முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருத்தணி உள்பட மாவட்டத்தின் பல்வேறு முருகன் கோயிலில் புதன்கிழமை ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது
திருத்தணியில் குவிந்த முருக பக்தர்கள்.
திருத்தணியில் குவிந்த முருக பக்தர்கள்.

திருத்தணி உள்பட மாவட்டத்தின் பல்வேறு முருகன் கோயிலில் புதன்கிழமை ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் கோயில்களில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடாக திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்படும். இதில், தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் காவடிகளுடன் முருகப்பெருமானை வழிபட்டு செல்வர்.
இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு கிருத்திகைகள் வருவதால், ஆடி மாதத்தின் முதல் கிருத்திகையான புதன்கிழமை மூலவர் முருகப்பெருமானுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. பின்னர், வைர கிரீடம், பச்சைக் கல் முத்து, மரகதம் ஆகிய ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
விழாவில், காலை முதலே பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் முருகனின் பக்தி பாடல்களை பாடிய வண்ணம், பம்பை, உடுக்கை, மேள தாளங்களுடன் மலைக்கோயிலை அடைந்தனர்.
பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், ரூ.100, 50 டிக்கெட் தரிசன வழிகள், இலவச தரிசன வழிகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து, காவடி செலுத்தி முருகப் பெருமானை தரிசித்தனர்.
நிர்வாகம் மெத்தனம்...
ஆடிக் கிருத்திகையின்போது, பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம், அனைத்துத் துறைகள் சார்பில் சிறப்பு வசதிகள் ஆண்டுதோறும் செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு கிருத்திகை வருவதால், அடுத்த மாதம்
15-ஆம் தேதி வரும் ஆடிக்கிருத்திகை தினத்தில் விழா ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் மெத்தனமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் புதன்கிழமை நடைபெற்ற கிருத்திகை விழாவுக்கு குடிநீர், சிறப்பு வழிகள், நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் ஏதும் கோயில் நிர்வாகத்தால் செய்யப்படவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டினர். மேலும், பக்தர்கள் குடிநீரின்றி தவித்ததோடு, கூட்ட நெரிசல், தள்ளு முள்ளுவில் சிக்கி, கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
காஞ்சி குமரக் கோட்டம் கோயிலில்...
 காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள குமரக் கோட்டம் முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு புதன்கிழமை திரளான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
காஞ்சிபுரம் கிழக்கு ராஜ வீதியில் அமைந்துள்ள குமரக் கோட்டம் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தைப் பூசம், ஆடிக் கிருத்திகை திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு ஆடிக் கிருத்திகை விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி வந்து முருகப் பெருமானுக்கு நேர்த்திக் கடனைச் செலுத்தினர். பலர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
சிங்காரவேல் கோயிலில்...
வேட்டவலம் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ சிங்காரவேல் முருகர் கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி புதன்கிழமை 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, காலை 6 மணிக்கு யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
காலை 7 மணிக்கு வேட்டவலம் பேருந்து நிலையயத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் இருந்து வாண வேடிக்கை, மேள, தாளங்கள் முழங்க 108 பால்குட ஊர்வலம் தொடங்கியது.
நகரின் முக்கிய வீதிகள், மாட வீதிகளில் வழியாக வலம் வந்த பின்னர், 108 பால்குடங்களும் கோயிலை வந்தடைந்தன. இதைத் தொடர்ந்து, மூலவர் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசிங்காரவேலருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
மேலும், பன்னீர், இளநீர், சந்தனம், தயிர், விபூதி, நெய், நாட்டுச் சக்கரை, பஞ்சாமிர்தம், மலர் உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருள்களைக் கொண்டும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. வெண் பொங்கல், புளியோதரை, கடலை ஆகியவை படையலிட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சுவாமி வீதியுலா: இரவு 8 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசிங்காரவேலர் வீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் சே.பரசுராமன், விழாக் குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில்...
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, வேலூரில் உள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் உள்ள சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதேபோல, தொரப்பாடி சுப்பிரமணியர் கோயில், சைதாப்பேட்டை பழனி முருகன் கோயில் உள்ளிட்ட பெரும்பாலான கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com