நெல்லையப்பர் கோயிலில் அம்பாளுக்கு சுவாமி தவசுக் காட்சி!

திருநெல்வேலியில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி தவசுக் காட்சி அளிக்கும் வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நெல்லையப்பர் கோயிலில் அம்பாளுக்கு சுவாமி தவசுக் காட்சி!

திருநெல்வேலியில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி தவசுக் காட்சி அளிக்கும் வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா இம்மாதம் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலில் திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவில் காந்திமதி அம்பாள் சன்னதியிலிருந்து அம்மன் திருவீதி உலா நான்கு ரத வீதிகளில் நடைபெற்றது.

சுவாமிக்கு அபிஷேகம், கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் ஆகியன நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை இரவு 1 மணியளவில் கோயிலிருந்து காந்திமதி அம்பாள் தவக்கோலத்தில் தங்க முலாம் பூசப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி கீழரதவீதி, தெற்கு ரதவீதி வழியாக பேட்டை பிரதான சாலை வழியாக திங்கள்கிழமை அதிகாலையில் கம்பைநதி காமாட்சி அம்மன் கோயிலை வந்தடைந்தார்.
 இதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு சுவாமி கோயிலிலிருந்து ரிஷப வாகனத்தில் அம்பாளுக்கு காட்சி கொடுக்க எழுந்தருளினார். பின்னர் திருநெல்வேலி நகரம் பேட்டை பிரதான சாலையில் காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றன.

அப்போது, அம்பாள் சுவாமியை 3 முறை சுற்றி வந்தார். பின்னர் கோயிலில் சுவாமி அம்பாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் கோயில் நிர்வாக அதிகாரி பா. ரோஷினி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலையில் சுவாமி அம்பாள் ரதவீதிகளில் வீதி உலா நடைபெற்றன.

திருவிழாவின் 12 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.15 முதல் 5.45 மணிக்குள் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு சுவாமி அம்பாள் பூம்பல்லக்கில் பட்டணப்பிரவேசம், திருவீதி உலா நடைபெறுகிறது.

தொடர்ந்து 3 தினங்கள் வியாழக்கிழமை வரை கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழாவும், 17 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டணப்பிரவேசம் வீதி உலா நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com