ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பரமபதவாசல் திறப்பு

திருச்சி அருகே ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பரமபத வாசல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம், அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் ஞாயிற்றுக்கிழமை பரமபத வாசலை கடந்துவரும் நம்பெருமாள். (வலது) சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் பரமபத வாசல் (சொர்க்க வாசல்) வழி
ஸ்ரீரங்கம், அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் ஞாயிற்றுக்கிழமை பரமபத வாசலை கடந்துவரும் நம்பெருமாள். (வலது) சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் பரமபத வாசல் (சொர்க்க வாசல்) வழி

திருச்சி அருகே ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பரமபத வாசல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
பூலோக வைகுண்டம் என்றும், 108 வைணவத் தலங்களில் முதன்மையானது என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா கடந்த 28-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 29-ம் தேதி பகல்பத்து உற்சவம் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு, இராப்பத்து திருவிழாவின் முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது. பரமபத வாசல் திறப்பையொட்டி மூலவர் பெருமாளுக்கும், நம்பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருப்பள்ளியெழுச்சி நடைபெற்ற பின்னர், விருச்சிக லக்கனத்தில் விலை மதிப்பற்ற ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து கருவறையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு சிம்ம கதியில் புறப்பட்ட நம்பெருமாள், வலதுபுற மதில்படி வழியாக ராஜமகேந்திரன் திருச்சுற்று வந்தடைந்தார்.
அங்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகளுக்கு மரியாதை செய்யப்பட்ட பின்னர், பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாயிலைக் கடந்த நம்பெருமாள், மூன்றாம் பிரகாரத்திலுள்ள தங்கக்கொடிமரம் வழியாக துரைப்பிரதட்சணம் செய்து, குலசேகரன் திருச்சுற்று வழியாக, அதிகாலை 4.30 மணிக்கு விரஜாநதி மண்டபத்தை வந்தடைந்தார்.
இதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா, ரங்கா ரங்கா என்ற கோஷங்களுக்கு இடையே அதிகாலை 4.50 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது.
அப்போது பக்தர்கள் புடைசூழ காலை 5 மணிக்கு பரமபத வாசல் வழியாக கடந்து சென்று நம்பெருமாள் பிரவேசித்தார். தொடர்ந்து சந்திர புஷ்கரிணி, ராமர் சன்னதி, நடைபந்தல் வழியாக தவுட்ரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்துக்கு வெளியே உள்ள திருக்கொட்டகை பகுதிக்கு காலை 5.15 மணிக்கு சென்றடைந்த நம்பெருமாள் அங்கு பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சாதரா மரியாதை நடைபெற்றது.
ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் முன்பு எழுந்தருளுவதற்காக ஆழ்வார்கள் புறப்பாடாகி வந்தபோது, திருக்கொட்டகை பகுதியிலிருந்த போலீஸார் நாலுகால் மண்டபத்தை சுற்றி வருமாறு கூறியதால், சீர்பாதம் தாங்கிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆழ்வார்கள் சென்றவடைதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதனால், காலை 7.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் எழுந்தருள வேண்டிய நம்பெருமாள், 8.45 மணிக்கு மேல்தான் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்து, ஆழ்வார்களுக்கு காட்சி அளித்தார்.
அலங்காரம், அமுது செய்த பின்னர், காலை 9.45 மணிக்கு மேல் மாலை 6 மணி வரை ரத்தின அங்கியில் நம்பெருமாளைத் தரிசனம் செய்ய பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் தரிசனத்துடன் அரையர் சேவை நடைபெற்ற நிலையில், திருப்பாவாடை கோஷ்டி, வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரையிடப்பட்டு, மீண்டும் இரவு 10 மணிக்கு மேல் உபயதாரர் மரியாதையுடன் பொதுமக்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்குப் புறப்பாட்டுக்குத் திரையிடப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள், வீணை வாத்தியத்துடன் திங்கள்கிழமை அதிகாலை 1.15 மணிக்கு கருவறையைச் சென்றடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com