அஷ்டபந்தன மருந்து விவகாரம்: தலைமை ஸ்தபதி நேரில் ஆய்வு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் பிரம்மபாகத்தில் இருந்து அஷ்டபந்தன மருந்து பெயர்ந்தது எப்படி? என்பது குறித்து அறநிலையத் துறையின் தலைமை ஸ்தபதி திங்கள்கிழமை

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் பிரம்மபாகத்தில் இருந்து அஷ்டபந்தன மருந்து பெயர்ந்தது எப்படி? என்பது குறித்து அறநிலையத் துறையின் தலைமை ஸ்தபதி திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயிலின் மகா கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற்றது.
அஷ்டபந்தன மருந்து பெயர்ந்தது: கும்பாபிஷேகத்தில் பல்வேறு ஆகம விதிகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஒரு பகுதியாக மூலவர் அருணாசலேஸ்வரரின் பிரம்ம பாகத்தில் சாத்தப்பட்ட அஷ்டபந்தன மருந்து கும்பாபிஷேகம் நடந்த ஓரிரு மாதங்களிலேயே பெயர்ந்ததாக தகவல் வெளியானது.
புதிதாக பொறுப்பேற்ற கோயில் இணை ஆணையர் இரா.ஜெகந்நாதன் இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
அருணாசலேஸ்வரர் பிரம்ம பாகத்தில் இருந்த அஷ்டபந்தன மருந்து கரைந்தது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு அறநிலையத் துறையின் தலைமை ஸ்தபதியான சென்னையைச் சேர்ந்த எம்.முத்தையா, கோயில் இணை ஆணையர் இரா.ஜெகந்நாதன், வேலூர் துணை ஆணையர் ஆகியோருக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆர்.ஜெயா உத்தரவிட்டார்.
கோயிலில் தலைமை ஸ்தபதி ஆய்வு: அதன்படி, திங்கள்கிழமை மாலை தலைமை ஸ்தபதி எம்.முத்தையா திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். இதற்கிடையே, அஷ்டபந்தன மருந்துடன் சேர்த்து சாத்தப்படும் பல கோடி மதிப்பிலான தங்கம், வைரம், வைடூரியம், விலை உயர்ந்த முத்து, பவளம் உள்ளிட்டவற்றை திருடும் நோக்கும் அஷ்டபந்தன மருந்து பெயர்த்து எடுக்கப்பட்டதாக தகவல் பரவியது.
இதுகுறித்து திருவண்ணாமலை கோயில் இணை ஆணையர் இரா.ஜெகந்நாதன் கூறியதாவது: முத்தையா ஸ்தபதி வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றார். ஆய்வு அறிக்கையை அறநிலையத் துறை ஆணையரிடம் அவர் கொடுப்பார். பரிகாரங்கள் செய்து மீண்டும் அஷ்டபந்தன மருந்து சாத்த 3 தேதிகளைக் கேட்டுள்ளார். தேதி முடிவான பிறகு பரிகாரங்கள் செய்யப்படும்.
அப்போது, வேலூரில் இருந்து நகை சரிபார்ப்பு அதிகாரி வந்து ஏற்கெனவே வைத்த நகைகளை சரிபார்ப்பார். ஏற்கெனவே வைத்த நகை எண்ணிக்கையில் குறை இருந்தால் சம்பந்தப்பட்ட குருக்களை பணிநீக்கம் செய்ய நேரிடும் என்றார்.
அஷ்டபந்தன மருந்து தயாரிப்பில் குறையா..?: அஷ்டபந்தன மருந்து தயாரித்து கொடுத்த நாட்டுக்கோட்டை நகரத்தார் கூறியதாவது:
அஷ்டபந்தன மருந்து தயாரிப்புப் பணியில் காலம், காலமாக ஈடுபட்டு வரும் காரைக்குடியை அடுத்த நேமம் கிராமத்தில் உள்ளவர்களை அழைத்து வந்து, தரமான மருந்துகளை வாங்கி வந்து நன்கு இடித்து, மருந்து தயாரித்துக் கொடுத்தோம்.
கும்பாபிஷேகத்தின்போது கோயிலில் இருந்த 384 சுவாமிகளுக்கும் நாங்கள் செய்து கொடுத்த அஷ்டபந்தனம்தான் சாத்தப்பட்டது. அப்படி இருக்கும்போது அருணாசலேஸ்வரர் சுவாமிக்கு சாத்தப்பட்ட அஷ்டபந்தனம் மட்டும் பெயர்ந்துள்ளது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.
'நகைகள் களவுபோனது உண்மைதான்': இதற்கிடையே, அஷ்டபந்தன மருந்து சாத்தும்போது விலை உயர்ந்த நகைகளை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள் சிலர் கூறியதாவது: கடந்த 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது நன்கொடையாளர்களின் பெயர், அவர்கள் செலுத்தும் நகைகளின் பட்டியலை எழுதினர்.
நாங்கள் எங்கள் கைகளால் நகைகளை சாத்தினோம். ஆனால், தற்போது நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் எங்களை செலுத்தவிடவில்லை. எனவே, அஷ்டபந்தன மருந்து பெயர்ந்த விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது என்றனர் அவர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com