அருணாசலேஸ்வரர் கோயில் கோபுர நிலைகளின் கதவுகள் திறப்பு: புறாக்கள், துரிஞ்சல் பறவைகள் தஞ்சம் புகுந்தன

பல மாதங்களாக மூடப்பட்டிருந்த திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கோபுர நிலைகளின் கதவுகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.
அலுமினியத்தால் ஆன கதவுகளால் அடைக்கப்பட்டிருந்த பே கோபுர நிலைகள்.
அலுமினியத்தால் ஆன கதவுகளால் அடைக்கப்பட்டிருந்த பே கோபுர நிலைகள்.

பல மாதங்களாக மூடப்பட்டிருந்த திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கோபுர நிலைகளின் கதவுகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.
இதன் காரணமாக, கடும் வெயிலில் தங்க இடமின்றி தவித்து வந்த புறாக்கள், துரிஞ்சல் பறவைகள் மீண்டும் கோயில் கோபுரங்களில் தஞ்சம்
புகுந்தன.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், பே கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம் உள்பட மொத்தம் 9 கோபுரங்கள் உள்ளன.
இந்தக் கோபுரங்களில் 100-க்கும் மேற்பட்ட மாடங்கள் உள்ளன. இவற்றில் பல நூறு ஆண்டுகளாக பல ஆயிரம் புறாக்கள் (மாடப் புறாக்கள்), துரிஞ்சல் பறவைகள் வசித்து வந்தன. இந்த நிலையில், கோயில் கும்பாபிஷேகப் பணிக்காக திருப்பணிகள் நடைபெற்றபோது, கோயில் கோபுர மாடங்களில் புறாக்கள் நுழையாதவாறு அலுமினியத்தால் ஆன கதவுகள் அமைக்கப்பட்டன.
வெயிலில் வாடிய மாடப்புறாக்கள்: இதனிடையே, கடந்த சில மாதங்களாக திருவண்ணாமலையில் அதிகபட்சமாக 112 டிகிரி வரை வெயில் பதிவானது. அனல் காற்று வீசியது. அப்போது, அருணாசலேஸ்வரர் கோயில் கோபுரங்களில் தங்க இடமின்றி பல ஆயிரம் புறாக்களும், துரிஞ்சல் பறவைகளும் தவித்தன.
எனவே, புறாக்கள் தங்க வசதியாக மாடங்களை மீண்டும் திறந்து விடுமாறு திருவண்ணாமலையைச் சேர்ந்த நீர்த்துளிகள் அமைப்பு, இந்து அமைப்பினர் அப்போதைய இணை ஆணையர் எஸ்.ஹரிப்பிரியாவிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நூதனப் போராட்டத்துக்கு ஏற்பாடு: இதனால் அதிருப்தியடைந்த சமூக ஆர்வலர்களும், இந்து அமைப்பினரும் புறாக்களின் கால்களில் கோரிக்கை மனுவைக் கட்டிக் கொண்டு சென்று இணை ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதற்கிடையே, இணை ஆணையர் எஸ்.ஹரிப்பிரியா சென்னைக்கு மாற்றப்பட்டார்.
புதிய இணை ஆணையரிடம் முறையீடு: இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு புதிதாக பொறுப்பேற்ற இணை ஆணையர் ஜெகந்நாதனிடம் இதுகுறித்து முறையிடப்பட்டது. இதனிடையே, அலுமினியக் கதவுகளைக் கொண்டு அடைக்கப்பட்ட அனைத்துக் கதவுகளும் திறக்கப்படுவதாக கோயில் இணை ஆணையர் ஜெகந்நாதன் அறிவித்து, கதவுகளைத் திறக்கும் பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கினார்.
சமூக ஆர்வலர்கள் வரவேற்பு: கதவுகள் திறந்ததும், வெயிலில் தவித்து வந்த பல ஆயிரம் புறாக்களும், துரிஞ்சல் பறவைகளும் மாடத்தில் புகுந்தன. இணை ஆணையரின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்களும், இந்து அமைப்பினரும் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்தனர். இதுகுறித்து இந்து முன்னணி மாவட்டத் தலைவர் டி.எஸ்.சங்கர் கூறியதாவது: நூறு ஆண்டுகளாக புறாக்கள், துரிஞ்சல் பறவைகளின் வசிப்பிடமாக இருந்த கோயில் கோபுர மாடங்களை கதவுகளைக் கொண்டு அடைத்தனர்.
இதனால் புறாக்களும், துரிஞ்சல் பறவைகளும் சிரமத்துக்குள்ளாகின. இந்த நிலையில், அடைக்கப்பட்டிருந்த கோபுர நிலைகளின் கதவுகள் மீண்டும் திறக்கப்படுவது வரவேற்கத்தக்கது என்றார்.
திருவண்ணாமலை நீர்த்துளிகள் அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:
புதிய இணை ஆணையர் எங்களது கோரிக்கையை ஏற்று, மூடப்பட்ட கோபுர நிலைகளின் கதவுகளைத் திறந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com