ரிஷப ராசியில் பிறந்தவர்களா நீங்கள்? உங்களின் குணம் இதுதான்!

ரிஷப ராசி அன்பர்கள் பழகுவதற்கு இனிமையானவர்கள். அடிக்கடி மாறாமல் ஒரே விதமாக வாழவே பிரியப்படுவார்கள். பெரிய மாற்றங்களை விரும்பி வரவேற்க மாட்டார்கள்.
ரிஷப ராசியில் பிறந்தவர்களா நீங்கள்? உங்களின் குணம் இதுதான்!

ரிஷப ராசி அன்பர்கள் பழகுவதற்கு இனிமையானவர்கள். அடிக்கடி மாறாமல் ஒரே விதமாக வாழவே பிரியப்படுவார்கள். பெரிய மாற்றங்களை விரும்பி வரவேற்க மாட்டார்கள். இவர்கள் கற்பனைக் கோட்டை கட்டி அதில் வாழ்ந்து மகிழ மாட்டார்கள். வாழ்க்கைப் பிரச்னைகளைக் கண்டு தயங்கித் தள்ளிப் போடாமல் அப்போதைக்கு அப்போதே எதிர்நீச்சல் அடித்துச் சமாளிப்பர். 

இந்த ராசியில் பிறந்தவர்கள் சுமாரான உயரமாகவோ குள்ளமாகவோ இருப்பார்கள். அவர்களுடைய உடற்கட்டு நன்கு அமைந்திருக்கும். இந்த ராசியில் பிறந்த பெண்களுக்கு இடுப்பு அகன்றிருக்கும். அநேகமாக 30 வயதானாலும் ஆண் பெண்கள் இருவருக்குமே உடலில் சதை போட்டு இரட்டை நாடியாக இந்த ராசி நேயர்கள் விளங்குவார்கள். முகத்தில் சிக்கனமும், கண்களில் அன்பும் காணப்படும். அழகாகவும் சிரிப்பார்கள். 

சுக்கிரனுக்கு இது ஆட்சி வீடானதால் இந்த ராசிப் பெண்களுக்கு நுண்கலைகளில் அதிக ஈடுபாடு இருக்கும். மற்ற கிரக அமைப்புகளும் சிறப்பாக அமைந்திருந்தால் கலையுலகில் கொடிகட்டிப் பறப்பார்கள்.

வளைந்த உதடுகளும் ஆப்பிள் போன்ற கன்னங்களும் அகன்ற நெற்றியும் பலருக்கு அமைந்திருக்கும். தோல்விகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள். மனஉறுதியோடு தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி காணுவதில் துப்பாக இருப்பர். 

நண்பர்களிடம் சுமுகமாகப் பேசினாலும் ஓரளவு ரகசியத்தை மனதை விட்டுச் சொல்ல மாட்டார்கள். ரிஷபராசி நேயர்களில் சிலர் அதிகத் தர்மசிந்தனை கொண்டவர்கள். 

பிரதிப் பிரயோசனம் எதிர்பாராமல் உதவி செய்யும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சண்டையைக் கண்டால் அந்த இடத்திலேயே இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களுக்குக் கோபம் வந்தால் அடக்கிக்கொள்ள முடியாமல் சின்னா பின்னமாக்கிவிடத் தயங்க மாட்டார்கள். 

ரிஷபராசி நேயர்கள் திருமண விஷயத்தில் மிகவும் அக்கறை காட்டுவார்கள். திருமணமானதும் தம்பதிகள் ஒற்றுமையுடனும் அன்புடனும் பழகி மணவாழ்வை நன்றாக அனுபவிப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு கன்னியா ராசியிலோ, மகர ராசியிலோ பிறந்தவர்கள் ஜோடி சேர்ந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும். சிம்மம், கும்பம் ராசிகளில் பிறந்தவர்களைச் சேர்க்காமல் இருப்பது நல்லது. 

ரிஷப ராசிக்கு சுக்கிரன் சொந்த வீட்டுக்காரனானவும் சந்திரன் உச்சனாகவும் இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் மணவாழ்க்கையைச் சுவைப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். 

நீண்ட காலம் தம்பதியரிடையே கனிவும், நெருக்கமும் இணைந்து காணப்படும். இந்த நேயர்கள் வலுவான உடற்கட்டுப் பெற்றிருந்தாலும் உடல் பருமனும் அதிக எடையும் பெறும் வாய்ப்பு இவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருப்பதால் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அனுபவித்துச் சாப்பிடும் ரகத்தைச் சேர்ந்தவர்கள். அப்போதே செய்ததாகவும் இருக்கவேண்டும் இவர்களுக்கு. 

இந்த ராசிப் பெண்கள் தாங்கள் அழகாக உடை உடுத்த விரும்புவதைப் போல சமையலறையையும் சுத்தமாக வைத்திருப்பார்கள். சிலரிடம் வேலைகளும் நறுவிசும் நளினமும் கவர்ச்சியும் இருக்கும். பிறர் பார்த்து தம்மைப் பாராட்ட வேண்டும் என்ற நினைப்பு இவர்களுக்கு உள்ளத்துக்குள் இருக்கும். பிறர் சொல்வதை விட தனக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே எந்த விஷயத்தையும் செய்வார்கள். எதிலும் ஒரு நியதியை எதிர்பார்ப்பார்கள். 

இந்த ராசிக்கார்கள் வெள்ளை உடையைத்தான் விரும்பி அணிவார்கள். வண்ணத் துணியாக இருந்தாலும் தும்பைப் பூ மாதிரி சலவைத் துணியையே உடுத்துவார்கள். எந்தக் காரியத்தையும் திறம்பட செய்வதுடன் குறுகிய நேரத்திலும் செய்து முடிக்கும் ஆற்றலுள்ளவர்கள். தனக்கென ஒரு வழியை ஏற்படுத்தி அதன் வழியேதான் செல்வர். இளகிய மனமும், தாராளச் சிந்தனையும் உடையவர்கள் இவர்கள். 

விவசாயம், தோட்டவேலை, பூச்செடி வளர்ப்பு, கட்டிடக்கலை, ரியல் எஸ்டேட், ஆன்மிக சேவை முதலியவற்றில் ஈடுபடுவார்கள். பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்களை வைத்து நடத்துபவர்களில் பெரும்பாலோர் இந்த ராசிக்காரர்களாவே இருப்பார்கள். 

அரசியல்வாதியிலும் இவர்களைப் பார்க்கலாம். ராசிக்குச் சொந்தக்காரனான சுக்கிரன் ஜாதகத்தில் நல்ல அம்சத்தில் இருந்தால் சங்கீதம், நாட்டியம், உடை தயாரித்தல் அழகுக் கலைகள் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com