம் இருப்பினும் இங்கே முழுவதும் தேடியும் காண முடியவில்லை. எனவே 19 .2 .2017 அன்று உழவாரப் பணி முடிந்தபின் வில்வ கன்று நட இருக்கிறார்கள்.  

சில கிராமத்து இளைஞர்களும் உழவார பணியில் கலந்து கொள்வதாய் உறுதி அளித்துள்ளனர். தலத்தை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு நாளில் உழவார பணி முடிக்க 2 ஜேசிபி தேவைப்படும். அடியவர்கள் பலர் சனிக்கிழமை இரவே வந்து தங்கி ஞாயிறு அதிகாலை பணி துவங்க ஆர்வமாய் உள்ளனர். அவர்களுக்கு தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு : ராமசந்திரன் 9884080543

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com