நாளை மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக கொடியேற்றம் புதன்கிழமை (ஏப். 18) காலை நடைபெறுகிறது. 

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக கொடியேற்றம் புதன்கிழமை (ஏப். 18) காலை நடைபெறுகிறது. 
மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்துக்கு 11,500 பேரை சிறப்புத் தரிசனத்துக்கு அனுமதிக்கக் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. புதன்கிழமையே முன்பதிவு தொடங்குகிறது.
மதுரையில் சித்திரைத் திருவிழா மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் அழகர்மலை கள்ளழகர் கோயில் ஆகியவற்றை இணைத்து நடத்தப்படுகிறது. தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கொட்டகை முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் புதன்கிழமை காலை 10.05 மணியிலிருந்து 10.29 மணிக்குள் மீன லக்னத்தில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 25-ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், 27-ம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. கோயிலில் மேற்கு, வடக்காடி வீதிகள் சந்திக்கும் இடத்தில் உள்ள திருக்கல்யாண மேடையில் நடைபெறும் திருக்கல்யாணத்தை நேரில் பக்தர்கள் காணுவதற்கு இலவச அனுமதி மற்றும் கட்டண அனுமதி வழங்கப்படவுள்ளன.
திருக்கல்யாணத்துக்கு வரும் பக்தர்களில் 6 ஆயிரம் பேர் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளனர். 
கட்டண அடிப்படையில் திருக்கல்யாண டிக்கெட்டுகள் ரூ. 500 மற்றும் ரூ. 200 என்ற விலையில் விநியோகிக்கப்படவுள்ளன. மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா மந்திரில் புதன்கிழமை (ஏப். 18) முதல் கட்டண டிக்கெட்டுகள் விற்பனை முன்பதிவு தொடங்குவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருக்கல்யாணத்துக்கு ரூ. 500 டிக்கெட் பெற்ற சுமார் 2300 பேர் மேற்கு கோபுர வாசல் வழியாகவும், ரூ. 200 டிக்கெட் பெற்ற சுமார் 3200 பேர் வடக்குக் கோபுர வாசல் வழியாகவும் அனுமதிக்கப்படவுள்ளனர். திருக்கல்யாணத்தை நேரடியாக பார்ப்பதற்காக சுமார் 11,500 பேர் வரை அனுமதிக்கப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
திருக்கல்யாணத்துக்கு கடந்த ஆண்டு அனுமதித்த பக்தர்கள் அளவே நடப்பாண்டிலும் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருக்கல்யாணத்தன்று கிழக்கு கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், திருக்கல்யாண நிகழ்ச்சிக்குப் பின்னர் வழக்கம்போல அம்மன் சன்னதி வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோயில் நிர்வாகிகள் கூறினர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையர் என்.நடராஜன் ஆகியோர் செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com