அம்மன் கோயில்களில் மயான கொள்ளை உற்சவம்

திருவள்ளூர் அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மயான கொள்ளை உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மயான கொள்ளை உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூரை அடுத்த புட்லூர் ராமாபுரத்தில் பூங்காவனத்தம்மன் (எ) அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை ஒட்டி, மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கடந்த இருநாள்களுக்கு முன், மயான கொள்ளையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டனர்.
இதையடுத்து, சனிக்கிழமை காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மயான கொள்ளை உற்சவத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மதியம் கோயில் குளம் அருகே உள்ள மைதானத்தில், அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர், விரதமிருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதலை, அப்பகுதியில் உள்ள மயானத்தில் சென்று நிறைவேற்றினர்.
இதில், புட்லூர், ராமாபுரம், காக்களூர், செவ்வாப்பேட்டை, திருவள்ளூர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1. புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற மயான கொள்ளை உற்சவம். 2. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அங்காள பரமேஸ்வரி அம்மன். 3. திருத்தணி அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதி உலா. 4. மயான கொள்ளையில் பறவைக் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். 5. மதுராந்தகத்தை அடுத்த திரு.வி.க நகர் அங்காளம்மன் கோயில் நடைபெற்ற மயானக் கொள்ளை. 6. ஊர்வலத்தில் பத்ரகாளி வேடமணிந்து வந்த பக்தர்கள். 7. செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள பழைய அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற வீதி உலாவில் சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன். 8. மயானக் கொள்ளையையொட்டி, கிழக்கு கடற்கரைச் சாலை, கூவத்தூர் அங்காளம்மன் கோயிலில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பவனி வந்த அம்மன்.


திருத்தணியில்...

திருத்தணி பழைய பஜார் தெருவில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாயன கொள்ளை உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மயான கொள்ளை பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து தினமும் காலை 10 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவ அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் எழுந்தருளினார்.
மாலை 3 மணிக்கு மயான கொள்ளையும், அதைத்தொடர்ந்து நந்தி ஆறு வரை அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. அப்போது, ஆற்றில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் மீது சுண்டல், கொழுகட்டை ஆகியவற்றை வீசி, அம்மனை வழிபட்டனர்.
பின்னர், பெண்கள் தேங்காய் உடைத்து அம்மனுக்கு பூஜை செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பர்வதராஜகுல மரபினர், பழைய பஜார் மக்கள் செய்திருந்தனர்.
இதேபோல், திருத்தணியை அடுத்த எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலிலும் மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுராந்தகத்தில்...

மதுராந்தகம் நகராட்சிக்கு உள்பட்ட திரு.வி.க நகரில் உள்ள அங்காளம்மன் கோயிலில் 15-ஆம் ஆண்டு மயானக் கொள்ளை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் மாசி மாத அமாவாசை அன்று மயானக் கொள்ளை நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மங்கள இசையுடன் விழா தொடங்கியது.
விநாயகர், கருவறை அம்மன் போன்ற அனைத்து சந்நிதிகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
மயானக் கொள்ளை விழாவின் 3-ஆம் நாள் நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கின. கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதையடுத்து பிற்பகல் 1.30 மணிக்கு வாணவேடிக்கை, மேளதாளத்துடன் பத்ரகாளி வேடமணிந்தவர் முன்செல்ல, அலங்கரிக்கப்பட்ட அம்மன் வாகனம் மயானதிடலுக்கு வந்தடைந்தது.
அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதல்களுக்காக காய்கறிகள், பழங்கள், சில்லறை நாணயங்கள் போன்றவற்றை வாரி இறைத்தனர்.
இதில், மதுராந்தகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசித்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா செல்வம், சக்தி மணிகண்டன், பரசுராமன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com