சபரிமலை மண்டல பூஜை: தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் பக்தர்கள் முன்பதிவு

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை சுவாமி தரிசனத்துக்கு இணைய வழி முன்பதிவு நிறைவடைந்தது.
சபரிமலை மண்டல பூஜை: தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் பக்தர்கள் முன்பதிவு

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை சுவாமி தரிசனத்துக்கு இணைய வழி முன்பதிவு நிறைவடைந்தது. மகர விளக்கு பூஜைக்கான முன்பதிவு ஜனவரி 10 -ஆம் தேதி வரை நிறைவடைந்துள்ளதை அடுத்து பக்தர்கள் இனி ஜனவரி 11 முதல் 19-ஆம் தேதி வரையிலான நாள்களுக்கு மட்டுமே இணைய வழியில் முன்பதிவு செய்ய முடியும்.
பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை இந்த ஆண்டு நவம்பர் 16 -ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
கார்த்திகை முதல் நாள் மாலையிடத் தொடங்கும் பக்தர்கள், மண்டல பூஜை தரிசனத்துக்கு கோயிலுக்குச் செல்வர். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு ஜனவரி 20-ஆம் தேதி நடை சாத்தப்படும்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் கூட்டத்தை நெறிப்படுத்தும் வகையில், கட்டணமில்லாமல் இணையவழி முன்பதிவு செய்யும் திட்டம் 2011-ஆம் ஆண்டு கேரள மாநில காவல் துறையினரால் தொடங்கப்பட்டது. 
இவ்வாண்டு மண்டல பூஜை சுவாமி தரிசனத்துக்கு இணைய வழி முன்பதிவு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நிரம்பியுள்ளது. மகர விளக்கு பூஜைக்கான முன்பதிவு ஜனவரி 10-ஆம் தேதி வரை பூர்த்தியடைந்துள்ளது.
தமிழகத்திலிருந்து 5 லட்சம் பக்தர்கள் முன்பதிவு: தமிழகத்தில் இருந்து மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனத்துக்கு இணையதளத்தில் முன்பதிவு செய்துள்ளனர். 
கேரளத்தைச் சேர்ந்தவர்கள் 2.18 லட்சம் பேரும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 2.01 லட்சம் பேரும், கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் 63,800 பேரும், தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் 63,000 பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.
12 லட்சம் பக்தர்கள்: இதுவரை இணையதள முன்பதிவு மூலம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 12 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். 
இதுதவிர கனடா, மலேசியா, ரஷ்யா உள்பட 20 வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் இணையவழி மூலம் தரிசனத்துக்கு முன்பதிவு செய்துள்ளனர். 
இனி ஜனவரி 11 முதல் 19 வரையே முன்பதிவு: இப்போது ஜனவரி 10 முதல் 19 ஆம் தேதி வரையிலான தரிசனத்துக்கு www.sabarimalaq.com  என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.
பதிவு செய்வது எப்படி? 


முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் www.sabarimalaq.com  என்ற இணையதளத்தில் உள்ள 'வெர்ச்சுவல் கியூ கூப்பன்' பகுதியில் தங்களுடைய பெயர், முகவரியோடு, புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
முன்பதிவு செய்த பக்தர்கள் தங்களுடைய மார்பளவு புகைப்படம், ஏதாவது ஒரு அடையாள அட்டை, பதிவு செய்த பின்னர் பதிவிறக்கம் செய்யப்பட்ட கூப்பன் ஆகியவற்றுடன் பம்பை செல்ல வேண்டும். அங்கு இதற்கான சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டிருக்கும்.
அங்கு பக்தர்கள் கொண்டு செல்லும் கூப்பன், அடையாள அட்டையை சோதனை செய்த பின்பு, பம்பையில் இருந்து மலை ஏறுவதற்கு நிர்வாகம் அனுமதிக்கும்.
கூப்பனில் பதிவு செய்யப்பட்டுள்ள நேரத்துக்கு 30 நிமிஷத்துக்கு முன்பாகச் சென்றால் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் பதினெட்டாம் படியில் ஏறி தரிசனம் செய்து விடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com