4 ஆயிரம் பொம்மைகளுடன் நவராத்திரி கொலு திருவிழா

மாதவரம் அருகே உள்ள நவராத்திரி கோயிலில் நடைபெற்று வரும் 3-ஆம் ஆண்டு கலைத் திருவிழாவில் 4 ஆயிரம் பொம்மைகள் கொலு வைக்கப்பட்டுள்ளன.
மாதவரம் நவராத்திரி கோயிலில் நடைபெற்ற கொலு கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொம்மைகள்.
மாதவரம் நவராத்திரி கோயிலில் நடைபெற்ற கொலு கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொம்மைகள்.

மாதவரம் அருகே உள்ள நவராத்திரி கோயிலில் நடைபெற்று வரும் 3-ஆம் ஆண்டு கலைத் திருவிழாவில் 4 ஆயிரம் பொம்மைகள் கொலு வைக்கப்பட்டுள்ளன.
மாதவரத்தை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம். காலனி 36-ஆவது தெருவில் நவராத்திரி கோயில் உள்ளது. இங்கு 3-ஆம் ஆண்டு நவராத்திரி கொலு, கலைத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. 
விழாவுக்கு குணசேகர், கஜேந்திரன், ராஜவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். கோயில் நிறுவனர்கள் டி.ஆர்.வேலுமணி, வி.லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை முத்து சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நவராத்திரி கொலு, கலைத் திருவிழாவை கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
இதில், கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, பெங்களூர், மைசூர் போன்ற நகரங்களிலிருந்தும் துபை, தாய்லாந்து, எகிப்து போன்ற வெளிநாடுகளிலிருந்தும் நேரடியாக சேகரிக்கப்பட்ட 4000-க்கும் மேற்பட்ட பொம்மைகள் கொலுவில் இடம் பெற்றுள்ளன.
வரும் 30-ஆம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. இதில், மாரியம்மன், மகாலட்சுமி, புவனேஸ்வரி, வராகி, சிவன் - பார்வதி, பிரத்தியங்கிரா தேவி, அன்னபூரணி, தாய் மூகாம்பிகை, சரஸ்வதி, மகிஷாசுர மர்த்தினி அலங்காரம் என பல்வேறு அலங்காரத்தில் கொலு பொம்மைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கொலு கலைத் திருவிழாவை செங்குன்றம், மாதவரம், கொளத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமானோர் வந்து பார்வையிடுகின்றனர்.
சேவாலயாவில்...
 திருநின்றவூரை அடுத்த கசுவா கிராமத்தில் அமைந்துள்ள சேவாலயா சேவை மையத்தில் நவராத்திரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
விழாவில், 'இ-பிரயாஸ்' அறக்கட்டளையின் தலைவர் மீனா சுப்ரமண்யம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், 'அம்பிகையே அகிலமாக விளங்குகிறாள் என்பதை உணர்த்தும் வகையிலும், முப்பெருந்தேவியரை போற்றும் வகையிலும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து, தொடர்ந்து ஒன்பது நாள்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது' என்றார். இதைத்தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இ-பிரயாஸ் அறக்கட்டளையின் செயலாளர் சத்யா ரவிச்சந்திரன், அறங்காவலர் ரஜினி கண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
இதற்கான ஏற்பாடுகளை சேவாலயா நிறுவனரும், அறங்காவலருமான முரளிதரன் உள்ளிட்ட நிர்வாகத்தினர் செய்திருந்தனர். சேவாலயா நன்கொடையாளர் பிரிவு துணைத் தலைவர் ராதா சீனிவாசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com