திருமலையில் இன்று பிரம்மோற்சவம் தொடக்கம்: மலைப்பாதையில் 24 மணி நேரமும் பக்தர்கள் செல்ல அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் கோலாகலமாக தொடங்குகிறது. இதை முன்னிட்டு மலைப்பாதைகளில் 24 மணி நேரமும் பக்தர்கள் செல்ல அனுமதி
திருமலையில் இன்று பிரம்மோற்சவம் தொடக்கம்: மலைப்பாதையில் 24 மணி நேரமும் பக்தர்கள் செல்ல அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் கோலாகலமாக தொடங்குகிறது. இதை முன்னிட்டு மலைப்பாதைகளில் 24 மணி நேரமும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
திருமலையில் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்குகிறது. இதை முன்னிட்டு முதல் மற்றும் இரண்டாம் மலைப்பாதை, அலிபிரி நடைபாதை மார்க்கம் போன்றவை 24 மணி நேரமும் திறந்திருக்கும். 
ஸ்ரீவாரி மெட்டு மார்க்கம் கருடசேவை அன்று (செப்டம்பர் 27) மட்டும் 24 மணிநேரமும் திறந்திருக்கும். கருடசேவை அன்று மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
பிரம்மோற்சவம் சமயத்தில் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் 4 ஆயிரம் அறைகள் வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. பிரம்மோற்சவத்துக்காக தேவஸ்தானம் ரூ. 9.5 கோடி செலவு செய்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள் வாகன சேவையுடன் ஏழுமலையானை விரைவாக தரிசனம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
1.80 லட்சம் பக்தர்கள் மாடவீதியில் உள்ள கேலரிகளில் நேரடியாக அமர்ந்து கருடசேவையை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருடசேவை அன்று ஆர்.டி.சி பேருந்துகள் மூலம் 4 ஆயிரம் நடை (டிரிப்கள்) இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் கூட்டத்தை பொருத்து, கூடுதலாக 500 நடை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமலையில் கல்யாணகட்டா, வசந்த மண்டபம், அர்ச்சக நிலையம், வராக சுவாமி நிலையம், அன்னபிரசாத மார்க்கம் உள்ளிட்ட வழிகளில் மாடவீதியில் உள்ள கேலரிகளுக்கு பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக திருமலை முழுவதும் 710 நவீன ரக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிரம்மோற்சவத்தின் முதல் நாளான சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு ஆந்திர அரசு சார்பில் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கிறார். அதன் பின்னர், அவர் தேவஸ்தானம் அச்சிட்ட 2018-ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி மற்றும் கையேடுகளை வெளியிடுகிறார். பிரம்மோற்சவத்துக்கு வரும் பக்தர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில், வருடாந்திர பிரம்மோற்சவம் தடையில்லாமல் சிறப்பாக நடைபெற வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் (முளைப்பாரி உற்சவம்) நடைபெற்றது.
சிறப்பு ரயில்கள் இயக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சனிக்கிழமை முதல் அக்டோபர் 2 -ஆம் தேதி வரை சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அரக்கோணம் -ரேணிகுண்டா 
ரயில் எண் 05601: அரக்கோணம் -ரேணிகுண்டா இடையிலான சிறப்பு பயணிகள் ரயில் பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் திருத்தணி, ஏகாம்பரக்குப்பம், புத்தூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ரேணிகுண்டா -சென்னை கடற்கரை 
ரயில் எண் 05602: ரேணிகுண்டா - சென்னை கடற்கரை பயணிகள் சிறப்பு ரயில் மாலை 5.35 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்கு சென்னை வந்தடையும்.
இந்த ரயில் புத்தூர், ஏகாம்பரக்குப்பம், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், திருநின்றவூர், பெரம்பூர் ரயில் நிலையங்களில் நிற்கும்.
சென்னை கடற்கரை -அரக்கோணம்
ரயில் எண் 05603: சென்னை கடற்கரை -அரக்கோணம் பயணிகள் சிறப்பு ரயில் தேவைக்கேற்ப இடைவெளியில் இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் அதிவிரைவு பயணிகள் ரயில்
ரயில் எண் 56001: சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் அதிவிரைவு பயணிகள் ரயில் பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com