திருப்பதி விஐபி தரிசன டிக்கெட் விநியோகத்தில் பல கோடி முறைகேடு: தேவஸ்தான அதிகாரி உள்பட 10 பேர் கைது

திருப்பதி விஐபி தரிசன டிக்கெட் விநியோகத்தில் பல கோடி முறைகேடு: தேவஸ்தான அதிகாரி உள்பட 10 பேர் கைது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இணையதளம் மூலம் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வழங்கியதில் கடந்த பல ஆண்டுகளாக பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இணையதளம் மூலம் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வழங்கியதில் கடந்த பல ஆண்டுகளாக பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக தேவஸ்தான கண்காணிப்பாளர் உள்பட 10 பேரை திருமலை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு என தேவஸ்தானம் தனிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் தேவஸ்தானத்துக்கு நன்கொடை வழங்கிய பக்தர்களின் விவரங்களைப் பதிவேட்டில் பதிவு செய்து கொண்டு, அவர்களின் குடும்பத்தினர் 5 பேருக்கு ஆண்டுக்கு இருமுறை விஐபி பிரேக் தரிசனத்துக்கு அனுமதி டிக்கெட் இலவசமாக வழங்கப்பட்டது.
நன்கொடையாளர் தரிசனத்துக்கு வரும் தேதியை அதற்கு முந்தைய நாள் தேவஸ்தானத்துக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து விட்டால், அவர்களின் டிக்கெட் தயார் நிலையில் வைக்கப்படும். அவர்களின் டிக்கெட்டுகளை ஊழியர்கள் பரிசோதிப்பதில்லை. இதில் சில நன்கொடையாளர்கள் தேவஸ்தானம் வழங்கும் இலவச தரிசனங்களைப் பெற முன்வருவதில்லை.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தேவஸ்தானத்தின் தரிசன சலுகையை ஏற்றுக் கொள்ளாத நன்கொடையாளர்களின் பெயர் விவரங்களை தேவஸ்தான செயல் இணை அதிகாரி அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் தர்மய்யா சேகரித்துள்ளார்.
இதையடுத்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வேணுகோபால், திருப்பதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (எ) ராஜு ஆகியோருடன் இணைந்து கள்ளச் சந்தையில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளனர். ரூ.500 மதிப்புள்ள ஒவ்வொரு டிக்கெட்டையும் ரூ.4,000 முதல் ரூ. 5,000 வரை விற்பனை செய்துள்ளனர்.
2015-ஆம் ஆண்டு இணையதளத்தில் நன்கொடையாளர்களுக்கென தனிப்பிரிவை ஏற்படுத்தி அனைத்து விவரங்களையும் தேவஸ்தானம் பதிவு செய்யத் தொடங்கியது.
தர்மய்யா உள்ளிட்ட மூவரும் ஹைதராபாதைச் சேர்ந்த மென்பொருள் வல்லுநர்கள் இருவருடன் இணைந்து, தேவஸ்தானத்தின் இணையதளத்தை 'ஹேக்' செய்து நன்கொடையாளர்களின் விவரங்களைத் திரட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து நன்கொடையாளர்களின் பெயரில் 1,500 போலி பாஸ் புத்தகங்களைத் தயாரித்துள்ளனர். அதனை வைத்து விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளைப் பெற்று கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளனர்.
2016-ஆம் ஆண்டு தேவஸ்தானம் தனது சேவையை மேலும் விரிவுபடுத்தி, இணையதளம் மூலம் நன்கொடை வழங்கும் சேவையைத் தொடங்கியது. நன்கொடை வழங்கிய 48 மணி நேரத்தில் இணையதளம் மூலம் பாஸ் புத்தகம் பெற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தியது.
அவர்களின் விஐபி பிரேக் டிக்கெட்டில் பார்கோடு பிரிண்ட் செய்யும் முறையை தொடங்கியது. அதையும் 'ஹேக்' செய்து தர்மய்யா மற்றும் அவரது கூட்டாளிகள் போலி டிக்கெட்டுகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நன்கொடையாளர்களின் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை 'ஸ்கேன்' செய்யும் முறையை தேவஸ்தானம் முன்னறிவிப்பின்றி அதிரடியாகத் தொடங்கியது.
கடந்த மார்ச் 11-ஆம் தேதி 5 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுடன் வந்தனர். அந்த டிக்கெட்டுகளைப் பரிசோதனை செய்த ஊழியர்கள் டிக்கெட்டுகள் 'ஸ்கேன்' ஆகாததைக் கண்டனர். மேலும் பார்கோடும் தவறு என சுட்டிக் காட்டியதால் அவர்கள் இதுகுறித்து தேவஸ்தான கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து 23 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், போலி விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை வழங்கிய இடைத்தரகர்களின் விவரம் தெரியவந்தது. அவர்களுக்கு டிக்கெட் வழங்க உதவிபுரிந்த இடைத்தரகர்களை விசாரித்ததில், போலி விஐபி தரிசன டிக்கெட் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது.
இதன் மூலம் கடந்த ஆண்டுகளில் போலி பாஸ் புத்தகங்களைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்று, கோடிக்கணக்கில் நடந்துள்ள ஊழல் மற்றும் அதில் ஈடுபட்டோர் குறித்து திருமலை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தேவஸ்தான கண்காணிப்பாளர் தர்மய்யா, கர்நாடகத்தைச் சேர்ந்த வேணுகோபால், திருப்பதி வெங்கடரமணா, பார்த்தசாரதி, நாகபூஷணம், வி.ஜி.நாயுடு, கணேஷ், சீனிவாசலு, ராஜு, வெங்கடாசலபதி ஆகிய 10 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த முறைகேடு தொடர்பாக மேலும் 40-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்ய உள்ளதாகவும், விரைவில் அவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் எனவும் போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இன்னும் இரண்டு நாள்களில் நீதிமன்றக் காவலில் உள்ள 10 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதில் முறைகேடு குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகும் என திருமலை இரண்டாவது காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெங்கட் ரவி தெரிவித்தார்.
2 வங்கி ஊழியர்களுக்கு தேவஸ்தானம் பாராட்டு
திருப்பதியில் போலி விஐபி பிரேக் தரிசன டிக்கெட் மோசடியை கண்டுபிடித்த தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஆந்திர வங்கி ஊழியர்கள் ஹரிகிருஷ்ணா, ஸ்ரீபாபு பிரசாத் இருவரையும் பாராட்டி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு செவ்வாய்க்கிழமை மாலை பரிசு வழங்கி கௌரவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com