திருவையாறு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகள்: ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பங்கேற்பு

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் நடைபெற்ற தியாகராஜர் ஆராதனை விழாவில், ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள் செவ்வாய்க்கிழமை பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி
திருவையாறில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தியாகராஜர் ஆராதனை விழாவில், பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடிய இசைக் கலைஞர்கள்.
திருவையாறில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தியாகராஜர் ஆராதனை விழாவில், பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடிய இசைக் கலைஞர்கள்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் நடைபெற்ற தியாகராஜர் ஆராதனை விழாவில், ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள் செவ்வாய்க்கிழமை பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி ஸ்ரீதியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர்.
திருவையாறு தியாகராஜர் ஆஸ்ரமத்தில் தியாகராஜரின் 170-வது ஆராதனை விழா ஜன. 13-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 5 நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் தியாகராஜர் முக்தி அடைந்த நாளையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் சுமார் ஒரு மணிநேரத்துக்கு பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரபஞ்சம் எஸ். பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ஜகதா நந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக... என்ற பாடல் பாடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கெளளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ... என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ஸாதிஞ்செநெ ஓ மநஸா... என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த கனகன ருசி ரா கநகவஸந நிந்நு... என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு... ஆகிய பாடல்களைப் பாடி கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, மகாநதி ஷோபனா, சாருமதி, ஓ.எஸ். அருண், விஜய் சிவா, கர்னாடிகா சகோதரர்கள் கே.என். சசிகிரண், பி. கணேஷ், பாபநாசம் அசோக் ரமணி, உமையாள்புரம் சிவராமன், அரித்துவாரமங்கலம் கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ், ப்ரியா சகோதரிகள் சண்முகப்ரியா, ஹரிப்ரியா, திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார், பி.வி. பரமேஸ்வரன் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் பங்கேற்று ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகள் வாசித்தும் ஸ்ரீதியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர்.
விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, ஸ்ரீதியாக பிரம்ம மஹோத்சவ சபைத் தலைவர் ஜி.ஆர். மூப்பனார், பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com