டிச. 2 -இல் கார்த்திகை தீபத் திருவிழா: மின்விளக்குகளால் ஜொலிக்கும் அருணாசலேஸ்வரர் கோயில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 2 -ஆம் தேதி நடைபெறுகிறது.
டிச. 2 -இல் கார்த்திகை தீபத் திருவிழா: மின்விளக்குகளால் ஜொலிக்கும் அருணாசலேஸ்வரர் கோயில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 2 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை கோயிலின் 9 கோபுரங்களும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தன.
அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் புகழ் பெற்றது கார்த்திகை தீபத் திருவிழா. இந்தத் திருவிழாவைக் காண உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர்.
நவ. 23-இல் கொடியேற்றம்: நிகழ் ஆண்டுக்கான தீபத் திருவிழா திங்கள்கிழமை (நவ. 20) மாலை ஸ்ரீதுர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. வியாழக்கிழமை (நவ. 23) அதிகாலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் துலா லக்கினத்தில் கோயில் வளாகத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.
இதையடுத்து, தினமும் காலை, இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது. திருவிழாவின் முதல் நாளான வியாழக்கிழமை (நவ. 23) காலை வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், இரவு 8 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரர், ஹம்ச வாகனத்தில் பராசக்தியம்மன், சிம்ம வாகனத்தில் சண்டிகேஸ்வரர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
பஞ்ச ரதங்களின் தேரோட்டம்: விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நவம்பர் 29 -ஆம் தேதி நடைபெறுகிறது. 
காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் விருட்சிக லக்கினத்தில் விநாயகர் தேரோட்டம் தொடங்குகிறது. தொடர்ந்து, முருகர் தேர், அருணாசலேஸ்வரர் தேர், பராசக்தியம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என பஞ்ச ரதங்களின் வீதியுலா நடைபெறுகிறது.
டிசம்பர் 2 -இல் மகா தீபம்: விழாவின் முக்கிய நிகழ்வான தீபத் திருவிழா டிசம்பர் 2 -ஆம் தேதி நடைபெறுகிறது. 
காலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
ஏற்பாடுகள் தீவிரம்: இதற்கிடையே, தீபத் திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் கோயிலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
கோயிலில் உள்ள சுவாமி புறப்பாடு வாகனங்களைச் சுத்தப்படுத்தி, வர்ணம் பூசும் பணியில் கோயில் ஊழியர்களும், தன்னார்வலர்களும் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கோயில் பிரகாரங்கள், தீப விளக்குகளைச் சுத்தம் செய்வது, கோயிலின் அனைத்துப் பகுதிகளையும் தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 
பஞ்ச ரதங்களின் மராமத்துப் பணிகள், மகா தீபக் கொப்பரையைத் தூய்மைப்படுத்தி வர்ணம் பூசும் பணிகள், தெப்பலைச் சீரமைப்பது உள்ளிட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கோயில் இணை ஆணையர் இரா.ஜெகந்நாதன் தலைமையில், கோயில் ஊழியர்கள், உபயதாரர்கள், ஆச்சாரிகள் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com