திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித் தேரோட்டம்

திருவாரூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் புகழ் பெற்ற திருவிழாவான ஆழித் தேரோட்ட விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் கீழவீதி தேரடியிலிருந்து புறப்பட்ட ஆழித் தேர்.
திருவாரூர் கீழவீதி தேரடியிலிருந்து புறப்பட்ட ஆழித் தேர்.

திருவாரூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் புகழ் பெற்ற திருவிழாவான ஆழித் தேரோட்ட விழா திங்கள்கிழமை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேருக்கு வடம் பிடித்தனர்.
திருவாரூரில் உள்ள அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சக்தி பீடங்களில் ஞான பீடமாகவும் விளங்குகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புப் பெற்ற இத்தலம், தேராலும் சிறப்புப் பெற்றது. கடல் போல பரந்து விரிந்த இத்தேர், அப்பர் பெருமானால் "ஆழித் தேர்' எனக் குறிப்பிடப்பட்ட சிறப்புக்குரியது.
இத்தலத்தில் அப்பர் பெருமான் தங்கியிருந்து ஆழித் தேரோட்டத்தை நடத்தியதாக குறிப்பிடப்படும் வரலாற்றுக் குறிப்புகள் மூலம், அளப்பரிய ஆன்மிக புகழ் பெற்றது ஆழித் தேரோட்டம். இதன்படி, இத்தலத்தில் ஆண்டுதோறும் ஆழித் தேரோட்ட விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான ஆழித்தேரோட்ட விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தேரோட்ட விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக தியாகராஜர், அஜபா நடனத்துடன் ஆழித்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி மே 22-ஆம் தேதி நடைபெற்றது. ஆழித்தேரோட்டத்தையொட்டி, விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பக்கத்துக்கு எண்பட்டைகள் வீதம் மூங்கில், பனஞ்சப்பைகளைக் கொண்டு 96 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்த ஆழித்தேரில், குதிரைகள், யாளம், பாம்பு யாளம், துவாரபாலகர், பெரியகத்தி கேடயம் உள்பட பல்வேறு பொம்மைகள் பொருத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த ஆழித்தேரின் வடம்பிடிப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
ஐதீக முறைப்படியான சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், மங்கல வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்க காலை 7.20 -க்கு ஆழித்தேருக்கு வடம்பிடிக்கப்பட்டது.
தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ், வேளாக்குறிச்சி ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசார்ய சுவாமி, தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தசுவாமிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன், மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உள்பட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள், ஆன்மிக அமைப்புகளின் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், ஆரூரா! தியாகேசா! என்ற பக்தி முழக்கங்களுடன் ஆழித்தேருக்கு வடம்பிடித்தனர். சிவனடியார்கள் திரளானோர் இசை முழக்கங்களுடன் பதிகங்கள் பாடியவாறு அணிவகுத்தனர்.
பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர், பானகம், உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com