திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம்: ஏழுமலையானுக்கு 9 நாள் திருவிழா கோலாகலம்

திருமலை ஏழுமலையானுக்கு 9 நாள் திருவிழாவான வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் சனிக்கிழமை முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி அலிபிரியில் உள்ள கருட பகவான் சிலை ரவுண்டானவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மின் விளக்கு அலங்காரம்.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி அலிபிரியில் உள்ள கருட பகவான் சிலை ரவுண்டானவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மின் விளக்கு அலங்காரம்.

திருமலை ஏழுமலையானுக்கு 9 நாள் திருவிழாவான வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் சனிக்கிழமை முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது.
கலியுக தெய்வம் ஏழுமலையானுக்கு திருமலையில் ஆண்டுமுழுவதும் 450 உற்சவங்கள் நடத்தப்படுவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அலங்கார பிரியரான ஏழுமலையானுக்கு அனைத்து உற்சவத்திலும் முதன்மையானதாக கருதப்படுவது புரட்டாசி மாதம், நவராத்திரியின் போது நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவம் தான்.
அதன்படி திருமலையில் வரும் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் திருமலையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின்போது, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் கூடுவர். 
பவிஷ்யோத்தர புராணம் மற்றும் இதிகாசத்தின்படி, இந்த உற்சவத்தை சூரியன் கன்னிராசியில் பிரவேசித்த பின், துவிதியை திதிக்கு முன் அங்குரார்ப்பணம், கொடியேற்றம் உள்ளிட்டவற்றை வைகானச ஆகமப்படி பண்டிதர்கள் மூலம் சிருஷ்டி கர்த்தாவாகிய பிரம்மா நடத்தினார். அதனால் இதை பிரம்மோற்சவம் என குறிப்பிடுகிறார்கள். தேவாதி தேவர்கள், ரிஷிகள் அனைவரும் திருமலையில் 9 நாள்கள் தங்கி பிரம்மோற்சவத்தை காண்பதாக ஐதீகம். ஏழுமலையானின் நட்சத்திரமான திருவோண நட்சத்திரம் அன்று முடிவு பெறும் விதம் இந்த பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. 
பிரம்மோற்சவத்தின்போது நடைபெறும் முக்கிய உற்சவங்கள்:
ஆலய சுத்தி: பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை கோயில் பிரகாரம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு (கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்) பலவிதமான மலர்கள், பழங்கள், மாவிலை, தோரணம், வாழை மரம் உள்ளிட்டவற்றால் அலங்கரிப்பர். இந்த அலங்காரங்கள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரையும் கவரும்.
மிருத்சங்கரணம்: பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு முன்தினம் ஏழுமலையான் சேனாதிபதி படை பரிவாரங்கள், அர்ச்சகர்களுடன் சென்று அருகில் உள்ள நந்தவனத்தில் புற்றுமண்ணை கொண்டு வந்து அதில் பூதேவியின் உருவத்தை வரைந்து அவர் வயிற்று பகுதியிலிருந்து மண் எடுத்து 9 விதமான தானியங்களை முளைவிடுவர்.
அவை முளைவிடும் வரை அதற்கு தண்ணீர் தெளித்து வருவர். இதன் மூலம் பஞ்சபூதங்களை பிரம்மோற்சவத்துக்கு வரவழைப்பதாக ஐதீகம். இதனை மிருத்சங்கரணம் அல்லது அங்குரார்ப்பணம் என அழைக்கின்றனர். பின்னர், விஷ்வக்சேனர், அனந்தன், சுதர்சனர், கருடாழ்வார் உள்ளிட்டவர்களை பூஜிப்பர். 
துவஜாரோகணம்: ஏழுமலையான் கோயில் முன் உள்ள கொடிமரத்தில் மகா விஷ்ணுவின் வாகனமாக கருதப்படும் கருடனின் படம் வரைந்த மஞ்சள் நிறக்கொடியை தலைமை அர்ச்சகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி முன் ஏற்றுவார். கருட கொடியை கொடிமரத்தில் ஏற்றுவதன் மூலம் இந்திரன், எமன், குபேரன், அக்னி, வாயு உள்ளிட்ட தேவர்கள், வசிஷ்டர், விஸ்வாமித்திரர் உள்ளிட்ட சப்தரிஷிகள், மற்ற தேவகணங்கள் உள்ளிட்டோரை பிரம்மோற்சவத்தை காண வரும்படி அழைப்பு விடுப்பர். இதை தேவதாவாகனம் அல்லது துவஜாரோகணம் என அழைக்கின்றனர்.
வாகன சேவை: பிரம்மோற்சவத்தில் மிக முக்கியமானது வாகன சேவை. ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி தன் உபயநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெரியசேஷம், சின்னசேஷம், அன்னபறவை, சிம்மம், முத்துபந்தல், சர்வபூபாலம், கல்பவிருட்சம், கருட, அனுமந்த, யானை, சூரிய, சந்திரபிரபை, குதிரை உள்ளிட்ட 13 வாகனங்களுடன், மோகினி அவதாரம், தங்க ரதம், திருத்தேர் உள்ளிட்டவற்றில் ஒவ்வொரு முறை, ஒவ்வொரு அவதாரத்தில் பலவிதமான அலங்காரங்கள், ஆபரணங்களை அணிந்து காலையும், இரவும் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஸ்ரீவாரி கொலு: பிரம்மோற்சவ வாகன சேவையின்போது, அர்ச்சகர்கள் ஏழுமலையானுக்கு கொலு நடத்துவது வழக்கம். அப்போது ஏழுமலையானுக்கு சிறப்பு ஆராதனைகள், நைவேத்தியங்கள் உள்ளிட்டவை சமர்ப்பிக்கப்படும்.
ஸ்நபனம்: பிரம்மோற்சவத்தில் காலை, இரவு என இருவேளையும் உற்சவமூர்த்திகள் மாடவீதியில் வலம் வருவதால் ஏற்படும் அசதியை களைய, தினசரி காலை வாகன சேவை முடிந்தவுடன் வசந்த மண்டபத்தில் அவர்களுக்கு பல்வேறு சுகந்த திரவிய பொருள்கள், பழரசங்களால் நடத்தப்படும் அபிஷேகம் ஸ்நபனம் என்று அழைக்கப்படும். இதன்மூலம் உற்சவமூர்த்திகள் களைப்பு நீங்கி, இரவு நடைபெறும் வாகன சேவையின்போது தேஜோமயமாக காட்சியளிப்பர்.
சூர்னாபிஷேகம்: பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாள் காலை தீர்த்தவாரிக்கு முன், திருக்குளக்கரையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பரிமள திரவியங்களால் நடத்தப்படும் அபிஷேகம் சூர்னாபிஷேகம். 
தீர்த்தவாரி: பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள் சூர்னாபிஷேகத்துக்கு பின், சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.
தேவதை உபாசனை: ஏழுமலையானுக்கு காலையில் அர்ச்சனை மற்றும் நைவேத்தியத்துக்குப் பின், பிரம்மோற்சவத்தை காண வந்த முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷி முனிவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி செலுத்தி வழியனுப்புவது தேவதை உபாசனை. அதேபோல் பிரம்மோற்சவத்தை சிறப்பாக நடத்தி கொடுத்த பிரம்மாவுக்கும் அர்ச்சகர்கள் நன்றி செலுத்துவது மரபு.
துவஜாஅவரோகணம்: பிரம்மோற்சவத்தின் இறுதி உற்சவம் துவஜாஅவரோகணம் என்னும் கொடியிறக்கம். ஏழுமலையான் கோயில் முன் உள்ள கொடிமரத்தில் பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு அறிகுறியாக ஏற்றப்பட்ட கருடகொடி, 9-ஆம் நாள் இரவு கொடிமரத்திலிருந்து இறக்கப்பட்டவுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றுவிடும். 
இவ்வாறு 9 நாள்கள் திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்துக்காக தேவஸ்தானம் 3 மாதங்களுக்கு முன்பே ஏற்பாடுகளை தொடங்கி விடுகிறது. மாடவீதியில் உள்ள கேலரிகளில் தரிசன வரிசை ஏற்படுத்துவது, மாடவீதியில் புதிய வண்ணம் தீட்டி, கோலங்கள் இடுவது. 
ஆங்காங்கே பக்தர்கள் இளைப்பாற நிழற்பந்தல், வாகனசேவையை காண காத்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், காபி, டீ, மோர், பால், சிற்றுண்டி உள்ளிட்டவை வழங்குதல், திருமலை முழுவதும் ஏழுமலையானின் அவதாரங்களை சித்திரிக்கும் வண்ண மின் விளக்கு அலங்காரங்கள், மலர் அலங்காரங்கள், மலர் கண்காட்சி, அரிய புகைபடக் கண்காட்சி, ஆயுர்வேத மருத்துவ உதவி மையம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புப் பணியில் 4 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
பக்தர்களின் வசதிக்காக ஆர்.டி.சி பேருந்து வசதி, சொந்த வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் உள்ளிட்டவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com