இந்துமத அற்புதங்கள் 52: உறுதுணையான ஊன்றுகோல்

திருவொற்றியூரிலிருந்து புறப்பட்டுத் திருவாரூர் நோக்கிப் பயணப்பட்டார் சுந்தரர். திருவொற்றியூரிலிருந்து
இந்துமத அற்புதங்கள் 52: உறுதுணையான ஊன்றுகோல்

திருவொற்றியூரிலிருந்து புறப்பட்டுத் திருவாரூர் நோக்கிப் பயணப்பட்டார் சுந்தரர். திருவொற்றியூரிலிருந்து செல்லும்போதே அவருக்குக் கண்பார்வை பறிபோனது. பார்வையின்றித் தட்டுத் தடுமாறிச் சென்றார். வழியில் உள்ள ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று அங்கு எழுந்தருளி அருள் செய்யும் சிவபெருமானை மனதார வணங்கிப் பாடிக் கொண்டே சென்றார்.

அவ்வாறு போகும்போது, வடதிருமுல்லைவாயில் சென்று வழிபட்டுவிட்டு, அங்கிருந்து திருவெண்பாக்கம் என்னும் திருத்தலம் சென்றார். அவ்வழி செல்லும் பல தொண்டர்களுடன் தானும் கோயிலை வலம் வந்து வணங்கினார். வலம் வந்தபின், திருக்கோயிலின் வாயிலை அடைந்து, தலை மேல் கைகூப்பி சற்றே தாபத்துடன், "சிவபெருமானே! நீர் கோயிலுக்குள்தான் இருக்கிறீரா?'' என்று கேட்டார். தன்னால் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியாது என்பதால், "கோவிலுக்குள் இருக்கிறீரா?' என்று கேள்வி கேட்டு பதிலால் தெரிந்துகொள்ள முயற்சி செய்தார் சுந்தரர்.

உள்ளே இருக்கும் இறைவனும் அதற்கு பதில் சொன்னார். "உளோம்! போகீர்!!'' "நாம் உள்ளேதாம் இருக்கிறோம். நீர் உம் வழியே போங்கள்' ""இப்படிச் சொல்லிவிட்டீரே! நீர் உள் இருந்து என்னைப் போக விட்டீரே! எனக்கு யார் துணை வருவார்கள்?'' என்று பொருள்படப் பதிகம் பாடினார் சுந்தரர். பார்வை தெரியாது தனியாகத் தடுமாறிய அவரின் துயரம் போக்க உடனே ஒரு கைத்தடி கொடுத்தார் இறையனார். கோலைத் துணையாகக் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார் சுந்தரர்.

திருவொற்றியூரில் பார்வை போக, தன் பார்வை திரும்ப வேண்டியும், ஊன்றுகோல் கேட்டும், உடல்பிணி நீக்குமாறும் சுந்தரர் பாடிய பதிகம்:

"அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன்
அதுவும் நான்படப் பாலதொன் றானால்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
பிழைப்பன் ஆகிலும் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால்
மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக்கு ஒருமருந்து உரையாய்
ஒற்றி யூரெனும் ஊர்உறை வானே.''
திருவெண்பாக்கத்தில் மனம் வருந்தித் துணை வேண்டி சுந்தரர் பாடிய பதிகம்:
"பிழையுளன பொறுத்திடுவர்
என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே
படலமென்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா
கோயிலுளா யேஎன்ன
உழையுடையான் உள்ளிருந்து
உளோம்போகீர் என்றானே.''

இறைவன் - ஆதாரதண்டேஸ்வரர், ஊன்றீஸ்வரர்

இறைவி - தடித் கௌரி அம்பாள், மின்னொளியம்மை

திருவெண்பாக்கம் தலத்தினைச் சென்றடையும் வழி:
திருவள்ளூரிலிருந்து செல்லப் பேருந்து வசதியுள்ளது. பூண்டி நீர்த்தேக்கம் - அணைப்பகுதி - மக்கள் சுற்றுலா இடமாகவும் திகழ்கின்றது. பழைய கோயில் திருவிளம்பூதூரில் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com