ஜயேந்திரரிடம் ஆசி பெற்றார் குடியரசுத் தலைவர் பிரணாப்

காஞ்சிபுரத்துக்கு தனிப்பட்ட முறையில் செவ்வாய்க்கிழமை வருகை தந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்து ஆசி
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் செவ்வாய்க்கிழமை ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரைச் சந்தித்து உரையாடும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் செவ்வாய்க்கிழமை ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரைச் சந்தித்து உரையாடும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

காஞ்சிபுரத்துக்கு தனிப்பட்ட முறையில் செவ்வாய்க்கிழமை வருகை தந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக, அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
தில்லியில் இருந்து தனி விமானத்தில் பகல் 1.30 மணிக்கு அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தளத்துக்கு வந்திறங்கிய அவரை, விமான தளத்தின் கமாண்டிங் அலுவலர் பிஷரோடி, மாநில வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, வேலூர் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், எம்.பி. கோ.அரி, எம்எல்ஏ சு.ரவி ஆகியோர் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து கடற்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பிரணாப், 2.15 மணியளவில் காஞ்சிபுரத்துக்கு வருகை தந்தார். அங்கு அவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து, காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு அவருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. இதையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கோயிலில் சுமார் ஒரு மணி நேரம் வழிபாடு நடத்திய பிரணாப், அங்கிருந்து சங்கர மடத்துக்கு சென்று ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார்.
பிறகு, சுவாமிகளிடம் சிறிதுநேரம் கலந்துரையாடிய அவர், இளைய பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளையும் சந்தித்துப் பேசினார். பின்னர், மகா பெரியவரின் அதிஷ்டானத்தில் பாத பூஜை செய்து வழிபட்டார்.
பின்னர் மாலை 4.40 மணியளவில் காஞ்சிபுரத்தில் இருந்து மீண்டும் அரக்கோணம் ராஜாளி விமான தளத்துக்கு திரும்பி, தனி விமானம் மூலம் புதுதில்லி புறப்பட்டுச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com