காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி தொடர்-4

காசிவிசுவநாத சுவாமி மகாமண்டபத்துள் நுழைந்தபோது தென் வரிசையில் யானை முகத்துடன் கடவுளார் எழிலார்ந்த அமைப்புடன் நம்மைக் கவர்ந்திழுத்தார்.
காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி தொடர்-4

காசிவிசுவநாத சுவாமி மகாமண்டபத்துள் நுழைந்தபோது தென் வரிசையில் யானை முகத்துடன் கடவுளார் எழிலார்ந்த அமைப்புடன் நம்மைக் கவர்ந்திழுத்தார்.

எக்காலமும் அருளும் முக்கண்ணன் மகனை, உலக முதல்வனை, தலைக்குக் குட்டு வைத்து தோப்புக்கரணமிட்டு வணங்கிக் கொள்ளச் செய்தது. பெரிய உருவப் பெரிய வயிற்றோடுடைய இவரை வணங்கிக் கொண்ட பின் கருவறை நோக்கிச் செல்ல வேண்டும். மகாமண்டபத்தைக் கடந்து உள்ளுக்குள்ளே புக, வடக்கேயுள்ள காசியிலிருப்பதைப் போன்ற கருவறையை அகலமாக அமைந்திருந்தன சுவாமியின் கருவறை.

லிங்கத்திருமேனியை சுற்றி வந்து வணங்கும் நிலைப்பாட்டுடன் கருவறையை அமைத்திருந்தான் பராக்கிரம பாண்டியன். காசியில் உள்ள லிங்கத்தைப் போன்று காட்சியருளும் இப்பெருமானை "ரிக்" வேதப் பெருமான் என மக்கள் போற்றப்படுகிறார்கள்.

கருவறையிலிருக்கும் சிவலிங்கத்தை மன்னன் கோட்டையிலிருந்தவாறு நோக்கும் படியாக தன் கோட்டையை அமைத்திருந்தான் மன்னன். இந்தக் கோட்டை, சுவாமி சந்நிதியிருந்து ஒரு கி.மி. தொலைவுடன் உயர்ந்த இடத்தில் இருக்கின்றன. மேடான (மேட்டுத் தெருவில்)  இந்த இடத்திலிருந்து இன்றும்கூட காசிவிசுவநாதரை பார்க்க முடியும்.

கருவறையினுள் கூர்மையாக நம் விழிகளைச் செலுத்தினால், காசிவிசுவநாதர் கருணை வடிவமாக சிவலிங்கத் திருவுருவோடு அருட்காட்சி தருவது தெரிகிறது. நாடி வரும் மக்களை நானிருந்து உங்களை அரவணைக்கிறேன் என இந்தக் காட்சி தரிசனம் உணர்த்துகிறது. விசுவநாத ஈசனை, தலபுராணத்தில் ஒரு கவிஞர் பாடுகிறார்,..........

விசுவனே விசுவ நாதன்
       விசுவேசன், உலகநாதன்
பசுபதி,சிவன்,மாயோன்
       பராபரன, முக்கட் பெம்மான்
சிசுவரம் தருவோன், நம்பன்
       சிவை மணாளன், ஏற்றோன்
அசுதையார் நீலகண்டன்
      அநாதி தென்காசி நாதன். எனப் போற்றியுள்ளார். 

பேராயிரம் உடைய பெம்மானே! அடியார்களுக்கு நிம்மதியை வாரித்தரும் அண்ணலே! தீரா நோயை தீர்த்தொழிக்கும் வல்லானே! வேண்டுவோர்க்கு வேண்டுவன ஈய்ந்துமகிழும் வித்தகனே! எனப் பாடியுள்ளார். ஆக, இவரைக் கண்களால் தழுவி, கைகளால் தொழுதேத்தி, மனதார மகிழ்ந்து வணங்கிக் கொள்ளுதல் பேறு அருளாகும். இவ்விதம் வணங்கும்போது.....,நம் எண்ணத்தில்......, உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன் கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனிமையும், 

குற்றால மர்ந்துரையுங் கூத்தா உன் குரலை கழற்கே குற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே. என மணிவாசகரின் மணிமொழிகள் நினைவுக்கு வராது போகாது. மணிவாசகர் கூறியதுபோல், "கசிந்துருகினால், காசிவிசுவநாதன் கண்ணீரை ஒழித்து நல் வரமருளி மண்ணில் நல்ல வண்ணம் வாழ வைப்பான். இப்பெருமானின்  வணக்கத்திற்கு பிறகு கிடைக்கப் பெறும் வெள்ளிய விபூதியை, நம் நெற்றிக்கு அளிக்க வேண்டும். அடுத்திருந்த தென்வரிசையில் இருந்த "சந்திர சேகரை" மனமுருக பிரார்த்தித்து தொழுது கொண்டு நகரலாம்.

மேலும், நாம் திரும்பிய திசையில் நடக்கும் பகுதியில், தெற்கு நோக்கி நின்றாடும் ஆடவல்லானான நடராஜப் பெருமானை வணங்கிக் கொள்ள முடிகிறது. இவனின் ஆடல்நளின அழகைக் கண்டு மெய்மறந்து, மெய்சிலிர்த்துப் போனோம். சிறிது தாமதித்தே நின்று வணங்கிய பின்தான் நகரத் தோன்றும். அடுத்துள்ள, காசிவிசுவநாதனே கதியென இருந்து, அவனுக்கு ஆலயமைத்து, நம் வணக்கத்தை இவனிடம் வந்து கொடுக்க நல்கிய, அச்சிந்தனையாளன் பராக்கிரம பாண்டியன் சிலைக்கு, சிரம் கவிழ்ந்த வணக்கத்தைத்தான் நம்மால் கொடுக்க முடிகிறது.

பிராகாரத்தில் வலம் செய்ய ஆரம்பித்தால். சுரதேவர் காட்சி கிடைக்கும். இவரைக் கைதொழுதல் நலம் பெறுதல் உறுதி. இயற்கைக்கு மாறாக, மூன்று கால்களுடன் மூன்று கைகளுடன், மற்ற எல்லா ஆலயத்துள்ளதைவிட பெரிய திருமேனியாய் காட்சி தந்து கொண்டிருக்கிறார் சுரதேவர். முன்பு இத்தலத்திலுள்ள மக்களிடைய மிகுதியான காச்சல் நோய் தாக்கமானதாம். இவ்வாலத்திலிருக்கும் இச்சுரதேவருக்கு சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் அரைத்து அவரை முழுகச் செய்தார்களாம்.

இப்படிச் செய்தபோது மக்களின் காச்சல் குணமாகிப் போயிருக்கிறது. அடுத்து, திருமறை தந்த நால்வருடன் அறுபத்து மூவர்களின் திருமேனிகளும் பிராகாரத்தில் இருக்கிறது, ஒவ்வொருவரையும் முன்னின்று வணங்கி நீங்கி வணங்கிச் செல்லும் அமைப்பில் இருந்தது. தென்முகக் கடவுளாய் நம் ஆலமர் செல்வர் தெட்சணாமூர்த்தி அடுத்து இருக்கிறார்.

கல்லாளின் படையமர்ந்து நான்மறை
இறக்கம் முதற்கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வர்க்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப்பலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்துகாட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத்தொடக்கை வெல்வாம்.

என்ற பாடலின் நூல் கையிலிருந்தால் எடுத்து வாசித்து வணங்கிக் கொள்ளுங்கள் பலன் உண்டு. கன்னிமூலையில் கணபதிபெருமான் காட்சி தர, "விடுவோமா?" உடனே காதைப் பிடித்துத்திருகி தோப்புக்கரணமிடும் எண்ணம் முனைந்தது. பெரிய வடிவம் தாங்கி இருக்கும் கன்னி கணபதியை வணங்கி நகர்ந்து, வலம் செய்யும்படி, மேற்கு பிரகாரம் செல்லும்போது, செந்தருவாகிய மகாலட்சுமி கிழக்குப் பார்த்த வண்ணம் வருவோர்க்கு அருளை வாரித் தரும் வண்ணமிருந்தாள்.

பெயருக்கேற்றாற்ப் போலதான் மகாலட்சுமியின் அமைப்பும் இருந்தன. அவளிடம் நாம் வேண்டிக் கொண்டதெல்லாம் "ஒழுக்க தனம் தந்தருள்வாய்" என்றுதான் வேண்டினோம். இவளை வணங்கி நகர்ந்தால் இவளின் சந்நிதிக்கு அடுத்து, முருகப்பெருமான் இருக்கிறார். கருணை முகங்கள். (எவ்வாலயத்தில் தான் இவர் கருணை இல்லாதிருந்தார். இவரிருந்த எவ்விடத்திலும் கருணை முகத்தைத் தானே கண்டு வந்திருக்கிறோம் நாம்.) அதுபோலத்தான் இங்கும் கருணை முகத்தைக் காணும்படி இருந்தார்.

இவரின் முகங்கள் ஆறிலும், அருட்கைகள் பன்னிரண்டையும் கொண்டு கருணை வெள்ளமாய், இருதேவியருடன் உடனிருந்து, மயில்மீதமர்ந்த நிலையில் அற்புதத் திருவுருவாய் காணக்கிடைத்தார். இதனையடுத்து, "காரி" என்றும் சனி பகவான் தனி சந்நிதி கொண்டு தெற்குப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்து வருவோர்க்கு அருள 
காத்திருந்தார்.

உலகெலாம் புரந்த ஒப்பற்ற ஒளிர்மேனியாள் "அம்மையே!" அழைக்கப்பெற்ற காரைக்காலம்மையார், ஆடவல்லாரின் திருநடனத்தைக் கண்டு களிக்கும் திருக்கோலத்தை இங்கு வடிமைத்திருக்கின்றதைக் கண்டு, இவ்வம்மை முன்பு கண்ணீர் உகுத்து, அம்மையின் பக்திப்பாங்குகளை நினைந்து நினைந்து உருகி, பவ்யபயத்துடன் வணங்கிக் கொள்ளச் செய்தாள்.

வடக்குப் பிரகாரம் சென்றால், வியாக்கரபாதரும், பதஞ்சலியும் நடராஜரின் ஆட்டத்தைக் கண்டுகளித்த வண்ணம் உள்ள சிற்பமேனி அமைப்புகளைக் கண்டு, சிலிர்த்துப் போவோம். உரோமக்கால்கள் குத்திடும்படியாவோம். அடுத்ததாக சண்டிகேசுவர் இருந்தார். இவரை வணங்கும் முறையுடன் வழிபட்டு வணங்கி, நம்மிடம் உள்ளன, இல்லாதன, இவையினை அவரிடம் ஒப்புவித்து வணங்கித் திரும்ப வேண்டும்.

அடுத்துக் காசிக்கிணறு என்ற தீர்த்தக் கிணறு ஒன்றும் இருக்கிறது. பராக்கிரம பாண்டியனே உருவாக்கி முனைந்தானென, கூறிவர். இக்காசிக் கிணற்றின் மேல் பாகத்தை,  மிகப் பெரியதான கற்தூண்கள் இரண்டு தாங்கி நிற்கின்றன. இக்காசிக் கிணற்றில் தீர்த்தம் எப்போதும் சுரந்து கொண்டே இருக்கிறதாம். கங்கைக்கும் இக்கிணற்றுக்கும் தொடர்பு இருக்கும் வகையில், பராக்கிரம பாண்டியன் இக்கிணற்றை உருவாக்கினான் என்று அறிஞர்கள் கூறியுள்ள செய்தி உண்டு.

இக்காசிக் கிணற்றுத் தீர்த்த்தை வணங்கித் திரும்பினால், இத்தலத்தின் தலவிருட்சமாக குறும்பலா விருட்சத்தைக் காணலாம், வணங்கலாம். விசுவநாதர் திருக்கோயிலுக்கு, செண்பகமரமும், குறும்பலாவும் தலவிருட்சங்களாக இருந்தன என்று தலபுராணத்தில் சொல்கிறது. திருஞான சம்பந்தப் பெருமான் குற்றாலத்திற்கு எழுந்திருந்த சமயத்தில் அக்கோயிலின் தலவிருட்சமாக குறும்பலாவையும் பாடியிருக்கிறார். அந்தப் பாடல் இக்குறும்பலாவிற்கும் பொருந்தும்.

குறும்பலா பதிகத்தில் உள்ள திருப்பாடல் ஒன்றில்.....

திருந்த மதிசூடி தெண்ணீர் சடைகரந்து தேவிபாகம்
பொருந்தி பொருந்தாத வேடத்தால் காடு
உறைதல் புரிந்த செல்வர்
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை
இன வண்டு யாழ்செய்
குறுந்த மணம் நாறும் குன்று இடம் சூழ்
தண் சாரல் குறும்பா வேண்டும். என்று பாடினார்.

தொடரும்....

- கோவை கு. கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com