மதுரை அரசாளும் மீனாட்சிக்குத் திருக்கல்யாண வைபவம்..!

மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் தான் நம் நினைவிற்கு வருகின்றார். அவரையும் தாண்டி சற்று ஆழ்ந்து..
மதுரை அரசாளும் மீனாட்சிக்குத் திருக்கல்யாண வைபவம்..!

மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் தான் நம் நினைவிற்கு வருகின்றார். அவரையும் தாண்டி சற்று ஆழ்ந்து பார்த்தால் மதுரை மாநகர் பல விதங்களில் சிறப்பு பெற்று விளங்குகின்றது. மதுரை மாநகரின் கொண்டாட்டங்கள் என்று பார்த்தால் சித்திரைத் திருவிழா, அழகர் ஆற்றில் இறங்குதல், மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம் எனப் பிரசித்தம். 

தற்போது  கூடுவாஞ்சேரியில் பங்குனி உத்திரம் அன்று திருக்கல்யாணம் கண்டோம். இன்னும் அந்த அருள் நிலை மனதுள் ஊஞ்சலாடுகிறது. மக்கள் கூட்டத்தில் சொல்லவே முடியவில்லை. இங்கேயே இப்படி கூட்டம் என்றால் மதுரை அரசாளும் மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம் என்றால் கூட்டம் எப்படி இருக்கும்? என்று நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. சித்திரைத் திருவிழா பற்றிய செய்திகளை இங்கே பேச உள்ளோம் 

சித்திரைத் திருவிழா தமிழ்நாட்டில் தமிழ் வருடபிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். சித்திரை திருவிழா பல ஊர்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது, குறிப்பாக மதுரை, மானாமதுரை, பரமக்குடி, வீரபாண்டி எனச் சொல்லலாம். திருநெல்வேலி என்றால் உடனே அல்வா நினைவிற்கு வருவது போல், சித்திரைத் திருவிழா என்றாலே மதுரை தான். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் புனிதனாக கண்டிப்பாக இந்த விழாவினை பார்க்க வேண்டும்.

மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த அற்புத திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடையதாக மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. 

பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.

இந்த சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் வருடாந்திர பிரம்மோத்ஸவம் மிக முக்கியமான விழாவாகும். மீனாட்சி பட்டாபிஷேகமும், மீனாட்சி திருக்கல்யாணமும் இவ்விழாவில் நடக்கின்றன. மேலும் இந்த விழா திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் அழகர் கோயிலையும் சம்பந்தப்படுத்துகிறது. இதனால் இவ்விழா நடக்கும் மாதத்தில் மதுரையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் விழாக்கோலம் பூணுவது இயற்கை.

இந்த அழகர் அழைப்பிற்குப் பின் ஒரு சுவையான கதை உண்டு. அழகர் மீனாட்சியின் சகோதரர் ஆவார். அவர் மீனாட்சியின் திருமணத்தை நடத்திவைக்க அழகர் கோயிலில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். ஆனால் தான் வருவதற்கு முன்பே திருமணம் முடிந்ததைக் கேள்விப்படுகிறார். ஆற்றில் கூட கால் படாமல் திரும்பி வருகிறார். தற்போதைக்குக் கூட அந்தச் சடங்குகள் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு நடக்கின்றன. அழகர் தற்போது ஆற்றில் தன் காலைப் பதித்துவிட்டுச் செல்லும் அந்தக் காட்சி தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 

அந்த நாளில் நடைபெறும் காளைகள்/பசுக்கள் சந்தை மிகவும் புகழ்பெற்றது. மகிழ்வில் உண்டான ஆரவாரமும், உற்சாகத்தில் உண்டான களிப்பும் நிறைந்த அந்த மனநிலை நகர மக்களுக்கு அன்று முழுதும் இருக்கிறது. மக்கள் கூட்டம் பெருமளவில் இங்குக் கூடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். அன்றைய நாளில் திருவிழாவோடு ஒரு வியாபார சந்தையும் நடப்பது வாடிக்கையாகி விட்டது. மேலும் இந்த விழாவின் போது மதுரை சேதுபதி பள்ளியில் நடைபெறும் திருக்கல்யாண விருந்தில் கலந்து கொண்டு சேவை செய்யவும் அனைவரிடம் விண்ணப்பம் வைக்கின்றோம்.

சித்திரைப் பெருவிழா 17.04,2018 முதல் 30.04.2018 வரை நடைபெறுகிறது. 

நிகழ்ச்சி நிரல்: 

17.04.18 செவ்வாய் - கொடியேற்றம்

18.04.18 புதன் - இரவு 7.00 மணி 4 மாசி வீதி உலா - கற்பக விருட்சம் (சிம்மம்)

19.04.18 வியாழன் - புதன் - இரவு 7.00 மணி 4 மாசி வீதி உலா - பூதம் (அன்னம் வாகனம்)

20.04.18 வெள்ளி - இரவு 7.00 மணி 4 மாசி வீதி உலா - கைலாச பர்வதம் (காமதேனு வாகனம்)

21.04.18 சனி - மாலை 6,00 மணி தங்க பல்லக்கு - தெற்கு வாசல், சின்னக்கடைதெரு, சித்திரை வீதி

22.04.18 ஞாயிறு - இரவு 7.00 மணி தங்கு குதிரை வடக்கு மாசி, கீழமாசி, அம்மன் சன்னதி 

23.04.18 திங்கள் - இரவு 7.30 மணி 4 மாசி வீதி உலா - தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம் வாகனம்

24.04.18 செவ்வாய்  - இரவு 7.30 மணி 4 மாசி வீதி உலா - நந்திஅகசுவரர், யாளி வாகனம்

25.04.18 புதன் - இரவு 9.00 மணி 4 மாசி வீதி உலா - வெள்ளி சிம்மாசனம், பட்டாபிஷேகம்

26.04.18 வியாழன் - இரவு 7.00 மணி 4 மாசி வீதி உலா - திக் விஜயம்

27.04.18 வெள்ளி - காலை 9.05 - 9.29 மணி ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்

28.04.18 சனி - காலை 6.00 மணி திருத்தேர் 

29.04.18 ஞாயிறு - இரவு 7.00 மணி 4 மாசி வீதி உலா - வெள்ளி ரிஷப வாகனம்

30.04.18 திங்கள் - காலை 6.00 மணி ஸ்ரீ கள்ளழகர் வைகையாற்றில் இறங்குதல் 
 

- தேனி ராகேஷ், TUT 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com