திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை (அக். 20) காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
கந்த சஷ்டி திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்குவதை முன்னிட்டு  வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
கந்த சஷ்டி திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்குவதை முன்னிட்டு  வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை (அக். 20) காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதையொட்டி, சஷ்டி விரதம் இருப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவியத் தொடங்கி உள்ளனர்.
இக்கோயிலில் பிரசித்தி பெற்ற திருவிழாவான கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. அதிகாலை ஒரு மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலை புறப்படும் நிகழ்ச்சி, தொடர்ந்து காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறுகிறது.
2ஆம் நாள் முதல் 5ஆம் நாள் வரை அதிகாலை 3 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது.
சூரசம்ஹாரம்: விழாவின் ஆறாம் நாளான புதன்கிழமை (அக். 25) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் ஒரு மணிக்கு சாயரட்ச தீபாராதனை நடைபெறும். மாலை 4.30 மணிக்கு கோயில் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஏழாம் திருநாளான அக். 26ஆம் தேதி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று, அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தவசுக்காக புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு சுவாமி- அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.
திருவிழா நாள்களில் காலை, மாலை வேளைகளில் கோயில் சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கில் பக்திச் சொற்பொழிவுகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பா.பாரதி, அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ.நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com