ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம். (உள்படம்) தேரில் வீற்றிருக்கும் ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம். (உள்படம்) தேரில் வீற்றிருக்கும் ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகள் வழியே உலா வந்து சுமார் 2.30 மணி நேரத்தில் நிலையை வந்தடைந்தது.
பூமிப்பிராட்டியாம் ஸ்ரீஆண்டாளின் திருஅவதார தினமான ஆடிப்பூர நன்னாளைக் கொண்டாடும் விதமாக ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.
இந்த ஆண்டு கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
12 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஆண்டாள் ரெங்கமன்னார் வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடு ஆகி வீதி உலா நடைபெறும்.
மாலையில் ஆடிப்பூர உற்சவ பந்தலில் பக்தி சொற்பொழிவுகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
5-ஆம் திருநாளான 23-ஆம் தேதி ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்று, இரவு ஐந்து கெருட சேவை நடைபெற்றது.
7-ஆம் திருநாளான 25-ஆம் தேதி அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோவிலில் சயன சேவை நடைபெற்றது. இதில் ஸ்ரீஆண்டாள் திருமடியில் ஸ்ரீரெங்கமன்னார் சயனத் திருக்கோலத்தில் காட்சியளித்தார்.
9-ஆம் திருநாளான 27-ஆம் தேதி அதிகாலை ஏகாந்த திருமஞ்சனம் நடைபெற்று, தனித்தனி தோளுக்கினியான்களில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது.
முன்னதாக மதுரை அழகர்கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து பிரசாதமாக வந்த பரிவட்டங்கள் ஸ்ரீஆண்டாளுக்கு சாற்றப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன.
தேரோட்டம் காலை 8.05 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா, வி.பி.எம்.எம். மகளிர் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர், கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராஜராஜன், மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆர்.வசந்தி, அதிமுக நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ரா.செந்தில்வேலவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தேரோட்டத்தையொட்டி 8 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 700 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆண்டாள் கோயிலில் 46 கண்காணிப்பு கேமராக்கள், நான்கு ரத வீதிகளில் 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
நகராட்சி ஆணையர் டி.எம்.முகமது முகைதீன் தலைமையில் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தேர் நான்கு ரத வீதிகளின் வழியே வந்து காலை 10.35 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர் தேரில் உள்ள சுவாமிகளை பக்தர்ளள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.
தேரோட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com