திவ்ய தரிசனம் டோக்கன் பெறுவதில் பக்தர்கள் போட்டா போட்டி

திருமலையில் திவ்யதரிசன டோக்கன்களை பெற ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பக்தர்கள் போட்டியிட்டு வருகின்றனர்.
திவ்ய தரிசனம் டோக்கன் பெறுவதில் பக்தர்கள் போட்டா போட்டி

திருமலையில் திவ்யதரிசன டோக்கன்களை பெற ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பக்தர்கள் போட்டியிட்டு வருகின்றனர்.
திருமலையில் திங்கள்கிழமை முதல் திவ்யதரிசன டோக்கன் வழங்குவதில் தேவஸ்தானம் புதிய முறையை அமல்
படுத்தியது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணி முதல் அலிபிரி நடைபாதை தொடங்கும் இடத்தில் முதல்படி அருகில் திவ்யதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதனை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச் சென்றனர்.
அவர்கள் காளிகோபுரத்துக்கு செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகும். அங்கு சென்ற பிறகு 12.05 மணிக்கு அவர்களின் டோக்கனில் தரிசன நேரம், இலவச லட்டுக்கான முத்திரைகள் இடப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை இரவு டோக்கன் பெற்றவர்களுக்கு திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தரிசன நேரம் ஒதுக்கப்பட்டது. அதனால் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு பக்தர்கள் திவ்ய தரிசன காத்திருப்பு அறைக்கு சென்றால், அவர்கள் இரண்டரை மணி நேரத்துக்குள் ஏழுமலையானை தரிசித்து திரும்ப முடியும்.
நடைபாதை மார்க்கத்தில் தேவஸ்தானம் 20 ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்குவதால், பக்தர்கள் முன்கூட்டியே வந்து அலிபிரி திவ்ய தரிசன கவுன்ட்டர்களில் காத்திருந்து, போட்டி போட்டு டோக்கன்களை பெற்றனர்.
இதேபோல் ஸ்ரீவாரி மெட்டு மார்க்கத்திலும் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் திவ்ய தரிசன கவுன்ட்டர்களில் டோக்கன் வழங்கும் முறை தொடங்கியது. அலிபிரி மார்க்கத்தில் 14 ஆயிரம் டோக்கன்களும், ஸ்ரீவாரிமெட்டு மார்க்கத்தில் 6 ஆயிரம் டோக்கன்களும் என 20 ஆயிரம் திவ்ய தரிசன டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.
20 ஆயிரம் டோக்கன்கள் முடிந்த பின்னர், நடைபாதை மார்க்கத்தில் வரும் பக்தர்கள் தர்ம தரிசனத்தில் மட்டுமே ஏழுமலையானைத் தரிசிக்க முடியும்.
திங்கள் முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே இந்த டோக்கன்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

உண்டியல் வருமானம் ரூ. 2.97 கோடி
 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 2.97 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின்னர், ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். அதன்படி, சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ. 2.97 கோடி வசூலானது.

83,770 பக்தர்கள் தரிசனம்
ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 83,770 பக்தர்கள் தரிசித்தனர். இவர்களில் 35,902 பக்தர்கள் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தினர். திங்கள்கிழமை காலை நிலவரப்படி, தர்ம தரிசன பக்தர்கள் 23 காத்திருப்பு அறைகளிலும், நடைபாதை பக்தர்கள் 4 காத்திருப்பு அறைகளிலும் ஏழுமலையானைத் தரிசிக்கக் காத்திருந்தனர்.
தர்ம தரிசனத்துக்கு 8 மணி நேரமும், நடைபாதை பக்தர்களுக்கு 3 மணி நேரமும் ஆனது.

ரூ.21.57 லட்சம் நன்கொடை
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் தினசரி நன்கொடை அளித்து வருகின்றனர்.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.20.57 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.21.57 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com