காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி தொடர்-3 

தென்புறத் தூணில், மேற்கு நோக்கி வலக்காலை ஊன்றி இன்பச் சாயலோடு, கூந்தலை வாரி முடித்து, இடக்கையில் ரசக்கண்ணாடி தாங்கி, வலக்கை விரலை நெற்றி முன் நிறுத்தி,
காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி தொடர்-3 

தென்புறத் தூணில், மேற்கு நோக்கி வலக்காலை ஊன்றி இன்பச் சாயலோடு, கூந்தலை வாரி முடித்து, இடக்கையில் ரசக்கண்ணாடி தாங்கி, வலக்கை விரலை நெற்றி முன் நிறுத்தி, திலகம் இட்டுக் கொள்வது போலமைப்புடன் காட்சியாயிருந்தது. வடபுறத்தில் கிழக்கு நோக்கி, ஊர்த்துவ தாண்டவர் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

இந்தக் கம்பீரத்தில் சினமும் பெருமிதமும் சேர்ந்த முகமாக காணக் கிடைத்தன. பத்து கைகளிலும் முறுக்கேறிய நரம்புகள். இடக்காலை அழுத்தமான நிலையில் ஊன்றி, வலக்காலை மேலாக தூக்கி ஆடும் ஊர்த்துவ நடனம் அற்புதமாக இருந்தது. பத்துக் கைகளிலும் பத்து விதமான திருக்கருவிகள். ஒரு கையில் செங்கோல், ஒரு கையில் நந்திக்கொடி, தாண்டவத்திற்குத் தகுந்தவாறு மத்தளம் வாசிக்கும் விஷ்ணு, தாளம் தட்டும் நான்முகன் இவையத்தனையும் ஒருகல்லில் கண்டோம்.

"ஆக்கி, அழிவித்து, காத்தது நானே!" என்ற தத்துவத்தையும், நல்லோரைக் காக்க செங்கோல் கொண்டும், ஊழிக்காலத்தில் அனைத்தும் என்பால் ஒடுங்கும் எனக்கூறுகின்ற தத்துவத்தைக் கூறும் சிலை இது.

வட வரிசையில் ஊர்த்துவ தாண்டவருக்கு அடுத்ததாக, மகாதாண்டவர் சிலை இருக்கிறது. இவர் முகத்தில் பெருமிதமான உணர்வு. இவர் கிரேக்கத்தில் எழிலான கைகள், வீரக்கழல்கள், ஒரு கையில் உடுக்கை, மற்றொரு கையில் செங்கோலுடன் கதையும் கொண்டு, கோபக்கணல் தெரிக்கும் நிலையுடன் இருப்பதைக் கண்டோம்.

மகாதாண்டவருக்கு அடுத்த சிற்பமான ரதியின் சிற்பத்தைப் பார்த்தோம். வாரி முடித்தக் கூந்தல், கூரிய முனைமூக்கு, பிறைபோல நெற்றி, ஒடுங்கிய இடை, திரட்சியான அ(முக)..ம், கவர்ந்திழுக்கும் காந்தக் கண்கள், புன்னகை பூசிய இதழ், அழகூட்டிய அணிகலன்கள், அன்னத்திலமர்ந்த மாட்சி, அன்ன முதுகில் மடக்கிய வலக்காலுடன், ஊன்றிய காலுடன், கயிற்றைக் கையில் பிடித்திருக்கும் கவின், தோள் மீது அமர்ந்திருக்கும் கிளிகள், கிளியும் பேசுவது போல, இருக்கும் அற்புதத்தைக் கண்டோம்.

ரதியின் சிலையை அடுத்திருந்த வீரபத்திரர் சிலை இருந்தன. நாட்டுப்புறத்திலுள்ள மக்கள் இவரை அக்னி மாடன் என்று கூறுவர். இவர் கையில் சுடர் விட்டு ஒளிர்ந்த தீப்பிழம்பு, கணத்தில் சினம் பொங்கிய முகம், நரம்புகள் புடைத்து வீங்கிய கையில் சூலம் தாங்கி, பார்க்கப் பார்க்க பயங்கரத் தோற்றத்தோடு நிற்கிறார்.

தென் வரிசையில் மேற்கில், வீரபுத்திரர் இருந்தார். இவர் அரக்கனின் கழுத்தில் சூலத்தை அழுத்தி ஊனியிருந்தார். அரக்கனின் திரேகத்தின் மீது இவரது கால். முகத்தில் சினம். அந்த சினத்தால் மீசை துடித்த நிலை. உதட்டிலும் சினம். கைகளில் கருவிகள். வீரப்பல் அகோரத்துடன். அடுத்து, ரதியின் சிற்பத்திற்கு எதிரில், மன்மதன். இவன் முகத்திலோ இன்பச் சாயல். அழகான ஆடை. ஒளிவீசச் செய்யும் அணிகலன்கள். கரும்பிலான வில். நீண்டு வளர்ந்த மலர் அம்பு. கட்டுமஸ்தான உடல்வாகு. பெண்டீர்க்கு கட்டழகு. 

அடுத்தது, காணம் மீண்டும் வேணுவனகோபாலன். இதழில் இனிமை. நாதத்தை ரசிக்கும் பசு. இதோடு நாகமும் இசைக்கு மயங்குவது போல. இதோடு அரம்பையர்கள் ஆட்டம். வேய்ங்குழல் மீது பதிந்திருக்கும் விரல்கள். அடுத்து, ஊர்த்துவ தாண்டவருக்கு எதிரில் காளியின் நடனம். இவள் காலைத் தூக்கி ஆடாவிட்டாலும், ஆட்டம் ஆடும் அழகு ஒளிக்கற்றைகள். சிறந்த முகம். வீரப்பல். 

விரிசடை பாரதியின்...........
"வெடுபடு அண்டத்து இடிபலதாளம் போட வெறும்
வெளியில் இரத்தக்களியோடு பூதம் பாட பாட்டின்
அடிபடும் பொருள் உன் அடிபடும் ஒலியிற் கூட
களித்தாடும் கங்காளி சாமுண்டி அன்னை அன்னை
ஆடும் கூத்தை நாடச் செய்தார் என்னை"

இப்பாட்டிற்கு இலக்கண நிலையில் நேர்த்தி........

இச்சிலைகள் சிந்தையை மகிழ்விப்பதற்காக உருவாக்கியதென நிறையவர் நினைக்கினர். மேலும் சிலர், ஆழ்ந்த சிந்தையைத் தூண்டுவதற்காக படைக்கப்பட்டதென அறிவார்கள்.

சிலை சொல்லும் சிந்தனைக்கான ஆதாரம்

"ஆணவம் கூடாது" என்பதைக் காட்டி நடனப் போட்டியில் காளி தோற்றது, 
வாழ்க்கையில் நாத்திகத்தைப் பேசி தெய்வத்தை இழக்கக் கூடாது.
இகழ்ந்தால் நாக்கறுப்பேன் என்பதைக் காட்டும் வீரபத்திரர்.

காம உணர்வும் சிற்றின்பமும் மட்டுமே வாழ்க்கையல்ல, பேரின்பமருளும் பெருமான் உள்ளேயுள்ளார் என்பதைக் காட்டும் காமன் ரதி சிலைகள். வாழும் வாழ்க்கை இசையைப் போல இனிக்க, இறைவன் சந்நிதியில் நாகமும் பசுவும் பகைமை நீங்கப் பெறும் என்பதைக் காட்டும் வேணுவனபாலனின் சிலை. இறைவனை வணங்கச் செல்பவர்கள், இனி ஆலயத்திலிருக்கும் சிலை உணர்த்தும் நிலையையும் தெரிந்து கொள்ள வேண்டும். சிலை கூறும் இச்சிந்தனையைத் தெரிந்துணர்ந்த பின், அடுத்து நந்தி மண்டபத்துக்கு நடந்தோம். 

நந்தி மண்டபம்

நந்தி மண்டபத்திலே நந்தியார் பெருமையான மிடுக்குடன் காட்சியளித்தார் நந்தி பெருமான். நந்தியார் இருக்கும் இவர் மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களிலும் கற்சிலைக் காவியங்கள் வடித்திருக்கிறார்கள். இரண்டு தூண்களில் இரண்டு அழகான பெண்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சுமார் ஆறு அடி உயரமுள்ள இச்சிலைப் பெண்களை பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றியது.

வசீகர முகம், இனித்த புண்ணை, சுண்டியிழுக்கும் கயல்கண்கள், மெலிந்து மற்றும் அழகான இடை, மெலிந்த கை, குச்சியான விரல்கள், அதில் கொஞ்சம் வளர்ந்த நகங்கள், ஆடைகளின் மடிப்புகள், முழங்காலின் முட்டி, பாதங்களிலுள்ள பாடங்கள், கால் விரலில் மெட்டி, வாரி முடித்த கொண்டை, கூந்தல் வடிந்த காது, இச்சிலையைத்தான் தமிழ் அணங்கின் சிலைகள் என்று மக்கள் கூறுகிறார்கள். 

வெண்கவரி வீசிக் கொண்டிருக்கும் இந்த அழகிகள் காசி விசுவநாதருக்கு வெண்கவரி வீசும் புனிதத் தொண்டைச் செய்கிறார்கள். ஆகவேதான், இப்பெண்களின் கையில் வெண்கவரி உள்ளது.

மணி மண்டபத்தில் உள்ள சிற்பங்கள்

இச்சிந்தனைச் சிலைகளைக் கண்டுவிட்ட நாம், அடுத்ததாக மணிமண்டபம் சென்றோம். இந்த மணிமண்டபத்திலும் எத்தனை எத்தனைச் சிற்பங்கள்?'........பெரிய புராணத்தை சேக்கிழார் பெருமான் தெய்வத் திருப்பாடல்களாக உலகிற்குத் தந்தார். இங்கு, பராக்கிரம பாண்டியன் அந்தப் பாடல்களைச் சிற்பங்களாக்கி மணிமண்டபத்தில் அமைத்திருந்தான்.

பெரிய புராணப் பாடலைக் கேட்கும்போது, நமக்கு எவ்வளவு இயல்பு ஏற்படுதோ, அதேபோல பெரியபுராண கற்சிற்பங்கள் நம்மை மெய்சிலிர்க்கச் செய்தன. 

கணையால் தன் கண்ணை பெயர்த்தெடுக்கும் கண்ணப்பநாயனார், உயிரைக் கொண்டு போக வந்த காதலனுக்கு அஞ்சி சிவலிங்கத்தை தழுவும் மார்க்கண்டேயரின் பினைப்புருவம். சினத்தோடு சீறியெழும் சிவபெருமான். தியானத்திலிருக்கும் திருமூலர். திருவிடைமருதூரில் தேவி பசுவாக வந்து, சிவபூசை செய்யும் கீர்த்தி.

மயிலாப்பூரில் மயிலாக வந்து தேவி மகாதேவனை வழிபடும் மார்பு. சிறுத்தொண்டர் தன் குழந்தையை வாள் கொண்டு புன்னகையோடு அறுத்துச் படையலிடும் காட்சி. இதோடு, இவர் மனைவி திருவெண்காட்டு நங்கைக் குழந்தையை பிடித்துக் கொண்ட மாண்பு. காரைக்கால் அம்மையாரின் தவக்கோலத்தில். இவ்வளவும் இம்மணிமண்டபத்தில் கண்டோம். பக்தி பெருக்கால் கண்ணீர் அருவியாய் நின்றோம். மேலும், "அழலவிர் சடையானின் அன்பர் கடந்து அடாதன, வந்தபோது பரசுவான கருவியால் எறிந்து அடியார்களின் பகைமை அழிக்கும் பண்புடைய எறிபத்தர்". 

வானளாவிய புகழ்ச்சோழரின் பெருமை

இச்சிற்பத்தின் கீழே "பரசிப்பர நாயகன்" என்ற வரிகள் பொறித்து வைத்துள்ளான் பராக்கிரம பாண்டியன். 'சிவன் சொத்து குலநாசம்'  போல, சிவத்துரோகம் தானே செய்தாலும், தன்னையும் தண்டித்தல் வேண்டும் என்று பராக்கிரம பாண்டியன் இச்சிற்பங்களின் மூலம் குறிப்பால் உணர்த்துகிறார் பராக்கிரம பாண்டியன். திருவானைக்காவல் எனும் தலத்தில் "சிலந்திப் பூச்சியும் யானையும் இறைவனை வழிபட்டமையால், மறுபிறப்பில் கோட்செங்கட் சோழன் எனும் மன்னனாகப் பிறந்தான்."

இந்தக் காட்சியையும் கல்லில் காவியமாகச் செதுக்கிவிட்டிருந்தான் பராக்கிரம பாண்டியன். இராவணன் கயிலையை பெயர்த்தெடுக்க முயன்று, இறைவனால் தண்டிக்கப்பட்ட காட்சியும் கண்டோம். நெஞ்சு நிறைந்த அன்பால், குங்கிலியக் கலயனார் தன் கழுத்தில் கயிற்றைக் கட்டி சிவலிங்கத் திருவுருவை நேர் நிமிரச் செய்த மாண்பும் இங்கே காட்சியாய் இருந்தன.

தீஞ்சொல்லில் வடிக்கப்பட்ட பெரிய புராணத்திற்குக் கல்லிலே வடிக்கப்பட்டதைக் காணும்போது, பெரிய புராணத்தில் சேக்கிழார்க்கு இருந்த ஈடுபாடு போல பராக்கிரம பாண்டியனுக்கும் இருந்திருக்கிறது என்பதை இக்கல்வி வகைகள் மூலம் அறியச் செய்திருக்கிறான். இத்தகைய சிற்பங்களை நாம் பார்த்துக் கொண்ட பின்பு, இந்த மணிமண்டபத்தை விட்டு அடுத்து மகா மண்டபத்திற்குச் செல்ல வேண்டும்.

தொடரும்....

- கோவை கு. கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com