பிரம்மோற்சவ முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தார். 
வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முதல் நாளான சனிக்கிழமை இரவு பெரிய சேஷ வாகனத்தில் வலம் வந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி.
வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முதல் நாளான சனிக்கிழமை இரவு பெரிய சேஷ வாகனத்தில் வலம் வந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தார். 
ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரியின் போது, தேவஸ்தானம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை நடத்தி வருகிறது. 
அதன்படி, சனிக்கிழமை முதல் தொடர்ந்து 9 நாள்கள் திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவம் தொடங்கியதன் அடையாளமாக சனிக்கிழமை மாலை 5.48 மணி முதல் 6 மணிக்குள் மீனலக்னத்தில் தலைமை அர்ச்சகரும், கங்கண பட்டரும் இணைந்து கொடிமரத்தில் கருடகொடியை ஏற்றினர்.
முன்னதாக மாடவீதியில் கருட கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கொடியேற்றத்துக்குப் பின்னர், ஏழுமலையானின் சேனாதிபதி விஷ்வக்சேனர், அனந்தர், கருடன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமியும் தங்கப் பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தனர். 
வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கு ஆந்திர அரசு சார்பில், பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திருமலைக்கு வந்து, பட்டு வஸ்திரத்தை ஏழுமலையான் கோயில் எதிரில் உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலிலிருந்து ஊர்வலமாக கொண்டு சென்று, ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார். பின்னர், ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தானம் சார்பில், பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
நாள்காட்டி, கையேடு வெளியீடு: திருமலை - திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின் முதல் நாளில், ஆங்கிலப் புத்தாண்டுக்கான நாள்காட்டி , கையேடுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 2018-ஆம் ஆண்டுக்கான புதிய நாள்காட்டி, கையேடுகளை வெளியிட்டார். 
இவை தேவஸ்தான புத்தக விற்பனை நிலையங்களில் விரைவில் விற்பனைக்கு வரும்.
பிரம்மோற்சவத்தின் முதல் நாள் இரவு, பெரியசேஷ வாகன சேவை நடைபெற்றது. 
பிரம்ம ரதம் முன் செல்ல, அதனை பின்தொடர்ந்து, யானைகள், பசு, குதிரை என விலங்குகள் அணிவகுத்து செல்ல, திருமலை ஜீயர்கள் குழாம் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை பாராயணம் செய்தபடி சென்றனர். 
இதற்கு பின்னால், பெரிய சேஷ வாகனத்தில் தன் உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். 
இதனை அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட்டனர்.
வாகன சேவையின் முன்னும், பின்னும் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com